1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:11 IST)

நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு: இந்த கட்டடம் வந்த கதை என்ன?

twin tower
இன்று இடிந்து தரைமட்டமாகப்போகிறது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுரம். டெல்லி அருகே அமைந்துள்ளது இந்த இடம்.

318 அடி உயரமுள்ள இந்த கோபுரம் விதிகளை மீறி கட்டப்பட்ட காரணத்துக்காக இடிக்கப்பட உள்ளது. அப்படியானால், இவ்வளவு உயரம் கட்டி எழுப்பப்படும் வரை அது தெரியவில்லையா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அடிக்கல் நாட்டியது முதல் இடிக்கப்படுவது வரை இந்த கோபுர விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை காலவாரியாகப் பார்க்கலாம்.

அபெக்ஸ் (32 அடுக்கு), சியேன் (29 அடுக்கு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரட்டை கோபுரங்கள், இந்திய தலைநகரில் இருக்கும் உயரமான குதுப் மினாரை விட உயரமானவை. கட்டுமான விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த கோபுரத்துக்காக நடத்தப்பட்ட சட்டப் போராட்டம் மிக நீண்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரையிலான போராட்டம் அது. நாம் தொடங்க வேண்டிய ஆண்டு 2004.

2004 முதல்

நொய்டா என்ற தொழில் நகரத்தை கட்டமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றைக் கட்ட, 2004ஆம் ஆண்டு சூப்பர்டெக் என்ற நிறுவனத்துக்கு நொய்டா (NOIDA- New Okhla Industrial Development Authority) ஒரு இடத்தை வழங்கியதில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம்.

2005ஆம் ஆண்டு, தலா 10 தளங்களுடன் கூடிய 14 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, நொய்டா கட்டுமான நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் 1986 இன் படி ஒப்புதல் அளிக்கப்பட்டது. 10 தளங்கள் கொண்ட 14 அடுக்குமாடிக் கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், 37மீட்டருக்கு மேல் உயரம் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி, 14 அடுக்குமாடி குடியிருப்புகளும் ஒரு வணிக வளாகத்துடன் கூடிய தோட்டமும் கட்டப்பட வேண்டும்.

2006ஆம் ஆண்டு, கட்டுமானத்துக்காக கூடுதல் நிலம் நிறுவனத்துக்கு தரப்பட்டது. ஏற்கனவே சொல்லப்பட்ட அதே விதிகளுடன், மேலும் இரண்டு கட்டடங்கள் (10 தளங்கள்) தோட்டம் இல்லாமல் கட்டப்பட வேண்டும் என்று புதிய திட்டம் தீட்டப்பட்டது.

இறுதியாக 2009ஆம் ஆண்டு, 40 தளங்களுடன் கூடிய இரண்டு அடுக்குமாடி கோபுரங்கள் கட்ட இறுதித் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டத்துக்கு அப்போது ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

வழக்கு தொடக்கம்

2011 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோபுரங்களின் கட்டுமானத்தின்போது, உத்தரபிரதேச அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் 2010 மீறப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.

தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன.

தோட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமாக இந்த இரண்டு கோபுரங்களும் எழுப்பப்பட்டுள்ளன என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.

2012 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன்பாக, நொய்டா நிர்வாகம், 2009ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட திட்டத்துக்கு (40 தளங்களுடன் கூடிய இரண்டு அடுக்குமாடி கோபுரங்கள்) ஒப்புதல் அளித்தது.

இடித்து விடுங்கள்

இந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்படி,இந்த கோபுரங்களை இடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இடிக்கும் செலவை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே இங்கு வீடு வாங்கியவர்களுக்கு 14% வட்டியுடன் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதே ஆண்டின் மே மாதத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து, (விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் கட்டுமானம் நடந்தது என்று கூறி) உச்ச நீதிமன்றத்தை நாடியது சூப்பர்டெக் நிறுவனம்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், விதிகள் மீறப்பட்டுள்ளன என்றும் உறுதி செய்தது.

இதன் விளைவாகவே, இன்று ஆகஸ்ட் 28, 2022 அன்று மொத்தமாக இடிக்கப்பட உள்ளது இந்த இரட்டை கோபுரம்.
 

மக்கள் நிலை என்ன?

இந்தியாவில் வானளாவிய கட்டடங்களை இடிப்பது எளிதானதல்ல. 2020ஆம் ஆண்டு, கேரளாவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்ட சுமார் 2,000 பேர் வசித்த இரண்டு ஏரிக்கரை சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை, அதிகாரிகள் தகர்த்தார்கள். ஆனால், அதைவிட நொய்டாவில் மேற்கொள்ளப்படும் கட்டட இடிப்புகளின் அளவும் அவை உருவாக்கியுள்ள மனப் பதற்றங்களும் முன்னெப்போதும் காணாதவை.

அதற்கு அருகிலுள்ள கட்டடங்களில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே தங்கள் வீடுகளை விட்டு நகரத்திலுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்குவதற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

"மக்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கிறார்கள். தங்களுடைய குளிரூட்டல் பெட்டிகளை மூடி வைக்கிறார்கள். சுவர்களில் பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கழற்றுகிறார்கள். நாங்கள் அந்தக் கட்டடங்களைப் பூட்டுகிறோம். இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடந்ததில்லை," என்று இரட்டை கோபுரங்களுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தின் அன்றாட விவகாரங்களுக்கான நிர்வாக சங்கத்தின் தலைவர் எஸ்.என்.பைரோலியா கூறுகிறார்.

வானளாவ உயர்ந்துள்ள கட்டடங்கள் ஒருகாலத்தில், வருங்கால வாங்குவோருக்கான பரிபூரண ஆடம்பர வாழ்வுக்கான உறுதியை வழங்கின. தனியார் டெவலப்பரான சூப்பர்டெக், சியான் 37 மாடிகள் உயரமான கட்டடமாக, ஒரு 'சின்னமாக' இருக்கும் என்றும் ஏபெக்ஸ் பால்கனியில் நின்று பார்த்தால் "பளபளக்கும் நகரம்" கீழே தெரியும் என்றும் உறுதியளித்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி அந்த வாக்குறுதிகள் அனைத்தும் இடிபாட்டின் தூசியாகும்.