வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (16:37 IST)

மும்பை மின் தடை: சுமார் 2 மணி நேரமாக ஸ்தம்பித்த நகரம், விசாரிக்க உத்தரவிட்ட மகராஷ்டிர முதல்வர் மற்றும் பிற செய்திகள்

மும்பை நகரில் சுமார் இரண்டு மணி நேரமாக மின் தடை ஏற்பட்டது குறித்து விசாரிக்க மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மின் இணைப்பு க்ரிடில் ஏற்பட்ட பழுதால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மின் தடையால் உள்ளூர் ரயில் சேவை, இணைய வழி வகுப்புகள், தேர்வுகள் ஆகியன தடைப்பட்டன.

மேலும் மருத்துவமனைகளிலும் மின் தடை ஏற்பட்டது குறித்து பலர் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்தனர்.

விமான நிலைய செயல்பாடுகளில் எந்த தடங்கலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை நகரில் தடையில்லா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் நகர் முழுவதும் மின் தடை இன்று ஏற்பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தற்போது பகுதி பகுதியாக மின்சாரம் திரும்ப வரத் தொடங்கியுள்ளது.

மும்பைக்கு மின்சார விநியோகம் செய்யும் நிறுவனமான `பெஸ்ட்` நிறுவனம், டாடாவின் மின்சார உள் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதே இதற்கு காரணம் என ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

தோனியின் மகளுக்கு மிரட்டல்: 16 வயது குஜராத் சிறுவன் கைது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்ததற்காக குஜராத் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தோனியின் மகளுக்கு எதிராக மிகவும் மோசமான, அருவருக்கத்தக்க வகையில் பின்னூட்டமிட்ட, நம்னா கபாயா எனும் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்ச் (மேற்கு) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

அந்தப் பின்னூட்டம் குறித்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

ஜார்கண்ட் காவல்துறை அந்தச் சிறுவனின் விவரங்களை கண்டுபிடித்து தங்களிடம் தெரிவித்ததாகவும், விசாரணையின்போது அவர்தான் அவ்வாறு மோசமான பதிவை பின்னூட்டமாக இட்டார் என்று தெரிந்த பின்பு கைது செய்தோம் என்றும் குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பிறகு அந்த பதின்ம வயது சிறுவன் தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ஐதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ராகுல் டெவாட்டியா மற்றும் ரியான் பராக். 7.5 ஓவர்களில் 85 ரன்கள் சேகரித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர் இந்த இருவரும்.