திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 25 மே 2023 (10:28 IST)

சாத்தான் கோவில்: பைபிள் பக்கங்களை கிழிக்கும், சிலுவையை தலைகீழாக அணியும் இவர்கள் யார்?

சாத்தானை பின்பற்றும் சாத்தானியவாதிகள் ஒன்றுகூடும் மிகப்பெரிய கூட்டமாக இது இருக்கலாம். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மேரியட் ஹோட்டலில் தான் இந்தக் கூட்டம் தொடங்கவுள்ளது.
 
இந்த விழாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மெழுகுவர்த்தி எரியும் அறைக்குள் ஒளிரும் நியான் விளக்குகள், விழா பங்கேற்பாளர்களை சிறு தேவாலயத்திற்குள் வரவேற்கின்றன. அந்த தேவாலயத்தினுடைய நுழைவாயிலின் ஒருபுறம் உயர்ந்த பலி பீடம் அமைக்கப்பட்டிருக்க, அதன் முன், தரையில் நட்சத்திரக் குறியீடு (pentagram) வெள்ளை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
 
இங்கு நடத்தப்படும் சடங்குகள் ஞானஸ்நானம் பெறுவதற்கானவை அல்ல என்பதுடன், இதில் பங்கேற்பவர்கள் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது கடைபிடித்த மதச் சடங்குகளை நிராகரிப்பவர்களாகவும் உள்ளனர்.
 
இந்தச் சடங்குகளைச் செய்பவர்கள் தரையைத் தொடும் அளவுக்கு நீளமான ஆடையையும், கருப்பு நிற முகமூடியையும் அணிந்துள்ளனர். அவர்களின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டுள்ளன. பின்னர் அது விடுதலையின் அடையாளமாக கழற்றி வீசப்படுகிறது.
 
அத்துடன் கிறிஸ்தவர்களின் ஞானஸ்நான சடங்கை ரத்து செய்வதன் அடையாளமாக, பைபிளின் சில பக்கங்களும் இந்தச் சடங்கில் கிழிக்கப்படுகின்றன.
இந்த விழாவில் பங்கேற்றுள்ளவர்களில் பெயர் கூற விரும்பாத ஒருவர், அவரது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், தன்னை அவர்களின் விழாவைக் காண அனுமதித்ததாக பிபிசியின் ரெபேக்கா சீல்ஸ் கூறுகிறார்.
 
இந்த வழிபாட்டு அனுபவம் அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது என்பது தெளிவாகிறது என்றார் அவர்.
 
“ஒரு தன்பாலின ஈர்ப்பாளராக நீங்கள் அருவருப்பானவர்கள் மற்றும் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கூற்று, தனது சிந்தனையைச் சிதைத்ததாக கூறிய ஒரு சாத்தானியவாதி, சாத்தானிய கோவிலை கண்டறிவது உண்மையில் அறிவைப் பயன்படுத்தி நமது வாழ்க்கையை வாழவும், பிறரைப் புரிந்துகொண்டு வாழவும் கற்றுக்கொள்ளத் தனக்கு உதவியது” என்றார்.
 
சாத்தான் மதம்
சாத்தான் கோவிலின் வழிப்பாட்டு முறையை ஒரு மதமாகவே அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது. மேலும், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் இதற்கென சபைகளும் உள்ளன.
 
ஏப்ரல் மாத இறுதியில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற சாத்தானிய மாநாட்டுக்கு “SatanCon” என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க 830க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்திருந்தனர்.
 
சாத்தான் அல்லது நரகத்தில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இவர்கள் கூறுகின்றனர். மாறாக, அதிகாரத்தைக் கேள்வி கேட்பதற்கும், அறிவியலில் தங்களுக்கு உள்ள நம்பிக்கையை அடித்தளமாக வைப்பதற்கும், சாத்தான் ஒரு உருவகம் என்கின்றனர் அவர்கள்.
 
இந்தக் கருத்தையொட்டி உருவாகும் சமூக உணர்வு சாத்தானியத்தை ஒரு மதமாக்குகிறது என்கின்றனர் அவர்கள்.
 
