1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (15:36 IST)

ஜெர்மனியை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றிய ‘பந்தின் வளைவு’

ஒரு புல்லின் நுனி அளவிலான கால்பந்தின் வளைவு கத்தார் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் அதிரவைக்கும் முடிவுகளைத் தந்திருக்கிறது. 
 
முன்னணி அணிகளுள் ஒன்றான ஜெர்மனியை உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றியிருக்கிறது. ஜப்பான் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
 
மேலே உள்ள படத்தைப் பாருங்கள். எல்லைக் கோட்டை விட்டு பந்து தாண்டிவிட்டது என்றுதான் நினைப்பீர்கள். களத்தில் இருந்த நடுவர்களும் உதவியாளர்களும்கூட அப்படித்தான் நினைத்தார்கள். 
 
ஆனால் காணொளி உதவியுடன் நடுவர் பரிசீலித்தபோது அது எல்லையை முழுமையாகத் தாண்டவில்லை எனத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து அடிக்கப்பட்ட கோலால் ஜப்பான் அணி ஸ்பெயின் அணியை வீழ்த்த முடிந்தது.
 
என்ன நடந்தது?
கத்தாரில் நடக்கும் கால்பந்து உலகக் கோப்பையின் இ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணியும் ஸ்பெயின் அணியும் மோதின.  ஸ்பெயின் ஃபிபா தர வரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கிறது. ஜப்பான் அணி 24-ஆவது இடத்தில் இருக்கிறது.
 
ஏற்கெனவே தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த இவ்விரு அணிகளும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலை.  போட்டி தொடங்குவதற்கு முன் ஜப்பான் அணி வெற்றி பெற 14 சதவிகித வாய்ப்பும், ஸ்பெயின் அணி வெற்றி பெற 64 சதவிகித வாய்ப்பும் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. போட்டி சமனில் முடிய 22 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த மூன்றிலும் ஜப்பான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புதான் மிகக் குறைவாக இருந்தது.
 
கணிப்புகளைப் போலவே தொடக்கம் முதலே ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சில நிமிடங்களிலேயே ஜப்பானின் கோலை நோக்கி பந்தை அடிக்கத் தொடங்கினார்கள் ஸ்பெயின் வீரர்கள்.
 
11-ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்வாரா மொராட்டா முதல் கோலை அடித்தார். தலையால் முட்டி துல்லியமாக அவர் அடித்த கோல் ஸ்பெயினை முன்னிலைக்குக் கொண்டுவந்தது. அப்போது ஸ்பெயின் வெற்றிபெற 85 சதவிகித வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டது.
 
அதைப் போலவே முதல்பாதி ஆட்டத்தில் ஜப்பானால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆனால் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக தாக்குதல் ஆட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.  இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பிறகுதான் ஆட்டம் ஜப்பானின் வசமானது. 48-ஆவது நிமிடத்தில் ஜப்பானின் ரிட்சு டோன், பெனால்ட்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து முதல் கோலை அடித்தார்.  
 
50-ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் கோல் வலை வரை பந்தைக் கொண்டு வந்த ஜப்பானிய வீரர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்ற பந்தை மீண்டும் களத்துக்குள் கொண்டுவந்து கோலுக்குள் அடித்தனர். அது கள நடுவரால் கோல் என ஏற்கப்படவில்லை
 
பிறகு காணொளியில் பரிசீலித்த பிறகு ஜப்பான் அணி கோல் அடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.
 
வெளியே சென்ற பந்து ஏன் உள்ளே இருந்ததாக அறிவிக்கப்பட்டது?
ஜப்பான் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்த கோலை அடிப்பதற்கு முன்பாகவே பந்து எல்லைக் கோட்டை கடந்துவிட்டதாகவே காணொளியிலும் புகைப்படங்களிலும் தெரிந்தது. 
 
50-ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் கோலுக்கு அருகே எல்லைக் கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த பந்தை,  ஜப்பானிய வீரர் கோவ்ரு மிட்டோமா துரத்திச் சென்று களத்துக்குள் திருப்பினார்.  அதைத் தொடர்ந்து ஆவ் டனாக்கா அதை கோலாக்கினார்.
 
ஆனால் மிட்டாமோ பந்தை களத்துக்குள் திருப்புவதற்குள்ளாகவே பந்து வெளியே சென்றுவிட்டதாக களத்தில் இருந்தவர்கள் கருதினார்கள். தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அவ்வாறே நினைத்தார்கள். ஜப்பானிய வீரர்களும் அந்த கோலை முழுமையாகக் கொண்டாடவில்லை.
 
ஆனால் காணொளி நடுவர்கள் மூலம் ஆய்வு செய்தபோது பந்து களத்துக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஃபிபா விதிமுறைப்படி பந்து தரையில் இருக்கும் பகுதி மாத்திரமல்லாமல், அதன் மேற்புற வளைவையும் கணக்கில் கொள்ள வேண்டும். 
 
அதாவது பந்தின் வளைவு கோட்டுக்கு மேலே இருந்தாலும் பந்து கோட்டைத் தொட்டிருப்பதாகவே கருதப்பட்ட வேண்டும். மிட்டோமா பந்தை துரத்திச் சென்று திருப்பும்போது ஒரு புல்நுனி அளவுக்கான பந்தின் வளைவு கோட்டுக்கு மேலே இருப்பதைக் காண முடிந்தது. அதுவே ஜப்பானுக்கு கோலை பெற்றுத் தந்தது.
 
ஜப்பானின் வெற்றி எவ்வளவு முக்கியம்?
இ  பிரிவைப் பொறுத்தவரை கடைசிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஸ்பெயின் அணி முதல் இடத்திலும், ஜப்பான் அணி இரண்டாவது இடத்திலும் கோஸ்டா ரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி அணி கடைசி இடத்திலும் இருந்தன. 
 
இந்தப் போட்டியில் ஜப்பான் அணி வெற்றி பெற்றால் ஜெர்மனி அணி அடுத்தடுத்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குழு நிலையிலேயே வெளியேறும் சூழல் இருந்தது. அதற்கு வாய்ப்பில்லை என்றே முதலில் கருதப்பட்டது.
 
ஆனால் போட்டியில் ஜப்பான் வெற்றி பெற்றதால் ஜெர்மனி  அணி தனது போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முடியவில்லை. ஜப்பான் முதலிடத்திலும், ஸ்பெயின் இரண்டாவது இடத்திலும் இருப்பதால் அவ்விரு அணிகளும் அடுத்த சுற்றுக்குச் செல்கின்றன. ஜெர்மனியும் கோஸ்ட்டா ரிக்காவும் வெளியேறுகின்றன.
 
இன்றைய போட்டிகள் என்னென்ன?
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. தென்கொரியா - போர்ச்சுகல் ஆகிய அணிகள் இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு களம் காண்கின்றன. அதே நேரத்தில் தொடங்கும் மற்றொரு போட்டியில் கானா - உருகுவே அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு செர்பியா - சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் - பிரேசில் அணிகள் மோதுகின்றன.