செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (21:42 IST)

பாலியல் வல்லுறவு, கொலை: பெண் கால்நடை மருத்துவரின் கடைசி உரையாடல்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இரு லாரி ஓட்டுநர்களும் இரு லாரி கிளீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவிக்கிறது.
 
பாதிக்கப்பட்ட இளம் பெண் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மஹபூப்நகர் மாவட்டத்தின் நவாப்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார்.
 
காவல்துறையினர் அளித்த தகவலின்படி, புதன்கிழமை மாலை 6 மணியளவில் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான கச்சிபவுலி செல்ல, தொண்டுப்பள்ளி சுங்கச்சாவடி அருகே தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாடகை கார் ஒன்றில் மாதாபூர் சென்றுள்ளார்.
 
பிறகு 9 மணி அளவில் சுங்கச்சாவடிக்கு திரும்பி வந்து பார்க்கும்போது, அவரது இருசக்கர வாகனத்தின் டையர் பஞ்சர் ஆகியுள்ளது. அப்போது அருகில் இருந்து சிலர் உதவி செய்ய வந்ததாகவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் தன் சகோதரியிடம் செல்பேசியில் கூறியுள்ளார்.
 
இரவு 9.22 மணியளவில் கொல்லப்பட்ட பெண் தனது சகோதரியை செல்பேசி மூலம் அழைத்ததாகவும், 9.44 மணிக்கு அவரது செல்பேசிக்கு மீண்டும் அழைத்தபோது அது அணைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
 
கொல்லப்படும் முன் சகோதரியிடம் கூறிய இளம் பெண்
 
உயிரிழந்த பெண் அவரின் சகோதரியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது, யாரோ ஒரு லாரி ஓட்டுநர் தனது இரு சக்கர வாகனத்தை பழுது நீக்கித் தர முன்வந்ததாகவும், தான் உதவியை மறுத்தபிறகும் பின்தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
 
அந்த உரையாடலில், "இன்று நீ அலுவகம் சென்று வந்துவிட்டாயா," என்று கொல்லப்பட்ட பெண் கேட்டுள்ளார். அவரின் சகோதரியும் "ஆம் சென்றேன் என்று கூறியுள்ளார்.
 
பிறகு என்னிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இரு, என்ன பிரச்சனை என்று நான் கூறுகிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
அதற்கு அவரின் சகோதரி எதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாயா என்று கேட்டுள்ளார். பதிலுக்கு இந்த பெண் ,''நான் ஏற்கனவே சொன்னதுபோல , என் வண்டியை சுங்கச்சாவடி அருகே நிறுத்த அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை, எனவே புற வழி சாலையில் நிறுத்தினேன். தற்போது டையர் பஞ்சர் ஆகியுள்ளது,'' அதற்கு அவரின் சகோதரி வண்டியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடு என கூறியுள்ளார்.
 
''வண்டியை இங்கேயே விட்டுவிட்டால், காலை எப்படி எடுக்க முடியும்'' என்று கொல்லப்பட்ட பெண் கேட்டுள்ளார். எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம், நீ அங்கிருந்து வேறிடத்திற்கு சென்றுவிடு என்று அவரின் சகோதரி எச்சரித்துள்ளார்.
 
அப்போதும் இந்த பெண் அங்கிருந்து கிளம்ப மறுத்து, யாரை வைத்து வண்டியை எடுக்க முடியும் என கேட்டுள்ளார். மெக்கானிக்கை வைத்து வண்டியை சரி செய்து எடுத்து கொள்ளலாம் என அவர் சகோதரி கூறியுள்ளார்.
 
அப்போதுதான் நடந்தவற்றை பாதிக்கப்பட்ட இந்த பெண் விவரிக்கிறார். ''லாரி ஓட்டுநர் உள்ளிட்ட சிலர் இங்கு உள்ளனர். ஏற்கனவே அவர்களில் ஒருவர் இங்கு வந்து என் வண்டியின் பழுதை சரி பார்க்கிறேன் என கூறி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பிறகு சரி செய்ததாக வந்து வண்டியை கொடுத்தார். ஆனாலும் என் வண்டி சரியாகவில்லை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு,'' என்று பதற்றமாக பேசியுள்ளார்.
 
அதன் பின்னரும், அங்கிருந்த ஆண்கள் மற்றொரு பையனை அனுப்பி, வண்டியை வேறு ஒரு கடைக்கு எடுத்து சென்று சரி செய்வதாக கூறி எடுத்து சென்றுள்ளனர். ஆனால் வண்டியை திரும்ப கொண்டு வராததால், அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுவிட்டதாகவும், அவரை சிலர் பின் தொடர்ந்ததாகவும், ''என்னை பேய் மாதிரிப் பார்க்கிறார்கள்'' என்றும் கூறியுள்ளார்.
 
