புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (15:23 IST)

ஆந்திராவில் மகள்களை நரபலி கொடுத்ததாக சொல்லப்படும் பெற்றோருக்கு மனநல சிகிச்சை

ஆந்திராவில் தங்கள் மகளை மூட நம்பிக்கையின் காரணமாக கொலை செய்ததாக கூறப்படும் பெற்றோரை மதனப்பள்ளி போலிசார் திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா ராம் நாரயண அரசு பொது மருத்துவமனையில் உள்ள மனநல வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

என்ன நடந்தது?
 
ஆந்திராவில் மூட நம்பிக்கையின் காரணமாக இரு பெண்கள் தங்கள் பெற்றோர்களால் கொலை செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
 
கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களின் தந்தையான புருஷோத்தம் நாயுடு, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்துலுள்ள மதனப்பள்ளி பெண்கள் கல்லூரியில் துணை  முதல்வராக பணியாற்றுகிறார்.
 
இவரது மனைவி பத்மஜா, கல்வி நிலையம் ஒன்றின் முதல்வராக பணியாற்றுகிறார். இந்த தம்பதியினருக்கு 27 வயதான அலேக்யா மற்றும் 22 வயதான திவ்யா என்ற இரு மகள்கள் இருந்தனர்.
 
இந்த குடும்பத்தினர் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் ஷிவ் நகர் என்ற பகுதியில் கட்டப்பட்ட புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்தனர். தங்கள் வீட்டில் அடிக்கடி அவர்கள் பூஜைகள் நடத்தி வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி இரவு அவர்கள் வீட்டில் பூஜை நடைபெற்றுள்ளது
 
முதல் தகவல் அறிக்கையில், இந்த தம்பதியினர் தங்கள் மகள் திவ்யாவை திரிசூலம் மூலம் கொன்றதாகவும், பின்னர் அவரது மூத்த மகள் அலேக்யாவின் வாயில்  செம்பு தகடு ஒன்றை வைத்து அடைத்து உடற்பயிற்சி செய்யும் தம்பில்சினால் அவரையும் தலையில் அடித்தே கொன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பேசிய மதனப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவி மனோகர் ஆச்சாரி, "அவர்கள் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தது போல தெரிகிறது. தங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள் என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அது எப்படி நடக்கும் என்பதையும் அவர்களால் விளக்க  முடியவில்லை." என தெரிவித்துள்ளார்.
 
போலிசார் விசாரணை
 
கொலை குறித்த தகவல் கிடைத்ததும் மதனப்பள்ளி டி.எஸ்.பி ரவி மனோகர் ஆச்சாரி சம்பவ இடத்திற்கு வந்தார். வீட்டில் முதல் மாடியில் ஒரு பெண்ணின் உடலையும், பூஜை அறையில் மற்றொரு பெண்ணின் உடலையும் போலிசார் கண்டெடுத்தனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினர் மனநிலை சரியில்லாதவர்கள் போல காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த இருவரிடமும் மனநல நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்த உள்ளதாக பிபிசியிடம் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
 
இந்து கடவுள் படங்களுக்கு இடையே மர்மமான சில படங்களும் அந்த வீட்டில் இருந்துள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
 
அந்த பெண்களின் பெற்றோர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
முன்பாக உயிரிழந்த இருபெண்களின் தாயாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, "கொரோனா பரிசோதனைக்கான மாதிரியை நான் தர மாட்டேன்.  ஏனெனில் சிவனுக்கு அதில் உடன்பாடு இல்லை. முடியாது. நீங்கள் யார்? நான் தான் சிவன். என்னுடைய உடலிருந்துதான் கொரோனா வந்தது. தடுப்பூசியே  இல்லாமல் கொரோனா வரும் மார்ச்சில் அழிந்துவிடும்.'' என பத்மஜா தெரிவித்துள்ளார்.
 
சிசிடிவி காட்சிகள் கிடைத்ததா?
 
கொலைகள் நடந்த வீட்டின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராயவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் அனைவரும் வீட்டுக்கு வெளியில்தான்  சிசிடிவி கேமிரா வைத்திருப்பார்களே தவிர, பூஜை அறையில் வைப்பதில்லை என டி.எஸ்.பி ரவி மனோகர் கூறுகிறார். இந்த வழக்கில் தெளிவான தகவல்கள் கிடைக்க இன்னும் சில தினங்கள் ஆகலாம் என அவர் தெரிவிக்கிறார்.
 
`ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்பெறுவோம் என நம்பிக்கையில் இருந்தனர்` - காவல் துறை
 
"என் மகள்களின் உடலை அகற்றாதீர்கள். அவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்", என இறந்தவர்களின் தாய் கூறுவதை வைத்தே அவர்கள் மனநிலையை புரிந்து  கொள்ளலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
 
தங்கள் மகள்களை கொலை செய்ததை ஒப்புக்கொள்ளும் அந்த தம்பதிகள், கடந்த சில நாட்களாக யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த போது குடும்பத்தினரை தவிர யாரும் வீட்டில் இல்லை. கொலை நடப்பதற்கு முன்னதாக அவர்கள் சில பூஜைகளை செய்துள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் இருந்து  மீண்டதும் விசாரணையை துவங்க உள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.
 
சொத்துக்காக வசியம் செய்யப்பட்டார்களா?
 
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிகள் சாய் பாபாவை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"எனக்கு புருஷோத்தமை நன்றாக தெரியும். அவர் இப்படி ஒரு காரியம் செய்திருப்பதை நம்பவே முடியவில்லை.'' என புருஷோத்தம் பணிபுரியும் கல்லூரியின்  ஓட்டுநர் சுரேந்திரா கூறுகிறார்.
 
சமீபத்தில் 5 கோடி மதிப்புள்ள சொத்து பத்மஜா கைவசம் வந்ததாக அண்டை வீட்டார் ஒருவர் தெரிவிக்கிறார். சிலர் சொத்துக்காக இந்த தம்பதியினரை வசியம்  செய்து, இந்த கொலைகளை செய்ய அவர்களை தூண்டியிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நம்புகின்றனர்.
 
கொலை நடப்பதற்கு முன்பாக கொலையான திவ்யா பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவும் தற்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கொலையாவதற்கு ஒரு வாரம் முன்னரிலிருந்து, "சிவா வந்துவிட்டார். வேலை முடிந்தது," என வித்தியாசமான பதிவுகளை திவ்யா பதிவிட்டுள்ளார்.
 
வேறு யாராவது சமீபத்தில் அவர்களின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனரா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.