1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (13:52 IST)

ஜஸ்டின் பீபருக்கு வந்த ராம்சே ஹன்ட் நோய்: 'முகத்தின் ஒரு பக்கம் அசையவில்லை'

பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்த பின்னர், தான் முக வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

28 வயதான அவர், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.

"இந்தக் கண் இமைக்காமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. ஏனெனில், என் முகத்தின் இந்தப் பக்கம் முழுதாக முடங்கியுள்ளது," என்று கூறினார்.

ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய்

ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்பது ஒருவர் காதுகளுக்கு அருகிலுள்ள முக நரம்பைப் பாதிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிப்ரவரியில் பீபர் ஜஸ்டிஸ் உலக சுற்றுலா (Bieber's Justice World Tour) தொடங்கியது. இதன் ஓர் அங்கமான மூன்று நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

"என் காது, முக நரம்புகளைத் தாக்கிய இந்த வைரஸால்தான், என் முகம் செயலிழந்துள்ளது," என்று கனடாவில் பிறந்த பாடகர் தனது மூன்று நிமிட வீடியோவில் முகத்தின் வலது பக்கத்தைக் குறிப்பிட்டுக் கூறினார்.

அவர் தனது ரசிகர்களை பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார் ஜஸ்டின் பீபர். மேலும் அவர், "உடல் ரீதியாக, வெளிப்படையாகச் செய்ய இயலாது," என்று அடுத்து வரவிருக்கும் தனது நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறினார்.

அவரைப் பின்தொடரும் 240 மில்லியன் மக்களுக்கு, அவர் சிரித்து, கண் சிமிட்டி, முகத்தின் வலது பக்கத்தை எப்படி அசைக்க முடியவில்லை என்று காட்டினார்.

"இது மிகவும் தீவிரமானது என்பதை நீங்கள் பார்க்க முடியும். இது இவ்வளவு தீவிரமாக இல்லாமல் இருந்திருக்கலாம் என்று நான் விரும்புகிறேன். ஆனால், என் உடல், நான் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகிறது.

நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நான் இந்த நேரத்தை ஓய்வெடுக்கவும், நூறு சதவீதம் மீண்டு வரவும் பயன்படுத்துகிறேன். அதன்மூலம் நான் எதற்காகப் பிறந்தேனோ அதைச் செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.

மேலும், "இயல்பு நிலைக்குத் திரும்ப" முகத்திற்குப் பயற்சிகளைச் செய்து வருவதாகவும் ஆனால், குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாது என்றும் பீபர் கூறினார்.

அவருடைய நிகழ்ச்சிகள் இந்த வாரத் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி மற்றும் டொரண்டோவில் நடக்கவிருந்தன. அடுத்து வரும் வாரங்களில் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சலஸில் கச்சேரிகல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ராம்சே ஹன்ட் நோயின் அறிகுறிகள்

அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கின் கூற்றுப்படி, "வலி மிகுந்த அக்கி (shingles rash) தவிர, ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம், செவிப்புலன் இழப்பையும் முக வாதத்தையும் ஏற்படுத்தும்."

பெரும்பாலான மக்களுக்கு, ராம்சே ஹன்ட் நோயின் அறிகுறிகள் தற்காலிகமானவை. ஆனால், நிரந்தரமானதாகவும் மாறலாம் என்றும் மேயோ கிளினிக் கூறுகிறது.

நோயாளிகளால் ஓர் இமையை மூட முடியாமல் போவது, கண் வலியையும் மங்கலான பார்வையையும் ஏற்படுத்தும். இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மிகவும் பொதுவானது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

மார்ச் மாதம், பாடகரின் மனைவி ஹெய்லி பீபர் மூளையில் ரத்தம் உறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு, அவர் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதயத்திலுள்ள ஓட்டையை அடைக்க அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறினார்.