1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (23:57 IST)

ரஷ்யாவுக்கு விரைவில் திரும்புகிறார் நவால்னி - அதிபர் புதினை சந்திக்க திட்டமா?

ரஷ்யாவில் நச்சு ரசாயனம் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் தாயகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
ஜெர்மன் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு, சுவாசக்கருவிகள் உதவியின்றி முதன் முதலாக அவரால் இன்று சுயமாக மூச்சு விட முடிந்தது.

 
உடல் மெலிந்த நிலையில் மருத்துவமனை அறையில் தன்னை சந்திக்க வந்த அவரது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் நவால்னி.

 
அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கிரா, நவால்னி விவகாரத்தில் மற்றவர்கள் வேறு மாதிரி நடக்கும் என எதிர்பார்ப்பது எனக்கு புதிராக உள்ளது என்று கூறியுள்ளார்.

 
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சைபீரியாவில் இருந்து விமானத்தில் மாஸ்கோ நோக்கி சென்றபோது, நடுவானில் திடீரென அலெக்ஸே நவால்னி சுயநினைவை இழந்தார். இதையடுத்து பாதி வழியில் விமானம் தரையிறக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் தீவிர விமர்சகரான நவால்னியை கொலை செய்ய ரஷ்ய அரசு முயற்சிப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினார்கள். ஆனால், அதை அதிபர் மாளிகை திட்ட
வட்டமாக மறுத்து வருகிறது.

 
இந்த நிலையில், ஜெர்மன் அரசின் தலையீ்ட்டை அடுத்து ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நவால்னி, அங்குள்ள மருத்துவமனையில் அரசு கண்காணிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பெர்லினில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இதற்கிடையே, நவால்னிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது ரத்தத்தில் நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் அடங்கிய விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.

 
இதையடுத்து, இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ரஷ்ய அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கல் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அலெக்ஸே நவால்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல், ரஷ்யாவில் உள்ள அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 
அவரது செய்தித்தொடர்பாளர் கிரா யார்மிஷிடம்,நவால்னி குணம் அடைந்து வருவதால் ரஷ்யாவுக்கு மீண்டும் திரும்புவாரா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதற்கு பதில் அளித்துள்ள அவர், இது பற்றி எல்லா செய்தியாளர்களும் என்னிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு அதைத்தவிர வேறு தேர்வே இல்லை என்று அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
இதேபோல, நவால்னியும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆதரவாளர்களுக்காக ஒரு இடுகையை பதிவிட்டுள்ளார். "நான் நவால்னி பேசுகிறேன். உங்களை எல்லாம் மிகவும் பிரிந்துள்ளதாக உணர்கிறேன். இப்போது என்னால் முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், ஒரு நாள் முழுவதும் எனது சொந்த முயற்சியில் கருவிகளின்றி மூச்சு விட முடிந்திருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

 
ரஷ்யாவுக்கு நவால்னி திரும்பியவுடன் அதிபர் விளாதிமிர் புதினை சந்திப்பாரா என்று அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃபிடம் கேட்டபோது, அத்தகைய சந்திப்பு நடப்பதற்கான அறிகுறியே இல்லை. அப்படி ஒரு சந்திப்பு நடக்காது என்றே நான் நம்புகிறேன் என்று கூறினார்.