1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (15:04 IST)

கடலூர் திமுக எம்.பி நீதிமன்றத்தில் சரண்

முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டதாகப் பதிவாகியுள்ள வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
 
திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் கடந்த 9ஆம் தேதி காலை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இதனிடையே இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை சிபிசிஐடி காவல் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடலூர் பண்ருட்டியில் உள்ள குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் ரமேஷ் சரணடைந்தார்.
 
முந்திரி திருடி மாட்டிக் கொண்டதால் கோவிந்தராசு எனும் அந்தத் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார் என்று அப்போது ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
 
ரமேஷ் வெளியிட்ட அறிக்கை
 
ரமேஷ் எம்.பி. இன்று வெளியிட்ட அறிக்கையில் , “சிபிசிஐடி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து திமுக மீது அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரித்தான அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரசாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், இந்த இயக்கத்தின் தொண்டர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு மிகுந்த வேதனையும் அளிக்கிறது."
 
"ஆகவே நான் உயிரினும் போற்றும் என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி பேசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்து விட வேண்டாம் என கருதி சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைகிறேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.