சாத்தானின் சின்னம்
சாத்தானியவாதிகள் தங்களது சடங்குகளுக்கு சாத்தானின் சின்னங்களைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, திருமண விழாவிலோ, பெயர் சூட்டுதல் நிகழ்விலோ சாத்தானின் அடையாளமாக, பலிபீடத்தில் சிலுவை தலைகீழாகக் கவிழ்த்து வைக்கப்படுகிறது.
சாத்தானியவாதிகளின் இந்தச் செயல்பாட்டைப் பெரும்பாலான கிறிஸ்தவர்களள் தீவிர மதநிந்தனையாகக் கருதுகின்றனர்.
 
இந்தக் கருத்தில் தவறில்லை என்று ஒப்புக் கொள்கிறார் சாத்தானிய கோவிலின் செய்தித் தொடர்பாளர் டெக்ஸ் டெஸ்ஜார்டின்ஸ். தங்களது பல உருவப்படங்கள் இயல்பாக அவர்களை நிந்திப்பதாக அமைந்துள்ளது என்கிறார் அவர்.
 
சாத்தானியத்தை பின்பற்றுவர்கள் அனைவரும் தலைகீழ் சிலுவையை அணிபவர்களாக உள்ளனர் என்று கூறும் அவர்கள், தங்களது துவக்க விழாவில் அடக்குமுறையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ள பைபிள் கிழித்தெறியப்பட்டது என்கின்றனர்.
 
குறிப்பாக ஆண், பெண் தன்பாலின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிட்டோர், பெண்கள் மற்றும் கருப்பின பழங்குடியின மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகத் தான் தங்களது இந்தப் பகிரங்க செயல்பாடு அமைந்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
 
மதத்தின் பெயரால் நடக்கும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற நபர்கள் சாத்தானியவாதத்தின் உறுப்பினர்களாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
ஒவ்வொருவருக்கும் அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருப்பதாகக் கூறும் சாத்தானியவாதிகள், மற்றவர்களது உரிமைகளையும் மதிப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும் தாங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
 
கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆனால், சாத்தானியவாதிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மேரியட் ஹோட்டலுக்கு வெளியே பல பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரண்டு, அந்தக் கூட்டத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
 
“பெருமை மிக்க அனைத்து குழந்தைகளையும் சாத்தான் ஆட்சி செய்கிறான்”, “மனம் திருந்தி நற்செய்தியை நம்புங்கள்” போன்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
 
இந்த மதநிந்தனையைத் தாங்கள் ஏற்கவில்லை என்பதை கடவுளுக்குக் காட்ட வேண்டுமென விரும்புகிறோம் எனக் கூறினார் பழைமைவாத கத்தோலிக்க குழுவைச் சேர்ந்த எதிர்ப்பாளரான மைக்கேல் ஷிவ்லர்.
 
ஆனால், சாத்தானியவாதிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள், தங்களை 'போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள், சுய இன்பம் அனுபவிப்பவர்கள் எனப் பலவிதமாகத் திட்டி, கேலி பேசியபடி, அந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்றனர்' என்று ஆர்பாட்டக்காரர்கள் சிலர் நொந்துகொண்டனர்.
 
சாத்தானியவாதிகளால் நிரம்பிய அரங்கம்
சாத்தானியவாதிகளின் கூட்டத்தைக் கண்டித்து, கிறிஸ்தவர்கள் ஒருபுறம் ஆர்பாட்டம் நடத்தி கொண்டிருந்தாலும், மறுபுறம் கூட்டம் நடைபெற்ற ஹோட்டலின் நான்காவது தளம் முழுவதும் சாத்தானியர்களால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.
 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் திருமண வயதை எட்டிய ஆண்களாகவே இருந்தனர். பலவிதமான மீசைகள், ஆடம்பரமான ஆடைகள் என்று வண்ணமயமான தோற்றங்களில் காட்சியளித்த அவர்கள், மான்கொம்பு உள்ளிட்ட பல்வேறு உருவங்களை கைகளில் பச்சை குத்தியிருந்தனர்.
 
இந்நிகழ்ச்சியில், "Hellbillies: Visible Satanism in Rural America" என்ற தலைப்பில், “சாத்தானிசம்” குறித்தும், “தற்சார்பு இன்பம்” பற்றியும் கருத்தரங்குகள் நடைபெற்றன.
 
