ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (23:24 IST)

ஜி20 மாநாட்டில் நரேந்திர மோதி பேசியது என்ன?

PM Modi sad
ஜி20 நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இந்தோனீசியாவில் உள்ள பாலியில் இன்று தொடங்கியுள்ளது
 
கோவிட் பெருந்தொற்றுப் பேரிடரில் இருந்து உலகப் பொருளாதாரங்கள் மீண்டுவர உதவுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதே இதன் முக்கிய நோக்கம். ஆனால் யுக்ரேன் போரின் பதட்டங்கள் கூட்டத்தின் திசையைத் திருப்பலாம்.
 
ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி காலநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று மற்றும் யுக்ரேனில் நடக்கும் போர் காரணமாக உலகின் விநியோகச் சங்கிலி சீரழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய ''புதிய உலகத்தைஉருவாக்குவதில்'' ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு இந்தியாவால் மாற முடியுமா?
 
''கடந்த நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் உலகெங்கும் அழிவை உண்டாக்கியது. அதன்பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள் அமைதியை உண்டாக்க பெரும் முயற்சி எடுத்தனர். இப்போது அமைதிக்கான முயற்சியை எடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது,'' என்று நரேந்திர மோதி கூறினார்.
 
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சர்வதேச வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட மோதி, எரிபொருள் விநியோகத்துக்கு தடை உண்டாக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். சர்வதேச எரிசக்தி சந்தை நிலையுடன் இருக்க வேண்டும் என்று பேசினார் நரேந்திர மோதி.
 
யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு பின்னர், ரஷ்ய அதிபர் புதினைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் இந்தியா ரஷ்யாவிடம் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்துவரும் நிலையில் நரேந்திர மோதி இவ்வாறு பேசியுள்ளார்.
 
ஜி20 என்றால் என்ன? அது எதற்காக அமைக்கப்பட்டது?
 
ஜி20, உலகின் மிக முக்கியமான தொழில்மயமான மற்றும் வளரும் நாடுகளைக் கொண்டுள்ளது.
 
கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு 1999இல் உருவாக்கப்பட்ட இந்தக் குழு சர்வதேச பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்புக்கான முன்னணி மன்றமாக இருக்கும்.
 
 
இந்தக் குழு 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கொண்டது. ஸ்பெயின் எப்போதும் விருந்தினர் நாடாக அழைக்கப்படும்.
 
முன்னணி தொழில்மயமான நாடுகளின் ஜி7 குழுவுடைய விரிவாக்கப்பட்ட குழு, சீனா, பிரேசில், இந்தியா போன்ற வேகமாக வளரும் பொருளாதாரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
 
அவற்றுக்கு இடையே, ஜி20 நாடுகள் உலகின் பொருளாதார உற்பத்தியில் 85 சதவீதமும் உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. மேலும், மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன.
 
ஜி20 தலைவர்கள் குழு என்ன விவாதிக்கிறது?
 
ஜி20 தலைவர்களின் உச்சிமாநாடுகள் விவாதிக்கும் பிரச்னைகள், பொருளாதாரம், காலநிலை மாற்றம், நிலையான ஆற்றல், சர்வதேச கடன் தள்ளுபடி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 
ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு ஜி20 உறுப்பு நாடு தலைமை வகித்து, குழுவின் சந்திப்புகளுக்கான நிகழ்ச்சி நிரலை அமைக்கிறது.
 
ஜி20 உச்சிமாநாடு
 
2022ஆம் ஆண்டின் தலைமை நாடாக, பாலி உச்சி மாநாடு உலகளாவிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பெருந்தொற்றுப் பேரிடரைத் தொடர்ந்து பொருளாதார மீட்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தோனேசியா விரும்புகிறது. அதுமட்டுமின்றி, ஜி20 நாடுகள் வளம்குன்றா ஆற்றல் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் விரும்புகிறது.
 
எப்படியிருப்பினும், உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை உலக அரசியல் அச்சுறுத்துகிறது.
 
யுக்ரேன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவை ஜி20 அமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் அதிபர் விளாதிமிர் புதினின் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் யுக்ரேன் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
 
நேரில் கலந்துகொள்வதா அல்லது அவருக்குப் பதிலாக ரஷ்ய அதிகாரிகள் குழுவை அனுப்புவதா என்பது குறித்து தான் முடிவு செய்யவில்லை என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
 
 
சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வாழ்த்து தெரிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
யுக்ரேன் மீதான போரில் ரஷ்யாவுக்கு சௌதி அரேபியா நிதியுதவி செய்வதாக முன்பு குற்றம் சாட்டிய அதிபர் பைடன், கச்சா எண்ணெய் விலையை உயர்த்த ரஷ்யாவும் சௌதி அரேபியாவும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
 
குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொள்வது ஏன்? 
 
அரசாங்கத் தலைவர்கள் அடிக்கடி குழுவாகப் படம் எடுத்துக்கொள்வார்கள். 
 
 
தலைவர்கள் கையெழுத்திட்ட எந்த ஒப்பந்தங்களையும் பரவலாகக் கொண்டு சேர்க்க இதுவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் ஒளிப்படம் வெளிப்படுத்தும் ராஜ்ஜியரீதியிலான முரண்பாடு தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. 
 
2018ஆம் ஆண்டில், இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இளவரசர் முகமது பின் சல்மான் உச்சிமாநாட்டில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டார். அவர் குழுவாக எடுக்கும் ஒளிப்படத்தில் கடைசியில் நிற்க வைக்கப்பட்டார். 
 
ஜி20 வெற்றி பெற்றதா? 
 
2008, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜி20 நாடுகளின் தலைவர்களுடைய உச்சிமாநாட்டில், பெரும் நிதி நெருக்கடியின்போது தலைவர்கள் உலகளாவிய நிதிக் கட்டமைப்பை மீட்பதற்கான பல நடவடிக்கைகளை ஒப்புக்கொண்டனர்.
 
 
இந்த ஆண்டு ஜி20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கியாளர்களின் கூட்டத்தில், யுக்ரேன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் இடையிலான வாதங்கள் காரணமாக உடன்பாடு ஏற்பட்டது மிகவும் குறைவுதான். 
 
இருப்பினும், உச்சிமாநாட்டின்போது தனியாக ஒருபுறம் சந்திப்பதன் மூலம் நாடுகள் பெரும்பாலும் உடன்பாடுகளை எட்டுகின்றன. 
 
2019ஆம் ஆண்டில், ஒசாகாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஒரு பெரிய வர்த்த மோதலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர். 
 
பெரும்பாலும், உச்சிமாநாட்டைத் தொடர்ந்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். 
 
ஜி20 குழுவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக 2018இல் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பியூனஸ் அயர்ஸில் அணிவகுத்துச் சென்றனர். 
 
ஹம்பர்க்கில் 2017 உச்சிமாநாட்டின்போது முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலவரம் செய்தனர். 2018இல் ரியோ டி ஜெனீரோ, 2010இல் டொரான்டோவில் ஜி20 உச்சிமாநாடுகளின்போது ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.