1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (07:48 IST)

உணவு இல்லை, ஆபத்தில் 50 லட்சம் மக்கள், உடனடி உதவி தேவை - ஐநா

எத்தியோப்பிய நாட்டின் வடக்குப் பகுதியில் அரசுப் படைக்கும், டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் மத்தியில் நடக்கும் போரால் அப்பிராந்தியமே பெரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

அப்பிராந்தியத்தில் வாழும் லட்சக் கணக்கான மக்களுக்கு உதவிகள் சென்று சேரவிலை என ஐக்கிய நாடுகள் சபையே கூறியுள்ளது. டீக்ரே பிராந்தியத்தில் உதவிகள் தடுக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது ஐநா சபை.
 
உதவிகள் டீக்ரே பிராந்தியத்தில் தடுக்கப்படுவதில்லை என எத்தியோப்பிய அரசு தரப்பிலிருந்து ஒரு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
கடந்த பத்து மாதங்களாக டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிப் படையினருக்கும், அரசுப் படைகள் மற்றும் அதன் கூட்டணிப் படைகளுக்கும் இடையில் போர் நடந்து வருகிறது. எனவே பலரும் மிக அபாயகரமான நிலையில் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
 
"பல லட்சக் கணக்கானோர் எங்கள் உணவு, ஊட்டச்சத்து, மருந்து மற்றும் பல முக்கிய உதவிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்" என ஐக்கிய நாடுகள் சபையின் எத்தியோப்பியாவின் மனிதாபிமான பணிகள் துறையின் ஒருங்கிணைப்பாளர் க்ரான்ட் லெய்டி கூறினார்.
 
கடந்த பல ஆண்டுகளில் பார்த்திராத, பஞ்சம் போன்ற சூழலைத் தவிர்க்க வேண்டுமானால் சுமார் 52 லட்சம் பேருக்கு உடனடியாக உதவிகள் தேவை என ஐக்கிய நாடுகள் சபை கணக்கிட்டுள்ளது.
 
டீக்ரே பிராந்தியத்துக்குள் உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள், போக்குவரத்தில் சிரமங்கள் இருக்கின்றன என்கிறார் லெய்டி.
 
இப்போதைக்கு டீக்ரே பிராந்தியத்துக்குள் உதவிப் பொருட்களோடு வரும் வாகனங்கள் உள்ளே செல்ல அஃபர் என்கிற, டீக்ரேவுக்கு அருகிலுள்ள பிராந்தியம் மட்டுமே ஒரே நில வழி. ஆனால் போக்குவரத்து மற்றும் அதிகாரிகள் வாகனத்தை பிடித்து வைப்பது போன்ற பிரச்சனைகளால் உதவிகள் சென்று சேர்வது தாமதமாகிறது.
 
ஒவ்வொரு நாளும் டீக்ரே பிராந்தியத்தில் 100 டிரக் அளவுக்கு உதவிப் பொருட்கள் சென்று சேர வேண்டும். ஆனால் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஒரு டிரக் கூட சென்று சேரவில்லை என உதவியாளர்கள் கூறுகின்றனர்.
 
பல இடங்களில், மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க உணவு இல்லாமல் உதவி செய்து வரும் முகமைகள் தவிக்கின்றன.
 
முன்பு டீக்ரே பிராந்தியத்துக்கான உதவிகளை தடுப்பதில்லை எனக் கூறி வந்த எத்தியோப்பிய அரசு, சமீபத்தில் உதவி செய்யும் முகமைகளின் பாதுகாப்பு கருதி வருந்துவதாகக் கூறியது.
 
செப்டம்பர் 02ஆம் தேதி, அடிஸ் அபாபாவில் செய்தியாளர்களைச் சந்தித்த எத்தியோப்பிய பிரதமரின் செய்தித்தொடர்பாளரான பில்லென் செயோம், உதவிப் பொருட்கள் டீக்ரே நோக்கி சென்று கொண்டிருப்பதாகக் கூறியதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையையும் குறைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
 
எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மத்தின் அரசு மற்றும் டீக்ரே பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் பல மாதங்களாக நிலவி வந்த பிரச்சனை, கடந்த 2020 நவம்பரில் போராக வெடித்தது.
 
இப்போரில் ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. லட்சக்கணக்கானோர் தங்கள் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிலர் சூடானுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
 
டீக்ரேவில் தொடங்கிய போர் தற்போது எத்தியோபியாவின் அஃபார் மற்றும் அம்ஹாரா ஆகிய பிராந்தியங்களிலும் பரவி இருக்கிறது.
 
டீக்ரே படையினர் அம்ஹாராவில் இருக்கும் தங்களின் சேமிப்பு கிடங்கை கொல்லையடித்துவிட்டதாக, இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் மனிதாபிமான முகமையின் தலைவர் கூறினார். அவ்வமைப்பு இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை.
 
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை எத்தியோப்பிய அரசு தீவிரவாத அமைப்பு எனக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
 
டீக்ரே சிக்கலின் பின்னணி
 
2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.
 
அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
 
2019ம் ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களின் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அமைத்தார் அவர். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டிபிஎல்எஃப் எனப்படும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.
 
2020 செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.
 
அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதுகிறது.
 
டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு எல்லையைக் கடந்துவிட்டது என்றும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார் அபிய் அகமது. ஆனால், அந்த ராணுவ முகாம் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்றது டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி.
 
இதனிடையே டீக்ரே மக்கள் விடுதலை முன்னணியை வீழ்த்திவிட்டதாக எத்தியோப்பியா அறிவித்தது. ஆனால், சண்டை தொடர்ந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.