மதமும், அரசியலும்
சாத்தானிய கோவில்களின் முக்கிய அடையாளமாக அரசியல் செயல்பாடு உள்ளது. மதமும், அரசும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று அது நம்புகிறது. இந்த வேறுபாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்காவில் அவ்வப்போது வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
 
மதம், அரசியல் குறித்த சாத்தானியர்களின் கருத்து தீவிரமாக இருந்தாலும், இதுதொடர்பான போராட்டங்களில் அவர்கள் சில நேரங்களில் நையாண்டியையும், மூர்க்கத்தனத்தையும் கொண்டு வந்துவிடுவதாக பரவலாக விமர்சனம் உள்ளது.
 
தென்மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் பத்து கட்டளைகளின் நினைவுச் சின்னம் நிறுவப்பட்டபோது அங்கு 8 அடி உயர சாத்தான் சிலை நிறுவப்பட வேண்டும் என்று சாத்தானியவாதிகள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் பத்து கட்டளைகளின் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டது.
 
கருக்கலைப்புக்கு ஆதரவு
தங்களது உடம்பின் மீது தன்னாட்சி செலுத்துவதையும், கருக்கலைப்புக்கு ஆதரவான வாதங்களையும் சாத்தான் கோவில் (TST) முன்வைக்கிறது.
 
இந்த ஆண்டு துவக்கத்தில், நியூ மெக்சிகோவை தளமாகக் கொண்டு இந்த அமைப்பால் தொடங்கப்பட்ட ஆன்லைன் சிகிச்சை மையம் கருக்கலைப்புக்கான மாத்திரைகளை அஞ்சல் வழியாக வழங்கி வருகிறது.
 
மேலும், கருகலைப்பு செய்து கொள்பவர்களுக்கான சடங்குகளையும் சாத்தான் கோவில் நிர்வாகம் வடிவமைத்துள்ளது. அத்துடன் கருக்கலைப்புக்கு முன் வாசிப்பதற்கான ஓர் உறுதிமொழியையும் இயற்றியுள்ள சாத்தான் கோவில், தங்களது உறுப்பினர்களுக்கு கருக்கலைப்பு தடையில் இருந்து மதரீதியான விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
 
எதிர்மறையான விமர்சனங்கள்
சாத்தானியவாதிகளின் இந்தச் செயல் கத்தோலிக்க செய்தித்தாள், தேசிய கத்தோலிக்க பதிவேடு உள்ளிட்டவற்றின் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.
கருக்கலைப்புக்கு என்றே ஒரு சடங்கை செய்வதென்பது, மத சடங்குகளையும், சின்னங்களையும் மோசமாக பரிகாசம் செய்வது அன்றி வேறொன்றும் இல்லை என்று கத்தோலிக்க நாளிதழ் விமர்சித்திருந்தது.
 
கருக்கலைப்பு செய்ய விரும்பும் குறைந்த வருவாய் பிரிவினர், இந்தப் பணியை பல ஆண்டுகளாகச் செய்துவரும் பாரம்பரிய நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து, அவற்றுக்குத் தங்களது பணத்தை அளிப்பதே கருக்கலைப்பை ஆதரிப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும் என்று கருக்கலைப்புக்கு நிதியுதவி அளித்து வரும் யெல்லோஹாம்மர் (Yellowhammer) நிதியம் அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தது.
 
சாத்தானியவாதிகளுக்கு எதிராக இதுபோன்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, அவர்களின் ஆதரவாளர்கள் அண்மையில் ஒரு மண்டபத்தில் குவிந்திருந்தனர். சாத்தான் கோவ்கல் இயக்குநர்கள் கூடி, தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அங்கு எடுத்துரைத்தனர். அவர்களது பணிகளை சாத்தான் ஆதரவாளர்கள் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
 
“சாத்தானுடன் கல்வி” திட்டம்
கருக்கலைப்புக்கு ஆதரவான சாத்தானியர்களின் நடவடிக்கைகளுக்குப் பிறகு, இவர்களது மற்றொரு திட்டம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. “ஆஃப்டர் ஸ்கூல் சாத்தான் கிளப்ஸ்” ( After School Satan Clubs) என்பதுதான் இந்தத் திட்டம். “சாத்தனுடன் கல்வி” ( "Educatin' with Satan".) என்பதுதான் இந்தத் திட்டத்தின் தாரக மந்திரம் (Slogan).
 
