புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:08 IST)

விநாடிக்கு 6 டன் திட எரிபொருள் எரிக்கும் ராக்கெட் பூஸ்டர் - கிளப்பி சோதித்த அமெரிக்கா

அமெரிக்கர்கள் 2024ஆம் ஆண்டு நிலவுக்கு பயணம் செய்ய உதவப் போகும் ராக்கெட்டின் முக்கிய பாகமாக இருக்கப்போகும் தின்ம எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்  எஞ்சினை கிளப்பிப் பார்த்து பொறியாளர்கள் சோதனை செய்துள்ளனர்.

விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் செலுத்து வண்டிகளை ஆங்கிலத்தில் ராக்கெட் என்கிறோம். இப்படி ஏவப்படும் ராக்கெட்டுகளின் படத்தை எல்லோரும் பார்த்திருக்கலாம். அதில் சீறிப்பாயும் முதன்மை ராக்கெட்டின் இருபுறமும், சிறிய ராக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
 
ராக்கெட் கிளம்பும்போது அது புவியீர்ப்பு விசையை மீறி இயங்கி புவியின் செயற்பரப்பைத் தாண்டி செல்லவேண்டும். இதற்கு அந்த ராக்கெட் விடுபடு திசை  வேகத்தை எட்டவேண்டும். இதற்கு உதவி செய்வதற்காக கூடுதல் விசையை தரும் வகையில் முதன்மை ராக்கெட்டோடு சிறிய ராக்கெட்டுகளை இணைத்திருப்பார்கள். இவற்றையே பூஸ்டர் ராக்கெட்டுகள் என அழைக்கிறார்கள்.
 
நாசாவின் நிலவுப் பயணத்திட்டத்துக்கு உதவப் போகும் ராக்கெட்டுடன் இணைக்கப்படவுள்ள பூஸ்டர் ராக்கெட் எஞ்சினைத்தான் தற்போது சோதித்துப்  பார்த்திருக்கிறார்கள்.
 
இந்த இரண்டு பூஸ்டர் ராக்கெட்டுகளும் நாசாவின் மிகப்பெரிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ’சாட்டர்ன் வி’க்கு  பிறகு உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்வெளி செலுத்து அமைப்பு (space launch system) இது.
 
இந்த செலுத்து வாகனம் மூலம் ஓரியன் விண்கலம், விண்வெளி வீரர்கள், மற்றும் சரக்குகள் கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
 
செயின்ட் லூயிஸ் வளைகுடாவில் உள்ள, ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 
நாசாவின் எஸ்.எல்.எஸ். எனப்படும் புதிய செலுத்து வாகனம் விண்வெளிக்கு செல்லும் போது முதல் இரண்டு நிமிடங்களுக்குத் தேவையான 75 சதவீத விசையை  திட எரிபொருளைக் கொண்டு இயங்கும் இந்த பூஸ்டர்கள் வழங்கும்.
 
விநாடிக்கு 6 டன் எரிபொருள்
 
இவை விநாடிக்கு 6 டன் திட எரிபொருளை எரிக்கக்கூடியவை.
 
நாசா, நிலவுக்கு தனது முதல் பெரிய ராக்கெட்டை அடுத்த வருடம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1 என அழைக்கப்படுகிறது. இதில்  முதலில் நிலவைச் சுற்றும் ஓரியன் என்னும் ஆளில்லா விண்கலன் செலுத்தப்படும். பின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் 2023ஆம் ஆண்டு 4 விண்வெளி வீரர்கள்  நிலவிற்கு செல்வர்.
 
முதன் முதலில் 1972ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் நிலவில் கால் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.