வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (15:29 IST)

வட கொரியா சுற்றுலா: பழைய விடுதிகளில் புதிய வசதிகள் - ஆனால் இதற்கு நீங்கள் தயாரா?

வட கொரியா என்றாலே அது பெரிதும் அறியப்படாத ஒரு நாடாகவே உள்ளது… பலருக்கு அந்நாட்டிற்குள் சுற்றலா செல்ல இயலுமா என்ற சந்தேகம் கூட இருக்கலாம்? அதற்கு ஒரு விதத்தில் விடையளிக்கிறது ஜேம்ஸ் ஸ்குலினின் புத்தகம்.

ஆம். அந்த புத்தகத்தில் வட கொரிய தலைநகர் ப்யொங்யாங்கில் உள்ள தனித்துவமான, 70களின் கட்டட அமைப்புகள் கொண்ட விடுதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரிதும் அறிந்திடாத வட கொரிய கலாசாரத்தில் ஒளி பாய்ச்சுவது போல அமைந்துள்ளது.

பொதுவாக வட கொரியாவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வது அதிகாரிகளால் கூர்ந்து கவனிக்கப்படும்.

நாட்டின் சுற்றுலா துறை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அரசு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவர்.

சுற்றுலா பயணிகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். அதன் பொருள் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஒரே மாதிரி திட்டத்தைதான் பின்பற்ற முடியும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எழுத்தாளர் ஜேம்ஸ் ஸ்குலின் மற்றும் புகைப்பட கலைஞர் நிக்கோலே ரீட், வட கொரிய தலைநகர் ப்யொங்யாங்கில் 5 இரவுகள் தங்கி 11 சர்வதேச விடுதிகளுக்கு சென்றனர். இவர்கள் `ப்யொங்யாங் விடுதிகள்` என்ற புத்தகத்தை எழுதி தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஸ்குலின், ஒரு சுற்றலா வழிகாட்டி. இவர் ப்யொங்காங்கிற்கு எட்டு முறை பயணம் செய்துள்ளார். அவர் வட கொரிய விடுதிகள் குறித்து பேசும்போது, விடுதிகளைப் பொறுத்தவரை அங்கு பெரிதாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், விருந்தினர்கள் ஒரே மாதிரி கட்டுப்படுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

உலக நாடுகளிடமிருந்து சற்று தள்ளியிருக்கும் வட கொரியாவை பொறுத்தவரை, விடுதிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே அதற்கான விளம்பரங்கள் மிகவும் குறைவு என்கிறார் அவர்.

இந்த விடுதிகள், பல கொரிய போரில் ப்யொங்யாங்கின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்ட பிறகு 1979 மற்றும் 1980களில் கிழக்கு ஜெர்மனி மற்றும் சோவியத் யூனியனால் கட்டப்பட்டவை.

இந்த விடுதிகளை பார்க்கும்போது, எனக்கு உலகமயமாக்கலுக்கு முந்தைய உலகம் நினைவுக்கு வருகிறது என்கிறார் ஸ்குலின்.

யார் வருகிறார்கள்?

வட கொரியா பிற உலக நாடுகளிமிருந்து விலகி இருப்பதால், பலர் வட கொரியாவின் விடுதிகள் காலியாக யாருமற்றதாக இருக்கும் என நினைப்பார்கள்.

ஆனால் ஸ்குலின் மற்றும் ரீட் கடந்த வருடம் வட கொரியாவுக்கு பயணம் சென்றபோது அதற்கு எதிர்மறையான காட்சியைதான் பார்த்தார்கள். அந்த விடுதிகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருந்தன. ஆனால் கிட்டத்தட்ட அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

"எங்களின் புகைப்படங்களில் அந்த விடுதிகள் தனித்து இருப்பது போல தெரியலாம். ஆனால் அது உண்மையல்ல. விடுதிகள் நிரம்பி வழிந்தன. ஆனால் வட கொரியாவுக்கு நீங்கள் சுற்றுலா பயணியாக சென்றால் நீங்கள் காலையில் 8 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். பின் ஒரு அருங்காட்சியகத்திற்கும், புராதன சின்னங்கள் நிறைந்த இடத்திற்கும் அழைத்து செல்லும் ஒரு பேருந்தில் நீங்கள் செல்ல வேண்டும்," என்கிறார் ஸ்குலின்.

"நீங்கள் நினைத்தாலும் அதிக நேரம் தூங்க முடியாது. ஏனென்றால் ஒரு முடிவு செய்யப்பட்ட சுற்றலாவின் நீங்கள் ஒரு பகுதியாக இருப்பீர்கள். எங்களின் திட்டம் சிறப்பாக இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு விடுதியாக எங்களை அழைத்து செல்லும் ஒரு சுற்றுலா வழிகாட்டி எங்களுடன் இருந்தார்," என்கிறார் ஸ்குலின். கோவிட் 19 தொற்றுக்கு முன்புவரை, வட கொரியாவின் சுற்றலா துறை ஏற்றத்துடன் இருந்தது. ஒவ்வொரு வருடமும் சீனாவிலிருந்து சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வட கொரியாவுக்கு பயணம் செய்தனர். பிற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8000 முதல் 10,000 ஆக இருந்தது.

சீனா 1970களில் எப்படி இருந்தது என்பதை காணவே சீனாவிலிருந்து பலர் வட கொரியாவுக்கு பயணம் செய்தனர் என ஸ்குலின் அறிந்து கொண்டார்.

"கிழக்கு ஜெர்மனி, ரஷ்யா மற்றும் முன்னாள் கிழக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் கடந்த கால வரலாற்றை காணவே வட கொரியாவுக்கு வந்தனர். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த எங்களை போன்றோர், வட கொரியாவின் தனித்துவமான கட்டட வடிவமைப்பை காண வருகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

விடுதிகள் எப்படி இருக்கும்?

அந்த விடுதிகளில் பார்கள், நீச்சல் குளம், ஸ்பாக்கள், அனைத்தும் இருக்கும். ஆனால் அங்கு வைஃபை வசதி இருக்காது, சேவை செய்யும் பணியாளர்கள் இருக்க மாட்டார்கள்.

சுற்றுலா துறை கட்டமைப்பானது பல தசாப்தங்கள் பழமையானது. எனவே பல சர்வதேச சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கும் விஷயங்கள் அங்கு இருக்காது. பொதுவாக விடுதிகளின் வெளிப்புற தோற்றங்கள் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஆனால் உள் அறைகள் வேறு, வேறு வண்ணங்களில் வித்தியாசமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, `கோர்யோ` என்ற விடுதி அறை, 70களில் வரும் கரோக்கி அறையை போன்று காட்சியளிக்கும்.

"இந்த விடுதி அறைகள் அந்நாட்டின் வழக்கமான கட்டட அமைப்பிலிருந்து மாறுபட்டவையாக தோன்றியது. அதேபோல இந்த அறையை வடிவமைத்தவர், மேற்கத்திய நாடுகளுக்கோ ஜப்பானிற்கோ சென்றிருக்க முடியாது எனவே முழுக்க, முழுக்க அவர் தனது கற்பனையில்தான் அவற்றை வடிவமைத்துள்ளார்," என்கிறார் ஸ்குலின்.

எனவே வடகொரியாவில் ஒருவர் தன் தனித்துவத்தை காட்டுவதற்கான வழிகள் உள்ளன என்பதை இந்த அறைகள் காட்டுகின்றன என்கிறார் ஸ்குலின்.