மதத்தை பள்ளிகளில் இருந்து விலக்கி வைக்கும் இந்தத் திட்டம், மாணவர்களுக்கு சுவிஷேசம் செய்ய வரும் குழுக்களையும் எதிர்க்க விரும்புகிறது.
 
இதையடுத்து, After School Satan Clubs சமூக சேவை, அறிவியல் செயல்பாடுகள், கைவினைப் பொருட்களை வடிவமைப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த மாணவர்களை வலியுறுத்துவது உள்ளூர் மக்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சாத்தானியவாதிகளின் இந்தத் திட்டம் குழந்தைகளை பயமுறுத்துவதாக உள்ளதென்ற விமர்சனத்தை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.
 
ஆனால், தங்களின் இந்தத் திட்டம் பேய்கள் குறித்த அச்சமோ, நரகத்துக்கான வழிகளோ இல்லாதது என்று சாத்தான் கோவில் நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது. துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டியை அனிமேஷன் காட்சியாகக் கொண்ட, குழந்தைகளை மகிழ்விப்பதற்கான பாடல் (My Pal Satan) தங்களிடம் இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
 
மேலும் சாத்தான் ஒரு தீய சக்தி இல்லை எனவும், மாணவர்கள் கற்கவும், எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும் என்றுமே அவர் விரும்புவதாகவும் விளக்கமளித்து, சாத்தான் கோவில் நிர்வாகம் தங்களது இந்தத் திட்டத்தை நியாயப்படுத்துகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியாகவும், அவர்கள் அவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் சாத்தான் விரும்புவதாகவும் கோவில் நிர்வாகம் கூறுகிறது.
 
‘சாத்தான் உங்களை நேசிக்கிறார்!’
பாஸ்டனில் சாத்தானியவாதிகளின் கூட்டம் நடைபெற்ற ஹோட்டல் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சாத்தானியவாதத்தை பரப்பும் நோக்கிலான கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் அரங்குகளை அமைந்திருந்தனர்.
 
‘சாத்தான் உன்னை நேசி்க்கிறார்’ என்ற வாசகம் பொருந்திய கருப்பு நிற சிறிய தொப்பி, பாஃபோமெட் ( மாவீரர்கள் வழிப்படும் தெய்வம்) போல் வடிவமைக்கப்பட்ட பொம்மைகள், இறக்கைகளுடன் கூடிய ஆட்டின் தலையைக் கொண்ட சாத்தான் சின்னம் உள்ளிட்டவை இந்த ஸ்டால்களில் விற்பனை செய்யப்பட்டன.
 
சாத்தான் கோவில் நிர்வாகத்தால் வடிவமைக்கப்பட்ட டி-சர்ட்களும் இங்கு விற்பனைக்கு உள்ளன. சாத்தானியத்தில் இணைய வேண்டுமென விரும்புபவர்களிடம் இருந்து உறுப்பினர் சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
 
மாறாக, நன்கொடைகள் மற்றும் வணிக விற்பனைகளின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நிர்வாகம் இயங்கி வருகிறது.
 
இந்த ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த “குட் நைட் பாஃபோமெட்” என்ற தலைப்பிலான, குழந்தைகளுக்கான புத்தகம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
 
சாத்தானிய கோவிலின் வழிகாட்டும் கோட்பாடுகள், ஏழு கட்டளைகள், ஒருவரது உடலின் மீதான கட்டுப்பாடு, பிறரின் சுதந்திரத்திற்கு மரியாதை கொடுப்பது போன்றவற்றை எடுத்துரைக்கும் பாடல்கள் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் இந்தப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
 
எளிமை, தொடர்பு
கலிஃபோர்னியாவில் இருந்து விமானம் மூலம் பாஸ்டனுக்கு வந்து, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த அராசெலி ரோஜாஸ் என்ற பெண், “சாத்தானிய கோட்பாடுகள் வாழ்வியலுடன் தொடர்புடையவையாகவும், கடைபிடிப்பதற்கு எளிதானவையாகவும் இருக்கின்றன. இதைப் பற்றி தமக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்றாலும், தான் எப்போதும் ஒரு சாத்தானியவாதியை மேற்கோள் காட்டுவது போல் உணர்கிறேன்,” என்று கூறுகிறார்.
 
