திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:51 IST)

காசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா?

காசு போதவில்லை: கடன் வாங்கும் இந்திய அரசு - எத்தனை லட்சம் கோடி ரூபாய் தெரியுமா?
 
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்திற்கு உண்டாகியுள்ள வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் 5.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது என நிதி அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
 
பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள இந்த செய்தியை மேற்கொள்காட்டி பெரும்பாலான இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
நடப்பு நிதி ஆண்டின் (2021-2022) முதல் பாதியில் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் 7.02 லட்சம் கோடி ரூபாய் நிதியை இந்திய அரசு திரட்டியது என நிதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 12.05 லட்சம் கோடி ரூபாயை சந்தையில் இருந்து திரட்டப்படும் மொத்த கடனாக வாங்க இந்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
 
அந்த தொகையில் 60 சதவிகிதமான 7.24 லட்சம் கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் முதல் பாதியிலேயே வாங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 7.02 லட்சம் கடன் மட்டுமே முதல் அரையாண்டில் வாங்கப்பட்டிருந்தது என நிதி அமைச்சகம் தெரிவிக்கிறது.
 
2021 -22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசின் மொத்த கடன் 12.05 லட்சம் கோடி ரூபாயாகவும் 9.37 லட்சம் கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சிறுமி காவலரால் மீண்டும் வல்லுறவு
கர்நாடக மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் ஒரு சிறுமி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடபா காவல் நிலையத்திற்கு பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்றுள்ளார்.
 
இதன்பின்னர், அந்த காவல் நிலையத்தின் காவலர் ஒருவர் சிறுமியின் வீட்டுக்கு செல்ல தொடங்கியுள்ளார். இதன்பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.சிறுமி கர்ப்பமடைந்த பின்னரே இதுபற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் தந்தை, அந்தக் காவலரிடம் தனது மகனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
 
சிறுமியின் தந்தை போலீசாரிடம் அளித்த புகாரை தொடர்ந்து காவலரை விசாரித்து வருகின்றனர் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
 
புதிய சுகாதார திட்டத்தை தொடக்கி வைத்தார் நரேந்திர மோதி
 
இந்தியா முழுவதும் மக்களுக்கு எண்ம வடிவிலான சுகாதார அட்டையை வழங்கும் திட்டத்தை (ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்) பிரதமா் நரேந்திர மோதி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார் என்கிறது தினமணி செய்தி.
 
மக்களின் உடல்நலன் சாா்ந்த விவரங்களை எண்ம வடிவாக்கும் நோக்கில் ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சுகாதாரத் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
 
ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது அறிவித்தார். இந்தத் திட்டம் 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.
 
இத்திட்டத்தை நாடு முழுவதும் தொடக்கி வைப்பதற்கான நிகழ்ச்சி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.