செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (21:51 IST)

மாநிலங்களவைத் தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு ஓர் இடம் கிடைக்குமா?

மாநிலங்களவைத் தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு ஓர் இடம் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தோடு ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் வரும் நிலையில், அந்த இடங்களைப் பெறுவதற்கான போட்டிகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் ஓரிடத்தை எதிர்பார்க்கிறது தே.மு.தி.க.
 
தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்கும். இதனால், மாநிலங்களவையில் அ.தி.மு.கவின் பலம் பதினொன்றிலிருந்து பத்தாகக் குறையும். தி.மு.கவின் பலம் ஐந்திலிருந்து ஏழாக உயரும்.
 
கடந்த முறை மக்களவையில் இடங்கள் காலியானபோது, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே தலா ஒரு இடத்தை தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்தன. அ.தி.மு.க. ஒரு இடத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கும் தி.மு.க. ஒரு இடத்தை ம.தி.மு.கவுக்கும் அளித்தன.
 
இந்த நிலையில், தற்போது காலியாகும் ஆறு இடங்களைப் பிடிப்பதற்கான போட்டி தி.மு.கவிலும் அ.தி.மு.கவிலும் துவங்கியுள்ளது.
 
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.கவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "தே.மு.தி.க. கூட்டணி தர்மத்தை எப்போதும் கடைப்பிடிக்கின்ற கட்சி. முதல் அமைச்சரும் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே ஒரு மாநிலங்களவை இடத்தை தே.மு.தி.கவுக்குத் தருவார் என எதிர்பார்க்கிறோம். கூட்டணி பேச்சு வார்த்தைகளின்போதே, மாநிலங்களவை இடம் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது" என்று கூறினார்.
 
ஆனால், அ.தி.மு.கவிலிருந்து இது குறித்து சாதகமான கருத்துகள் ஏதும் வெளிவரவில்லை. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம், இது குறித்து கேட்டபோது, " தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தருவது குறித்து தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும். எம்.பி பதவியை கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் முடிவெடுப்பது அதிமுக தலைமை கழகம்தான். எங்கள் கட்சியிலும் மூத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
 
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டணியிலிருந்து அ.தி.மு.கவைச் சேர்ந்த ஓ.பி. ரவீந்திரநாத் தவிர வேறு யாரும் வெற்றிபெறவில்லை.