சாத்தானியவாத கோவில்கள் குறித்து முதன்முதலில் தான் 2020ஆம் ஆண்டில் டிக் டாக் மூலம் தெரிந்துக் கொண்டதாக அவர் கூறுகிறார்.
 
“ஆரம்பத்தில் சாத்தானியவாதிகளை கண்டு கொஞ்சம் பயந்தேன். அவர்கள் குழந்தைகளை பலியிடவில்லை என்பதை உறுதிசெய்ய விரும்பினேன். அதன் பின்னர் இந்த கலாசாரத்துக்குள் நுழைய ஆரம்பித்தேன்.
 
பிறகு சாத்தானியவாதிகளின் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். தற்போது இவர்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்,” என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார் ரோஜாஸ்.
 
பாஸ்டனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களில் பலர், 2019இல் பென்னி லேன் இயக்கிய “ஹெயில் சாத்தான்?” ( Hail Satan?) என்ற ஆவணப்படத்தில் இருந்து சாத்தானிய கோவில்களின் அறிமுகம் தொடங்கியதாகக் கருதுகின்றனர். இக்கோவில்களின் கோட்பாடுகள், ஆரம்பகால செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்த ஆவணப்படம் ஆராய்கிறது.
 
2019இல் 10 ஆயிரமாக இருந்த தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 7 லட்சமாக உயர்ந்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறது சாத்தானியவாத கோவில் நிர்வாகம்.
 
அனைத்து தரப்பின் ஆதரவு
பாஸ்டனில் நடைபெற்ற சாத்தானியர்களின் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், நிதித் துறையில் பணியாற்றுபவர்கள், கலைஞர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
 
இவர்களில் பலர் LGBTQ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பலர் கிறிஸ்தவர்களை அல்லது சாத்தானியவாதிகள் அல்லாதவர்களை திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தனர்.
 
சாத்தானிய கோவில் உறுப்பினர்கள் பெரும்பாலும் இடதுசாரிகளாகவே உள்ளனர். ஆனால் இதில் சேர எவ்வித அரசியல் நிபந்தனையும் கிடையாது என்பதுடன், எந்தவொரு அரசியல் கட்சியையோ, நபரையோ தாங்கள் ஆதரிக்கவில்லை என்கிறது கோவில் நிர்வாகம்.
 
சாத்தானிய இயக்கத்தின் தொடக்கம்
சாத்தான் கோவில் இணை நிறுவனரான லூசியன் க்ரீவ்ஸ் கருப்பு உடை அணிந்து, கையில் தேநீர் நிரம்பிய பாத்திரத்தை (Thermos) ஏந்தியபடி, பாதுகாவலருடன் பாஸ்டன் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார்.
 
“உங்களை ஆசிர்வதிக்கிறேன்,” என்று சிலர் கூறியபோது அவர் புன்னகைத்தார்.
 
க்ரீவ்ஸ் (புனைப்பெயர்) தனது நண்பரான மால்கம் ஜாரி (புனைப்பெயர்) உடன் இணைந்து, பல ஆண்டுகளுக்கு முன் சாத்தானியவாத இயக்கத்தைத் துவங்கினார்.
 
அவர்கள் மத சுதந்திரத்தை ஆதரிப்பவர்களாகவும், அரசுகள் இயற்றியுள்ள சட்டங்களை கிறிஸ்தவ மதம் ஆக்கிரமிப்பதாகக் கூறி, அதை எதிர்ப்பவர்களாகவும் இருந்தனர்.
 
சாத்தானியவாத கோவிலைச் சேர்ந்த உறுப்பினர்கள், சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடிக்கின்றனர் என்று அமெரிக்க ஊடகங்கள் சித்தரிப்பதை க்ரீவ்ஸ் கடுமையாக எதிர்க்கிறார்.
 
மக்களின் முகத்திற்கு நேராகத் தாங்கள் பேசும் எதையும் எடுத்துக் கொள்ள அவர்கள் தயங்குகின்றனர் எனக் கூறும் அவர், தாங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நேரடியானவை மற்றும் தங்களைத் தாங்களே தவறாகச் சித்தரிக்கவில்லை என்றும் கூறுகிறார்.
 
