ஐபிஎல் 2018: கவனத்தை ஈர்த்த ஐந்து இளம் வீரர்கள்...

Last Updated: சனி, 21 ஏப்ரல் 2018 (15:54 IST)
ஐபிஎல் 11 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 25% போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த சீசனில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அப்படொ கவனத்தை ஈர்த்த ஐந்து வீரர்கள் இதோ..
 
சூர்யகுமார் யாதவ்:
11வது ஐபிஎல் சீஸனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுவது முதல்முறையல்ல. 2012 ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தை அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே ஆடினார். 
 
சூர்யகுமார் யாதவ் முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான்கு ஆண்டுகள் விளையாடியபின் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ள சூர்யகுமார் யாதவ் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் பிறந்தவர்.
 
நிதிஷ் ராணா:
நிதிஷ் ராணா டெல்லியைச் சேர்ந்த 24வயது இளைஞர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடியவந்த ராணாவை கடும் போட்டிக்கு பிறகு 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி. 
 
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடும் வீரராக அறியப்பட்ட ராணா, 2016 மற்றும் 2017 ஐபிஎல் சீசனில் மொத்தம் 17 போட்டிகளில் நான்கு அரை சதமும் விளாசியுள்ளார்.
 
இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியொன்றில் 35 பந்துகளில் ஐந்து பௌண்டரி நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 59 ரன்கள் குவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான சமீபத்திய ஆட்டமொன்றில் தொடக்க வீரர்கள் அஜின்க்யா ரஹானே மற்றும் டி ஆர்சி ஷார்ட் என இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார் ராணா. அதே போட்டியில் பேட்டிங்கில் 27 பந்துகளைச் சந்தித்து 35 ரன்களை விளாசினார். இந்த இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
 
சஞ்சு சாம்சன்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கேரள இளைஞர் சஞ்சு சாம்சன். இதுவரை ஐபிஎல்லில் 71 போட்டிகளில் விளையாடி 8 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 1611 ரன்களை குவித்துள்ள சஞ்சு, இந்தியாவுக்காக இதுவரை ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2013 முதல் 2015 வரை விளையாடிய சஞ்சு, பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 கோடி கொடுத்து சஞ்சு சாம்சனை தனது அணிக்கு விளையாட தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.
 
மயங்க் மார்கன்டே:
பஞ்சாபில் பிறந்த மயங்க் இதுவரை ஆறு முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் இவரை எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் முதல் போட்டியிலேயே மார்கன்டேவுக்கு வாய்ப்பளித்தது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார் மயங்க். 
 
தான் விளையாடிய முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் இரண்டாவது போட்டியில் நான்கு விக்கெட்டுகள் என எந்தவொரு வீரரும் இதுவரை ஐபிஎல்லில் சாதிக்காததை செய்து காட்டியுள்ளார் மயங்க். 
 
ரிஷப் பன்ட்:
இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் 20 இடங்களில் இருக்கும் பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக்ரேட் வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த வீரர், ரிஷப் பன்ட்.
 
இதுவரை நான்கு போட்டிகளில் 34.50 என்ற சராசரியுடன் 138 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை ரிஷப் அடித்துள்ள பௌண்டரிகளின் எண்ணிக்கை 20.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்த பன்ட் 2016 ஆண்டு முதல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 
 
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருவதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் 20 வயது இடது கை பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட்.

இதில் மேலும் படிக்கவும் :