வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (13:42 IST)

சீனா vs அமெரிக்கா: அணு ஆயுத திறனை மேம்படுத்த சீனா அமைக்கும் ரகசிய தளங்கள் - புதிய அறிக்கை

அணு ஆயுத ஏவுகணைகளை சேமித்து வைக்கும் மற்றும் ஏவும் திறன்களை சீனா மேம்படுத்தி வருவதாக அமெரிக்க அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்திற்கு மேலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், சீனா அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் தளம் ஒன்றை அங்கு உருவாக்கி வருவதைக் காட்டுகின்றன என்று ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்ஸ் (எஃப்.ஏ.எஸ்) எனும் அறிவியலாளர்கள் கூட்டமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சீனா தனது அணுஆயுத வல்லமையை அதிகரித்து வருவது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அணு ஆயுதத் தளம் ஒன்றை சீனா உருவாக்கி வருவதாக கடந்த இரண்டு மாதங்களில் வெளியாகியுள்ள இரண்டாவது தகவல் இது.

ஏவுகணைகளைச் சேமித்து வைக்கவும், ஏவவும் உதவும் சுமார் 110 குதிர்களைக் கொண்டிருக்கும் அளவுக்கு இந்த தளம் பெரியதாக இருக்கக்கூடும்.

சீனாவின் கான்சு மாகாணத்தின் யூமென் எனும் ஊருக்கு அருகே உள்ள பாலைவனப் பகுதியில் இவ்வாறு சுமார் 120 குதிர்கள் காணப்பட்டன என்று கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

திங்களன்று வெளியிடப்பட்ட எஃப்.ஏ.எஸ் அமைப்பின் அறிக்கையின்படி ஹமி எனுமிடத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய தளம் யூமெனில் இருந்து வடமேற்கே சுமார் 380 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்றும் இதன் கட்டுமான பணிகள் மிகவும் தொடக்க நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான அளவில் உள்ள தமது அணுஆயுத கையிருப்பை இரண்டு மடங்கு ஆக்குவதற்கு சீனா முயற்சித்து வருகிறது என்று 2020ஆம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

சீனாவிடம் 200க்கும் அதிகமான அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன என்றும் அதை குறைந்தபட்சம் இரண்டு மடங்காக்க சீனா விரும்புகிறது என்றும் பென்டகன் அப்போது தெரிவித்திருந்தது.

வல்லுனர்களின் கூற்றுப்படி அமெரிக்காவிடம் சுமார் 3800 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன .

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களிடம் உள்ள ஆயுத அளவை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில் சீனா தனது அணு ஆயுத வலிமையை அதிகரித்து வரும் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் வெண்டி ஷேர்மன் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் செர்கெய் ரியப்காஃப் ஆகியோரிடையே இந்தப் பேச்சுவார்த்தை நிகழவுள்ளது. அணுஆயுதங்களை இருநாடுகளும் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்று வந்த இருதரப்பு முயற்சிகளை மீண்டும் தொடங்குவதில் முதல்படியாக இது பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை தங்களிடம் உள்ள ஆயுத அளவை கட்டுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிலும் சீனா பங்கேற்கவில்லை.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஓர் அங்கமான 'யூஎஸ் ஸ்ட்ரேடஜிக் கமேண்ட்' சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவது தொடர்பாக தனது கவலையை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

"உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது மற்றும் அதைச் சுற்றியுள்ள ரகசியத் திரை ஆகியவை குறித்து இதுநாள்வரை நாங்கள் கூறி வந்ததை இந்த இரண்டு மாத காலங்களில் இரண்டாவது முறையாக பொதுமக்கள் அறிந்துள்ளனர்," என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஷின்ஜியாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை தளத்தை முதலில் வர்த்தக நோக்கிலான செயற்கைக் கோள் ஒன்றின் படம் மூலம் கண்டறிந்தனர்.

அதன்பின்னர் செயற்கைக்கோள் புகைப்படங்களை வழங்கும் நிறுவனமான 'ப்ளானட்' எனும். நிறுவனத்தால் மூலம் அதிக துல்லியத் தன்மை வாய்ந்த படங்கள் வழங்கப்பட்டன.