வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (15:51 IST)

'சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா' - விலகி நிற்கும் சீன அரசு ஊடகம்

சீனாவுக்காக உளவு பார்த்ததாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா தங்களுடன் தொடர்பில் இருந்தது இந்திய ஊடகங்களால் பெரிதாக்கப்படுவது முறையற்றது என்று சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவுக்காக உளவு பார்த்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சீனாவுக்கு அளித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜீவ் சர்மா செப்டம்பர் 14ஆம் தேதி டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில், இந்தியாவில் சுமார் 10 ஆயிரம் பேரை சீனாவின் ஷென்ஸெனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஹுவா வேவு பார்ப்பதாக இந்திய நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டது.

அவருக்கு உதவியாக சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் நேபாளத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் செப்டம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஹவாலா பரிமாற்ற முறையில், சீன உளவு துறையினரிடம் தகவல்களை கொண்டு சேர்க்க ராஜீவ் சர்மாவுக்கு உதவினார்கள் என்று டெல்லி காவல்துறை கூறுகிறது.

இவர்கள் மூவர் மீதும் அலுவல்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

"இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் பதற்றம் காரணமாக இந்திய தரப்பு இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறதா என்று எனக்கு தெரியவில்லை," என்று அந்த நாளிதழின் தலைமை ஆசிரியர் ஹூ ஷிஜின் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

"குளோபல் டைம்ஸ் இதழுக்கு உலகம் முழுவதும் சுயாதீன பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள அறிவுஜீவிகள் பொதுவாகவே ஆங்கிலத்தில் நன்றாக எழுதக் கூடியவர்கள். குளோபல் டைம்ஸ் இதழின் ஆங்கில பதிப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இந்தியர்கள் எங்களுக்காகப் பணியாற்றுவது வழக்கமானதுதான்," என்றும் அவர் அக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

யார் இந்த ராஜீவ் சர்மா?

61 வயதாகும் ராஜீவ் சர்மா சுயாதீன ஊடகவியலாளராக பணியாற்றி வந்தார். இந்திய அரசின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவின் (பி.ஐ.பி) அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளராக அவர் இருந்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிறுவிய விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் எனும் சிந்தனைக் குழுவுடனும் அவர் தொடர்பில் இருந்தார் என்றும் அவர் கைது செய்யப்பட்ட பின்பு அதன் இணையதளத்தில் அவருடைய வேலைகள் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி rediff.com செய்தி இணையதளத்தில் ராஜீவ் சர்மா எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் புது டெல்லியிலிருந்து இயங்கும் விவேகானந்தா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் மூத்த ஆய்வாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இந்து செய்தி தெரிவிக்கிறது.

எஸ். குருமூர்த்தி இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார் என்று இதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.