1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஜூலை 2020 (14:34 IST)

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர், அது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நீதிமன்ற அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
தான் முகமது நபி என்று கூறி வந்த அந்த நபர் மீது தெய்வ நிந்தனை வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை பெஷாவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுட்டுத்தள்ளப்பட்ட தஹிர் அஹ்மத் நசீமுக்கு எதிராக 2018ஆம் ஆண்டு பதின்வயது நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
 
புதன்கிழமை காலை நடந்து கொண்டிருந்த விசாரணையின்போது அவர் சுட்டுத் தள்ளப்பட்டார். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. தஹிரை சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். சுட்டுத்தள்ளப்பட்டவர் "இஸ்லாத்தின் எதிரி" என்று அந்த நபர் கோபமாக கத்தும் காட்சிகள் மற்றொரு காணொளியில் பதிவாகி இருக்கிறது.
 
சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் சட்டப்படி ஒருவருக்கு மரண தண்டனை அளிக்க முடியும். ஆனால், இதுவரை யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றாலும், ஏதேனும் ஒரு வன்முறை தாக்குதலுக்கு இது வழிவகுக்கும்.