வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (18:08 IST)

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்!

கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பத்துடன் உள்ளதாக அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சரான சோ சோன்-ஹுய் தெரிவிக்கையில், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு விரிவான பேச்சுவார்த்தையை தொடங்க தாங்கள் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
 
அண்மையில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த நம்பிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரான மைக் பாம்பேயோ வெளிப்படுத்திய பிறகு வட கொரிய அமைச்சரின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அதேவேளையில், வட கொரிய அமைச்சர் சோவின் இந்த கருத்து வெளிவந்ததற்கு சில மணிநேரங்களில், குறுகிய தூரம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் வட கொரியா தரப்பில் இருந்து ஏவப்பட்டது.
 
சமீப மாதங்களில் வட கொரியா நடத்திவரும் ஏவுகணை சோதனைகளில் இது மிகவும் அண்மைய சோதனையாகும். வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டு நடைபெற்றது.
 
இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் இந்த இரு தலைவர்கள் இடையே இரண்டாவது கட்ட சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்தது.
 
மிக அண்மையில் கடந்த ஜூன் மாதத்தில், வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தார்.
 
ராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.