1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (17:37 IST)

இரானில் 50% உயர்ந்த பெட்ரோல் விலை: கிளர்ந்தெழுந்த மக்கள்

இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்ததை அடுத்தும், பெட்ரோல் விலையை உயர்த்தியதை அடுத்தும் அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையானது குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இரான் மீது அமெரிக்க கொண்டுவந்த பொருளாதாரத் தடையை ஈடுகட்டும் விதமாக, பெட்ரோல் பொருட்களுக்கான மானியம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை, இரான் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது.
 
தாக்கப்பட்ட பெட்ரோல் கிடங்குகள்
வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் மோசமானதாகக் கூறுகின்றன அங்கிருந்து வரும் செய்திகள். மத்திய இரானில் உள்ள பெட்ரோல் கிடங்குகள் தாக்கப்பட்டதாக இரான் அரசு செய்தி முகமையான இர்னா தெரிவிக்கிறது.
 
ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் தாக்கப்பட்டதாகவும் மத்திய இரானில் உள்ள சிர்ஜான் மாகாணத்தின் ஆளுநர் கூறியதாகச் செய்திகள் கூறுகின்றன. சிர்ஜானில் மட்டுமல்ல, மஷாத், அபாடான், சிராஷ் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டம் வெடித்துள்ளது.
 
இமாம் அலி நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்திய போராட்டக்காரர்கள், போலீஸ் தங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கோஷமிடும் காணொளிகளை இணையத்தில் பார்க்க முடிகிறது.
 
இரானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி இனி, ஒரு மாதத்துக்கு 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே 15 ஆயிரம் ரியால் என்ற விலையில் கிடைக்கும். அதற்கு மேல் வாங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்குமான விலை 30 ஆயிரம் ரியால்கள்.
 
மானியம் நீக்கி விற்கப்படும் பெட்ரோலில் இருந்து வரும் வருமானம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அரசு தெரிவிக்கிறது. 75 சதவீத இரானியர்கள் அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ள இரான் அதிபர் ரூஹானி, இந்த கூடுதல் வருமானமானது அவர்கள் நலனுக்காகச் செலவு செய்யப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
 
குறைவான விலை
உலகிலேயே பெட்ரோல் விலை குறைவாக இருக்கும் நாடுகளில் இரானும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் அதிகமாக வழங்கப்படும் மானியம். இரானில் அதிகளவில் பெட்ரோல் உற்பத்தி செய்யப்படுகிறது. பல பில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருள் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.