நீங்கள் விஷமிகளை(trolls) போல தோற்றமளிக்காமல் இருக்க முயல்கிறீர்கள் என்றால், கருக்கலைப்புக்கான உரிமையை நீக்கும் முடிவை ஆதரித்த, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியின் பெயரை வைத்து, உங்களின் கருக்கலைப்பு மையத்துக்கு “சாமுவேேல் அலிட்டோவின் தாயின் சாத்தானிய கருக்கலைப்பு சிகிச்சை மையம்” என்று பெயரிடுவதும், பின்னர் அதை டி-சர்ட்களில் போடுவதும் புத்திசாலித்தனமா என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
 
தங்களின் செயல்பாடுகள் அனைத்தும் நிதானமாகவும் உண்மையானதாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் க்ரீவ்ஸ்.
 
சாத்தானியர்கள் சந்திக்கும் ஆபத்து
சமூகத்தின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி, தாங்கள் இதில் ஈடுப்பட்டுள்ளோம் என்பதை வெளிப்படையாகக் கூற இயலாத நிலை உள்ளது என்று சாத்தானிய கோவில் உறுப்பினர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 
இதிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களில் பலர் தங்களது வேலையை, குழந்தைகளை இழந்துள்ளனர். கார்களுக்கு அடியில் குண்டுகள் இருப்பதாக மிரட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர் அவர்கள்.
 
பாஸ்டனில் அண்மையில் நடைபெற்ற SatanCon விழாவின்போது, பைபிள் பக்கங்களை கிழித்ததற்காக, சாத்தான் கோவிலின் மத உரிமைகள் பிரசார அமைப்பின் செய்தித் தொடர்பாளரான சாலிஸ் பிளைத், ஆன்லைனில் கண்டனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
 
இதுபோன்ற எதிர்ப்புகளை சந்திப்பது தனக்கு முதல் முறையல்ல என்று கூறும் பிளைத், 2016ஆம் ஆண்டிலும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் தமக்கு நேர்ந்துள்ளதாகக் கூறுகிறார். அப்போது தமது குடும்ப உறுப்பினர் ஒருவரே தம்மைப் பற்றிய விவரங்களை ஆன்லைனில் கசியவிட்டதாகக் கூறும் அவர், துப்பாக்கியுடன் தமது வீட்டுக்குள் நுழைந்த நபரால் மிரட்டப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் கூறுகிறார்.
 
இத்தகைய எதிர்ப்புகளை அடுத்து, தனது பெயரை சட்டபூர்வமாக மாற்ற வேண்டியிருந்தது என்று கூறும் பிளைத், “எனது உரிமைகளைப் பறிக்க விரும்பும் சுவிஷேச மனப்பான்மை கொண்டவர்களே எனது எதிரிகள் என்றால், இத்தகைய எதிரிகள் வாய்த்திருப்பதை எண்ணிப் பெருமை கொள்கிறேன்,” என்கிறார்.
 
சமூகத்துக்கு அஞ்சி பெயரை மாற்றும் நிலை
சமூகத்தில் மாற்றுப் பெயரை பயன்படுத்தும் பல சாத்தானிய கோவில் உறுப்பினர்களில் ஒருவரான டைஃபோன் நைக்ஸ், அவர்கள் (சமூகம்) அழைப்பது போல், சமீபத்தில்தான் நாத்திகத்தில் இருந்து சாத்தானியவாதத்துக்கு மாறினேன் என்று கூறுகிறார்.
 
உடல் சுயாட்சி, இரக்கம், மரியாதை, அறிவியல் உட்பட தான் நம்பும் அனைத்தையும் “சாத்தானியவாதம்” குறிக்கிறது என்று பெருமையுடன் கூறுகிறார் நெக்ஸ்.
 
ஆனாலும், கிறிஸ்தவ வட்டாரத்தில் உள்ள தமது நண்பர்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் நைக்ஸ்.
 
எல்லோரையும் ஏற்றுக் கொள்பவராக, உள்ளடக்கியவராக சாத்தான் இருக்கிறார் என்று கூறப்பட்டாலும், அவர் உண்மையில் இருக்கிறார் என்று தான் நம்பவில்லை எனவும் கூறுகிறார் நைக்ஸ்.