வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (14:30 IST)

நாங்மைதெம் ரத்தன்பாலா தேவி: இந்திய பெண்கள் கால்பந்து அணியின் `நுரையீரல்`

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஒரு சாதரண குடும்பத்தில் பிறந்த நாங்மைதெம் ரத்தன்பாலா தேவி, சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக வேண்டும் என்ற தனது கனவில் நீண்ட தூரம் கடந்து வந்துள்ளார்.

இளம் வயதில் தனது பகுதியில் உள்ள சிறுவர்களுடன் கால்பந்து விளையாட தொடங்கினார் ரத்தன்பாலா தேவி. முதலில் விளையாட்டுத்தனமாக தோன்றிய கால்பந்து பிறகு அதுவே லட்சியமாக மாற, மைதானத்தில் அதிக நேரம் செலவிட தொடங்கினார்.

தடைகளை தாண்டி வெற்றி

ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் தேவியின் தந்தை. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு அவருடையது. நிதி நெருக்கடி இருந்தபோதும் தனது லட்சியத்திற்கு முழு ஆதரவு அளித்து வரும் தந்தை தனக்கு ஒரு ஹீரோ என்கிறார் தேவி. இந்தியாவிற்கு விளையாடும் அவரின் லட்சியத்தை நிறைவேற்ற தனது உறவினர்களும் அதீத ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கிறார் தேவி.

குடும்பத்தின் ஆதரவுடன் இம்பாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (Sports Authority of India) பயிற்சி மையத்தில் இணைய முடிவு செய்தார் தேவி. இருப்பினும் அந்த குழு போட்டிகளில் பங்கு பெறுவது இல்லை என்பதால் அது தனக்கு போதுமானதாக இல்லை என நினைத்தார் தேவி.

எனவே உள்ளூர் கால்பந்து கிளப்பான KRYHPSA கால்பந்து கிளப்பில் சேருகிறார். அங்கு அவருக்கு பயிற்சியாளர் ஓஜா சஓபா பயிற்சியளிக்கிறார். அந்த கிளப்பில் சிறந்த பயிற்சி திட்டங்கள் இருந்தது என்றும், அந்த அணி பல போட்டிகளில் பங்கேற்றது என்றும் கூறுகிறார் தேவி. மேலும் அந்த கிளப்பில் இருந்தது தேவியின் கால்பந்து திறனை மேம்படுத்தியது.

சிறகு முளைத்த கனவு

தேவியின் உள்ளூர் போட்டிகள் விரைவில் அவருக்கு மணிப்பூர் மாநில அணியில் இடம் கிடைக்க வைத்தது. மேலும் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் அனைத்து விதமான வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்றார். 2015ஆம் ஆண்டு இந்திய பெண்கள் ஜூனியர் அணியில் பங்கு பெற்றார். அங்கு சிறப்பாக விளையாடி, பலமுறை போட்டியின் சிறந்த வீராங்கனை என்ற பரிசைப் பெற்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு தனது கனவான, இந்தியாவின் தேசிய சீனியர் அணியில் பங்குபெறும் தனது இலக்கை அடைந்தார். இந்திய அணியில் அவர் மிட் ஃபீல்ட் இடத்தில் இருந்து எதிர் அணியை தடுக்க வேண்டும். சட்டென அவர் எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவுகள் எதிரணியை அச்சுறுத்தியது.

2019ஆம் ஆண்டு நேபாளத்தில் 5ஆவது எஸ்ஏஎஃப்எஃப் சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற இந்திய பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்தார் தேவி. அதே வருடம் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். 2019ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற கோட்டிஃப் பெண்கள் கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் இரு கோல்களை அடித்தார் தேவி.

இதுமட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது ஹூரோ இந்தியன் பெண்கள் லீக் போட்டியில் வளர்ந்து வரும் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு அதாவது 2020ஆம் ஆண்டில் அதே போட்டியில் சிறந்த வீராங்கனை விருதினை பெற்றார். தனது KRYHPSA அணியை அந்த தொடரின் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தார் தேவி.

தேவி பெற்ற பாராட்டுகள்

2020ஆம் ஆண்டிற்கான அனைந்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் வளர்ந்து வரும் வீராங்கனை விருது, இதுவரை தேவிக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் வலைதளத்தில் தேவி குறித்த பக்கத்தில், இந்திய கால்பந்து அணியின் `நுரையீரல்` என தேவியை குறிப்பிட்டுள்ளனர்.

தனது லட்சியத்தை அடைய ஒவ்வொரு நாளும் தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறி வருவதாக தெரிவிக்கிறார் தேவி. ஒருநாள் சர்வதேச பிரீமியர் கிளப்பிற்காக விளையாட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

(மின்னஞ்சல் மூலம் ரத்தன்பாலா தேவிக்கு பிபிசி அனுப்பிய கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் மூலம் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)