திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (16:53 IST)

ரூபாயின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும் – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில்!

கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்குள் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரம்சிங்க நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மிக விரிவாக புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவர் ஆற்றிய உரை பின் வருமாறு.
 
வணக்கம், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டேன். நான் அந்த பதவியை கேட்கவில்லை. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இந்த பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
 
நான் அரசியல் தலைவர் என்ற விதத்தில் மாத்திரமன்றி, இலவச கல்வியை பெற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியை படித்து, முன்னோக்கி பயணித்த தலைவர் என்ற விதத்தில் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
 
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையிலேயே இருக்கின்றது. 2022ம் ஆண்டு ஆரம்பிக்கும் போது, கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 2300 பில்லியன் ரூபா வருமானம் இருக்கின்றது என காண்பித்தாலும், இந்த வருடத்திற்கான உண்மையான வருமானம் 1600 பில்லியன் ரூபாய் என கணிப்பிட முடிகின்றது.
 
2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனமானது 3300 பில்லியன் ரூபாயாகும். எனினும், கடந்த அரசாங்கத்தின் வட்டி வீத அதிகரிப்பு மற்றும் மேலதிக செலவீனங்கள் காரணமாக 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் முழுமையான செலவீனமானது 4000 பில்லியன் ரூபாவாகும்.
 
வருடத்திற்கான துண்டுவிழும் தொகையானது 2400 பில்லியன் ரூபாயாகும். அது தலா தேசிய உற்பத்தியில் 13 வீதமாகும். அதேபோன்று அனுமதிக்கப்பட்ட கடன் எல்லையானது 3200 பில்லியன் ரூபாயாகும். நாங்கள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் 1950 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளோம். அதன்படி, 1250 பில்லியன் ரூபா மாத்திரமே எஞ்சிய மிகுதியாகவுள்ளது.
 
2019ம் ஆண்டு நவம்பர் மாதம் எமது அந்நிய செலாவணியானது 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். எனினும், இன்று நிதி அமைச்சகத்தால் 1 பில்லியன் டாலரை கூட தேடிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலிலிருந்து தரையிறக்குவதற்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் அமெரிக்க டாலரை கூட நிதி அமைச்சினால் தற்போது தேடிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாங்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்னைகள் காணப்படுகின்றன. எதிர்வரும் சில தினங்களில் வரிசைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் வரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
எம் வசம் தற்போது ஒரு நாளுக்கு போதுமான பெட்ரோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. நேற்றைய தினம் நாட்டிற்கு வந்த டீசல் கப்பலினால், டீசல் பிரச்னைக்கு ஒரு வகையில் சிறிய தீர்வொன்று தற்போது கிடைத்துள்ளது.
 
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மே 19ம் தேதி முதல் ஜுன் முதலாம் தேதி வரையான காலப் பகுதிக்குள் மேலும் 2 டீசலை ஏற்றிய கப்பல்களும், மே மாதம் 18 மற்றும் மே 29ம் தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வருகைத் தரவுள்ளன.
 
கடந்த 40 நாட்களுக்கு அதிகமாக இலங்கை கடற்பரப்பில் பெட்ரோல், மசகு எண்ணெய், உராய்வு எண்ணெய் ஏற்றிய மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. அதற்கான நிதியை செலுத்துவதற்கு திறந்த சந்தையிலிருந்து டாலரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
 
மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை உற்பத்தி செய்ய எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது. இதனால், நாளாந்த மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் 15 மணிநேரம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
 
எனினும், நாங்கள் இதற்கு தேவையான நிதியை தேடியுள்ளோம். ஏதேனும் ஒரு வகையில் நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர் மிக விரைவில் தேடிக் கொள்ள வேண்டியுள்ளது.
 
மண்ணெண்ணை மற்றும் மசகு எண்ணெய் தொடர்பிலான நிலைமை இதை விடவும் மோசமாக காணப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மத்திய வங்கி, அரச, தனியார், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வங்கிகள் டொலர் இல்லாமையினால், அந்த பிரச்னைகளை தற்போது எதிர்நோக்கியுள்ளன.
 
எம்வசம் மிகவும் குறைவான டாலரே கையிருப்பில் உள்ளமையை நீங்களும் அறிவீர்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில், நாங்கள் நேற்றைய தினம் டீசலுடனான கப்பலொன்றை கொண்டு வந்துள்ளோம். அதனால், இன்று முதல் டீசலை பெற்றுக்கொள்ள உங்களுக்கு முடியும்.
 
இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்தது. அதேபோன்று செவ்வாய்கிழமைக்கு முன்பாக எரிவாயுடனான கப்பலுக்கு நாங்கள் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுப்போம். அதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு சிறியதொரு தீர்வு கிடைக்கும்.
அதேபோன்று, மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்றது. இருத நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகள், சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவிலான மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
 
மருந்து, சத்திர சிகிச்சை உபகரணங்கள், நோயாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் விநியோகத்தர்களுக்கு 4 மாதங்களாக கடனை செலுத்தவில்லை.இவர்களுக்கு 34 பில்லியன் ரூபாய் நிலுகை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. அதேபோன்று, அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளுக்கு கடந்த 4 மாதங்களாக கடன்தொகை செலுத்தப்படவில்லை.
 
அதனால், மருந்தாக்கல் கூட்டுதாபனத்தை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க, சர்வதேச மருந்து விநியோக நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அத்தியாவசியமான 14 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த மருந்து வகைகளை விநியோகிப்பதற்கு எமது மருந்து விநியோக பிரிவிற்கு தற்போது முடியாதுள்ளது.
 
இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட இரண்டு வகையான மருந்துகளை விநியோகிக்கவே முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத்திட்டத்திற்கு பதிலாக புதிய வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
அதனை நிவாரண வரவு செலவுத்திட்டமாக முன்வைப்பதே எமது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. அதேபோன்று தற்போது கடும் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை விமான சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன்
 
2021ம் ஆண்டில் மட்டும் இலங்கை விமான சேவைக்கு 45 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இருந்து 2021 மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அரசுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள நட்டமானது 372 பில்லியன் ரூபாவாகும்.
 
நாங்கள் இந்த நிறுவனத்தை தனியார் மயப்படுத்தினாலும், அந்த நட்டத்தை நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் ஒரு தடவையேனும் விமானத்தில் கால் தடம் பதிக்காத இந்த நாட்டில் வாழ்கின்ற வறுமை கோட்டிற்கு கீழுள்ள அப்பாவி மக்களுக்கும் இந்த நட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
 
இதை விடவும் மோசமான நிலைமையை நான் குறுகிய காலத்திற்கு சந்திக்க வேண்டியுள்ளது. பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 84.38 சதமும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 71.19 சதமும், ஒரு லிட்டர் டீசலுக்கு 131.55 சதமும், ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 136.31 சதமும், ஒரு லிட்டர் மண்ணெண்ணைக்கு 294.50 சதமும் நட்டத்தை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கி வருகின்றது.
 
பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு இந்த நட்டத்தை தொடர்ந்தும் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான இயலுமை கிடையாது. அதேபோன்று, மின்சார சபை, ஒரு அலகு மின்சாரத்திற்கு உங்களிடமிருந்து 17 ரூபா வசூலிக்கவிட்டாலும், அதற்காக 48 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
 
இதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சுமார் 30 ரூபாய் வரை நட்டம் காணப்படுகின்றது. இதுவும் பாரியதொரு பிரச்னையாகும். விருப்பமில்லாமலேனும் இந்த சந்தர்ப்பத்தில் பணத்தை அச்சிட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் இந்த மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செலவிட வேண்டியுள்ளமைக்காகவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.
 
பணம் அச்சிடுகின்றமையினால், ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடையும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில் பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கும், மின்சார சபைக்கும் ரூபாவை தேடிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், எதிர்வரும் சில மாதங்கள், உங்களுக்கும், எனக்கும் வாழ்க்கையில் மிக மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். அதனை அர்ப்பணிப்புடன் எதிர்நோக்க வேண்டியிருக்கும். விடயங்களை பொதுமக்களிடமிருந்து மறைப்பதற்கு நான் விரும்பவில்லை.
 
இதுவே உண்மையான நிலைமை. கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை குறுகிய காலத்திற்கு நாம் எதிர்நோக்கவுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் துன்பகரமான நிலைமையே காணப்படுகின்றது. எனினும், இந்த நிலைமையானது குறுகிய காலத்திற்கு மாத்திரமே காணப்படும்.
 
எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இதற்கான சில மாதங்களை பொறுமையுடன் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
 
எனினும், இந்த நிலைமையிலிருந்து எம்மால் மீண்டெழ முடியும். அதற்காக புதிய வழியொன்றை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை குறித்து எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு அவர்கள் வழங்கிய பதிலுக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
 
தற்போது காணப்படுகின்ற இந்த பிரச்னைகளுக்கான பதிலை தேடிக் கொள்வதற்காக தேசிய சபையொன்றையோ அல்லது அரசியல் சபையொன்றையோ அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் உடனடியாக ஸ்தாபிக்க வேண்டியுள்ளது. அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி குறிப்பிட்ட கால எல்லைக்குள், குறுகிய, மத்திய, மற்றும் நீண்ட கால திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நாட்டை அபிவிருத்தி செய்ய எமக்கு இயலுமை கிடைக்கும்.
 
மண்ணெண்ணை, எரிவாயு, எரிபொருள் வரிசைகள் இல்லாத நாடு, மின்வெட்டு இல்லாத நாடு, விவசாயத்தை சுதந்திரமாக செய்துக்கொள்ளக்கூடிய நாடு, இளைஞர் யுவதிகளின் பாதுகாப்புக்கான நாடு, போராட்டங்களுக்காகவும், வரிசைகளுக்காகவும் காத்திருந்து நாட்களை செலவிடாத நாடு, சுதந்திரமான வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய நாடு, மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளக்கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.
 
நான் மிக அபாயமான சவால் ஒன்றை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளேன். இந்த பிரச்னை மிகவும் ஆழமானது. ஆழம் தெரியவில்லை. மிக மெல்லிய கண்ணாடிகளினால் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கைபிடியும் கிடையாது. எனது கால்களுக்கு கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளது.
 
இந்த பாதணிக்கு கீழ் கூர்மையான ஆணிகள் இருக்கின்றன. குழந்தையை மிக பாதுகாப்பாக மறுபுறத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இந்த நாட்டிற்காக இந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
 
ஒரு நபர், குடும்பம், குழுக்களை காப்பாற்றுவது எனது நோக்கம் கிடையாது. முழு நாட்டு மக்களையும் காப்பாற்றுவதே எனது பொறுப்பாகும். முழு நாட்டையும் காப்பாற்றும் பொறுப்பு உள்ளது. இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை காப்பாற்றுவது எனது பொறுப்பாகும். வாழ்க்கையை பணயம் வைத்து, இந்த சவாலை ஏற்றுக்கொள்கின்றேன்.
 
இந்த சவாலை வெற்றிக்கொள்வேன். அனைவரது ஒத்துழைப்புக்களும் எனக்கு வேண்டும். எனது பொறுப்பை நாட்டிற்காக நான் நிறைவேற்றுவேன். இது நான் உங்களுக்கு வழங்கும் உறுதிமொழியாகும். இவ்வாறு ரணில் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார்.