பிறகு பயமாக இருக்கிறது என பல முறை கூறியுள்ளார். அவரது சகோதரியும் தயவுசெய்து சுங்கச்சாவடி அருகே சென்றுவிடு என்று பல முறை வற்புறுத்தினார். சுங்கசாவடி அருகே பலர் இருப்பார்கள், டிக்கெட் கவுண்டர் அருகே நின்றுகொள் என்று அறிவுறுத்தினார். பதிலுக்கு அங்கு உள்ளவர்கள் என்னை ஒரு மாதிரிப் பார்ப்பார்கள், அங்கு செல்ல முடியாது என கூறியுள்ளார்.
 
எனக்கு அழணும் போல இருக்கிறது என்று அந்த பெண் கூறியுள்ளார். ''நீ ஏன் இந்த நேரத்தில் அங்கு சென்றாய்?'' என அவர் சகோதரி கேள்வியும் கேட்டுள்ளார்.
 
அதற்கும் அவர் ''வண்டியை திரும்பி கொண்டுவரும் வரை என்னிடம் பேசிக்கொண்டே இரு, எனக்கு பயமாக இருக்கிறது'' என கேட்டுள்ளார். ''அது வரை எப்படி என்னால் பேச முடியும், எனக்கு வேலை இருக்கிறது, நான் திரும்ப அழைக்கிறேன், நீ சுங்க சாவடி அருகே சென்றுவிடு'' என கூறியுள்ளார் அவரது சகோதரி.
 
கடைசியாக 5 நிமிடம் என்னிடம் பேசு என அழுதுக்கொண்டே இந்த பெண் கேட்டுள்ளார். நீ நாளை சென்றிருக்கலாமே என அவரின் சகோதரி கேட்டதற்கு, என்ன செய்வது எனக்கு வேலை இருக்கிறது. நாளை ஆய்வு நடைபெறவுள்ளது, என்று பதிலளித்துள்ளார்.
 
கடைசியாக கொல்லப்பட்ட பெண், என்னிடம் பேசு என அழுதுகொண்டே கேட்டுள்ளார். அதற்கு நான் திரும்ப அழைக்கிறேன் என மூன்று முறை கூறிவிட்டு, அவரின் சகோதரி அழைப்பை துண்டித்துவிட்டார்.
 
பிறகு இரவு 9.45 மணிக்கு திரும்ப அழைத்தபோது, அவரின் செல்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அந்த பெண் கூறிய அந்த சுங்கச்சாவடி இருந்த இடத்திற்கு அவரது குடும்பத்தினர் விரைந்தனர். ஆனால் அங்கு அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அதிகாலை மூன்று மணியளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
வியாழக்கிழமை காலை ஓர் உடல் எரிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். பிறகு அந்த பெண் அணிந்திருந்த ஆடை, நகைகள் உள்ளிட்டவற்றை வைத்து பெற்றோர் உடலை அடையாளம் கண்டவுடன், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
 
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய சைபராபாத் காவல் துறை ஆணையர் வி சி சஜ்ஜானர், ''தடையங்களை வைத்து பார்க்கும்போது, உயிரிழந்த இந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க பத்து சிறப்பு குழுக்களை நியமித்துளோம். லாரி ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிலர் மீது சந்தேகம் உள்ளது.குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்று கூறினார்.
 
மேலும் உயிரிழந்த பெண்,பின்தொடர்ந்ததாக கூறிய சிலரே இந்த குற்றத்தை செய்திருக்க வேண்டும், என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
மிகவும் மறைவான பகுதிக்கு இந்த பெண்ணை கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிசிடிவி கேமரா காட்சிகளில் தென்படுகிறது. மேலும் உயிரிழந்த பிறகு அவரின் உடலை இரவு 12 மணியளவில் அவரின் இரு சக்கர வாகனத்திலேயே கொண்டு சென்றதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
 
இந்த வழக்கு தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை காவலில் எடுத்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் கிடைத்ததாக பிபிசி செய்தியாளர் பல்லா சதிஷ் கூறுகிறார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக, தெலங்கானா உள்துறை அமைச்சர், மொஹம்மத் மஹமூத் அலி ஏ.என்.ஐ செய்தி முகாமையிடம் கூறுகையில் ''கால்நடை மருத்துவரான அந்த பெண் இறந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனால் அத்தகைய சூழலில் ஒரு படித்த பெண்ணாக அவர் தன் சகோதரியை தொடர்பு கொண்டதற்கு பதிலாக, 100 எண்ணிற்கு அழைத்து, காவல் துறையினரை தொடர்பு கொண்டிருந்தாள் காப்பாற்றப்பட்டிருப்பார்.'' என்று கூறியுள்ளார்.