செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (21:50 IST)

பொள்ளாச்சி விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவு வழக்கு

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது காவல்துறையின் சிபிசிஐடி பிரிவினர் பாலியல் வல்லுறவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
 
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி , ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் அண்ணன் கொடுத்த புகார் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
 
மேலும், இந்தக் குற்ற செயல்களில் ஈடுபட்ட மணிவண்ணன் என்ற நபரை சிபிசிஐடி தேடிக் கொண்டிருந்த நிலையில் அந்த நபர் சரணடைந்தார்.
 
மணிவண்ணன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதியப்பட்ட பிரிவுகளுடன், கூடுதலாக பாலியல் வல்லுறவு குற்றத்திற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.