ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (11:53 IST)

Monkey B Virus: சீனாவில் ஒருவர் பலி - அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

சீனாவின் பெய்ஜிங் நகரத்தில், மங்கி பி வைரஸ் (Monkey B Virus) தொற்று காரணமாக ஒருவர் இறந்த செய்தி வெளிவந்துள்ளது. இதை குளோபல் டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
 
பெய்ஜிங்கில் உள்ள ஒரு கால்நடை மருத்துவர் குரங்கு பி வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக, குளோபல் டைம்ஸின் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதும் அச்செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
53 வயதான இந்த கால்நடை மருத்துவர் ஒரு நிறுவனத்தில் குரங்கு வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
 
மார்ச் மாதத்தில் அவர் இரண்டு இறந்த குரங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்ததாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற ஆரம்ப அறிகுறிகள் ஏற்படத் தொடங்கியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் மத்திய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் வாராந்திர இதழ் இது குறித்து விவரங்களை சனிக்கிழமையன்று கொடுத்தது.
 
இந்த கால்நடை மருத்துவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார் என்றும் மே 27 ஆம் தேதி அவர் காலமானார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
இதுவரை இந்த வைரஸ் தொடர்பான எந்தவொரு தொற்று நிகழ்வும் தெரிய வரவில்லை. அதே போல மங்கி பி வைரஸால் மனித நோய்த்தொற்று மற்றும் இறப்பின் முதல் நிகழ்வு இது.
 
ஏப்ரல் மாதத்தில் கால்நடை மருத்துவரின் எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து சோதித்த பிறகு தான், அது குரங்கு பி வைரஸ் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
 
ஆனால் அவருடன் தொடர்பு கொண்ட வேறு எந்த நபருக்கும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இதுவரை ஏற்படவில்லை என்பது நிம்மதிதரும் விஷயம்.
இந்த வைரஸ் 1932ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இது நேரடி தொடர்பு மற்றும் உடல் திரவங்களின் பரிமாற்றம் மூலம் பரவுகிறது. மங்கி பி வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் 70 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் ஆகும்.
 
மங்கி பி வைரஸ், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதைத் தடுக்க முயற்சிகள் தேவை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
மங்கி பி வைரஸ் என்றால் என்ன?
 
ஹெர்பிஸ் பி வைரஸ் அல்லது குரங்கு வைரஸ் பொதுவாக வயது வந்த மேகாக் (Macaque) குரங்குகளால் பரவுகிறது. இது தவிர, ரீசஸ் மேகாக், பன்றிவால் மேகாக் மற்றும் சினோமொல்கஸ் குரங்கு அல்லது நீண்ட வால் கொண்ட மேகாக் ஆகியவற்றால் வைரஸ் பரவுகிறது.
 
மனிதர்களில் இது அரிதானது. ஆனால் ஒரு நபர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர் நரம்பியல் நோய் அல்லது மூளை மற்றும் முதுகெலும்பு வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படலாம்.
 
இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
மனிதர்களில் இந்த வைரஸ் பொதுவாக மேக்காக் குரங்குகளின் கடி அல்லது கீறலுக்குப் பிறகே பரவக்கூடும். பாதிக்கப்பட்ட குரங்குகளின் உமிழ்நீர், மலம் மற்றும் சிறுநீர் மூலமாகவும் இந்த வைரஸ் பரவலாம்.
 
இது தவிர, வைரஸ் படிந்த ஊசி கூட இதற்கு ஒரு வழிமுறையாக இருக்கலாம்.
 
ந்த வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் மணிக்கணக்கில் உயிர்வாழும்.
 
ஆய்வகங்களில் பணிபுரியும், கால்நடை மருத்துவர்கள் அல்லது இந்த குரங்குகளுக்கு அருகிலேயே பணிபுரியும் நபர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் என்று பாஸ்டன் பொது சுகாதார ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.
 
இந்த வைரஸின் அறிகுறிகள் என்ன?
மனிதர்களில் வைரஸ் தொற்று ஏற்பட்ட 1 மாதத்திற்குள் அறிகுறிகள் தோன்றும். சில நேரங்களில் இந்த அறிகுறிகள் 3 முதல் 7 நாட்களிலும் தோன்றக்கூடும். அறிகுறிகள் எத்தனை விரைவாகத் தெரியவரும் என்பது தொற்றைப் பொருத்தது.
 
குறிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்று சொல்ல முடியாது.
 
சில பொதுவான அறிகுறிகள்
 
நோய்த்தொற்று ஏற்பட்ட இடத்திற்கு அருகில் கொப்புளங்கள்
காயத்தின் அருகே வலி. அந்த இடத்தில் உணர்வின்மை. நமைச்சல்
ஃப்ளு காய்ச்சல் போன்ற வலி
காய்ச்சல்
24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் தலைவலி
சோர்வு
தசை இறுக்கம்
சுவாசிப்பதில் சிரமம் போன்றவைகளைக் கூறலாம்.
அறிகுறி தோன்றிய முதல் நாளிலிருந்து 3 வாரங்கள் வரை சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். மேலும் தொற்று கடுமையானதாக இருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்.
 
சிகிச்சை என்ன?
 
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் சுமார் 70 சதவீத தொற்றுகளில் நோயாளி இறக்கக்கூடும் என்று பாஸ்டன் பொது சுகாதார ஆணைய அறிக்கை கூறுகிறது.
 
ஆகவே உங்களை ஒரு குரங்கு கடித்தால் அல்லது கீறியிருந்தால், அது பி வைரஸின் கேரியராக இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் முதலுதவி சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
 
காயம் ஏற்பட்ட பகுதியை சோப்பு மற்றும் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.
 
குரங்கு பி வைரஸுக்கு சிகிச்சையளிக்க ஆன்டிவைரல் மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் தடுப்பூசி எதுவும் இதுவரை இல்லை என்று இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.