1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (23:37 IST)

திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் தண்டனை: இந்தோனீசியாவின் புதிய சட்ட வரைவு

திருமணத்தைத் தாண்டிய உடலுறவுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான சட்டங்கள் உள்ள ஆச்சே மாகாணத்தில், கடந்த நவம்பரில் ஒரு பெண் தண்டிக்கப்பட்டார்.
 
திருமண உறவைத் தாண்டி உடலுறவு வைத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய குற்றவியல் சட்டம் இந்தோனீசியா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
 
இந்த சட்ட வரைவைத் தயாரிப்பதில் பங்குபெற்ற அரசியல்வாதியான பாம்பாங் வுரியாண்டோ, இந்தச் சட்டம் அடுத்த வாரத்தில் நிறைவேற்றப்படலாம் என்றார்.
 
இந்தச் சட்டம் இந்தோனீசிய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் பொருந்தும்.
 
இந்தச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
 
திருமணமானவர்கள் இந்தச் சட்டத்தை மீறினால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு புகார் அளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
 
அதேபோல, திருமணமாகதவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குறித்து புகாரளிக்கும் உரிமையை அவர்களின் பெற்றோருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது.
 
மேலும், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வதும் தடைசெய்யப்பட உள்ளது. மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
 
சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கான இடமாக அறியப்படும் இந்தோனீசியாவின் பிம்பத்திற்கு இந்தப் புதிய சட்டம் ஏற்படுத்த இருக்கும் பாதிப்புகள் குறித்து வணிகக் குழுக்கள் கவலை தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
 
"வணிகத் துறையைப் பொறுத்தவரை, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். மேலும், இந்தோனீசியாவில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர்களை மறுபரிசீலனை செய்ய வைக்கும்" என்கிறார் இந்தோனீசியாவின் முதலாளிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஷிந்தா விட்ஜஜா சுகம்தானி.
 
இந்தச் சட்டத்தின் முந்தைய வரைவு 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பல்லாயிரக்கணக்காணோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடு தழுவிய போராட்டம் வெடித்தது.
 
2019ஆம் ஆண்டு போராட்டம்
 
தலைநகர் ஜகார்த்தாவில் வெடித்த மோதல் உட்பட நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி மாணவர்கள் உட்பட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
காவல்துறையினர் மீது கற்களை வீசிய போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.
 
பாலியல் மற்றும் உறவுகள் மீதான இத்தகைய கடுமையான சட்டங்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
 
கடுமையான இஸ்லாமிய சட்டத்தை கொண்டுள்ள ஆச்சே மாகாணம், சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் எதிர் பாலின உறுப்பினர்களை சந்தித்தல் ஆகியவற்றுக்காக மக்களை தண்டித்துள்ளது.
 
2021ஆம் ஆண்டு ஒரு வழக்கில், இரு ஆண்கள் உடலுறவு கொண்டதாக அண்டை வீட்டார் குற்றம்சாட்டினார். அவர்கள் இருவருக்கும் பொதுவெளியில் தலா 77 கசையடிகள் காவல்துறையால் வழங்கப்பட்டன.
 
அதே நாளில், நெருக்கமாக இருந்ததாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் தலா 20 கசையடிகள் வழங்கப்பட்டன. மேலும், மது அருந்திய இரு ஆண்களுக்கு தலா 40 கசையடிகள் வழங்கப்பட்டன.