புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:35 IST)

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எலித் தொல்லை: பூனைகளை வைத்துச் சமாளிக்க முடிவு

Rat and Cat

பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒரு பெரும் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. ஆனால் இது அரசியல் ரீதியாக அல்ல. அரசியல்வாதிகளுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

 

 

நாடாளுமன்ற கட்டடத்தில் பெரும் எண்ணிக்கையில் அங்கும் இங்கும் ஓடி, அலுவலகங்களை இரவுநேர ''மாரத்தான்'' பந்தையப் பாதையாக மாற்றும் எலிகளால்தான் பிரச்னை. குறிப்பாக பெருச்சாளிகள்.

 

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடந்த கூட்டங்களின் பதிவேடுகளைப் பார்க்க, ஒரு அதிகாரப்பூர்வ குழு உத்தரவிட்ட போதுதான் இந்தப் பிரச்னை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பதிவேடுகள் பெரும்பாலானவை எலிகளால் மோசமாகக் கடிக்கப்பட்டு இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

 

"இந்தத் தளத்தில் உள்ள எலிகள் பார்ப்பதற்கு மிகவும் பெரிதாக இருக்கும், அவற்றைப் பார்த்துப் பூனைகள்கூட பயப்படும்" என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவை செய்தித் தொடர்பாளர் ஜாபர் சுல்தான் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

எலிகளின் தொல்லை இப்போது மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தை எலிகள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு ஆண்டு பட்ஜெட்டில் 12 லட்ச ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பெரும்பாலான எலிகள் முதல் தளத்தில் இருப்பது போல் இருக்கிறது. இந்தத் தளத்தில் செனட் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் நிலைக்குழு கூட்டங்களும் நடக்கின்றன.

 

நாடாளுமன்றத்தின் உணவுக்கூடம் இங்கு இருப்பதாலும், எலிகள் இங்கு அதிகமாக இருக்கலாம்.

 

ஆனால் எலிகள் பொதுவாக மக்களின் பார்வையில் தென்படாமலே இருக்கிறது. அலுவலக நேரம் முடிந்து மக்கள் வெளியேறும் வரை அவை வெளியில் வருவதில்லை.

 

"வழக்கமாக மாலையில் இங்கு மக்கள் இல்லாதபோது, ஓட்டப்பந்தயம் போல எலிகள் அங்கும் இங்கும் ஓடுகின்றன" என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவை அதிகாரி ஒருவர் கூறினார்.

 

"இங்கு ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்கள் இப்போது இதற்குப் பழகிவிட்டனர், ஆனால் யாராவது புதிதாக வந்தால், அவர்கள் எலிகளை பார்த்து பயப்படுகிறார்கள்." என்கிறார் அவர்

 

நாடாளுமன்றத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு ஒரு பூச்சி மருந்து நிறுவனத்தைக் கண்டுபிடிப்பதற்காக, பல பாகிஸ்தான் செய்தித்தாள்களில் இப்போது விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

 

இதுவரை, இரு நிறுவனங்கள் மட்டுமே இதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.

 

பூனைகளைப் பயன்படுத்த முடிவு

 

எலிகளை விரட்டுவதற்கு, எலிக்கொல்லி மருந்துகள், எலிப்பொறிகள் ஆகியவற்றுடன் பூனைகளையும் வழங்குமாறு இப்பணியில் அமர்த்தப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த இஸ்லாமாபாத் தலைநகர் மேம்பாட்டு ஆணையத்திற்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

 

பூனைகள் நாடாளுமன்ற கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகளில் விடப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறுகின்றார்.

 

இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்தைத் தவிர இந்த எலிகள் அருகில் இருக்கும் குடியிருப்புகளையும் நாசம் செய்திருக்கின்றன.

 

"இஸ்லாமாபாத்தில் பழமையான கட்டடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வரை எலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும்," என்று இஸ்லாமாபாத் தலைநகர் மேம்பாட்டு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபைக் அலி பிபிசி-யிடம் கூறினார்.

 

"எலி ஒழிப்புக்காக நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்பட்ட 12 லட்சம் ரூபாயை (பாகிஸ்தான் ரூபாய்) ஒரு முறை மட்டும் பயன்படுத்தப் போவதில்லை. அது ஆண்டு முழுவதும் எலிகளை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே," என்று அவர் கூறினார்.

 

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எலிகளை ஒழிக்கப் பூனைகளைப் பயன்படுத்துவது குறித்து எந்த விதிமுறையும் விதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

 

இந்த டெண்டரை வழங்கியதன் நோக்கம் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எலிகளை விரட்டுவதற்காகவே, என்றும், தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் 'பசை அட்டை' போன்றவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் ஃபைக் அலி கூறுகிறார்.

 

உணவுப் பொருட்கள் ஒரு பசை அட்டையின் மீது வைக்கப்பட்டு, அவற்றைச் சாப்பிட எலிகள் வரும்போது, அவை பசை அட்டையில் ஒட்டிக்கொள்ளும்.

 

எலிகள் பசை அட்டையில் சிக்கிக்கொண்டாலும் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்வாழும், அவை பிடிபட்டதாக அறிய வந்தால் அந்த எலிகளை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அகற்றி வேறு எங்காவது தொலைவில் விட்டுவிடுவர்.

 

"எலி ஒரு உயிரினம். எனவே அதைக் கொல்வது சரியானது அல்ல. இந்த எலிகளை உயிருடன் பிடித்து எங்காவது விடுவிப்பதே சிறந்தது," என்று இஸ்லாமாபாத் தலைநகர் மேம்பாட்டு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.