திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:28 IST)

விராட் கோலி கிரிக்கெட் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக பட்டியலிட்ட காரணங்கள் - ரசிகர்கள் கவலை

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல் முறையாக வழி நடத்தினார்.

பின்னர் முதன்மையாக அந்த பதவியில் அவர் தொடர்ந்தார். கேப்டவுன் டெஸ்டில் கேப்டனாக அவர் கடைசியாக விளையாடினார். இதில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது கேப்டன் பதவி விலகல் தொடர்பான கடிதத்தை பகிர்ந்துள்ளார் கோலி.

அதில், "அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஏழு வருட கடின உழைப்பை செலுத்தி, இடைவிடாத விடாமுயற்சியுடன் தினமும் போராடினேன். இப்போது பதவியில் இருந்து ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று கூறியுள்ளார்.

மேலும், "எல்லா விஷயங்களும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக எனக்கு அந்த நேரம் இப்போது தான் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

"எனது இந்தப் பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் உள்ளன. ஆனால் ஒருபோதும் முயற்சியின்மை அல்லது நம்பிக்கையின்மை இருந்ததில்லை. நான் செய்யும் எல்லாவற்றிலும் எனது 120 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அதை என்னால் செய்ய முடியாவிட்டால் இது சரியான செயல் அல்ல என்று எனக்குத் தெரியும்," என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

"என் மனதில் எனக்கு முழுமையான தெளிவு உள்ளது. எனது அணிக்கு நான் நேர்மையற்றவனாக இருக்க முடியாது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு எனது நாட்டு அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்கியதற்காக பிசிசிஐக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முக்கியமாக முதல் நாளிலிருந்தே அணிக்காக நான் கொண்டிருந்த பார்வையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அணியின் அனைத்து வீரர்களும் என்னை எந்த சூழ்நிலையிலும் கைவிடவில்லை. இந்த பயணத்தை மறக்க முடியாததாகவும் அழகாகவும் மாற்றியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களை தொடர்ந்து மேல்நோக்கி நகர்த்துவதற்காக எங்கள் பயணத்தில் பின்புலமாக இருந்த ரவி பாய் மற்றும் ஆதரவுக்குழுவினர், எங்களுடைய பார்வையை உயிர் கொடுத்துக் கொண்டே பெரிய பங்களிப்பை வழங்கினீர்கள். கடைசியாக ஒரு கேப்டனாக என்னை நம்பி, இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய திறமையான தனி நபராக என்னைக் கண்டறிந்த எம்.எஸ் தோனிக்கு நன்றி," என்று விராட் கோலி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா இந்தியாவின் முழு நேர ஒயிட்-பால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முன்னதாக, 2014ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மத்தியில் எம்.எஸ் தோனி விலகியபோது கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், அந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விரட் கோலி முதுகு வலியின் காரணமாக விளையாடவில்லை என்றும் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியை தலைமையேற்று நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கோலியின் சறுக்கல் நிறைந்த "2021"

ரன் மிஷின்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 என எல்லா ஃபார்மெட்டிலும் கேப்டனாக இருந்தார். இன்றுவரை இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த அவர் தற்போது அந்த பதவியில் இருந்தும் விலகியிருக்கிறார்.

அவரின் கீழ் விளையாடிய ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைமை தாங்கினார். அந்த அணிகளில் ரோஹித் ஷர்மாவின் கீழ் விராட் கோலி விளையாடும் நிலை வந்தபோதும் அந்த சூழலை அவர் எதிர்கொண்டார்.

கடந்த ஆண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கோலி ஒருநாள் சர்வதேச அணி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, அந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிசிசிஐக்கு எதிராக கடும் விமர்சனத்தை எழுப்பத் தூண்டியது.

இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ், மொஹம்மத் அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி, செளரவ் கங்குலி என பலரும் 70 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளனர்.

இவர்களில் அதிக வெற்றி விகிதம் கொண்டவர் யார் என்றால் அது விராட் கோலியாகவே இருப்பார். அதிக முறை இந்திய அணியை ஒரு நாள் போட்டிகளில் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி 200 போட்டிகளில் 110 போட்டிகளில் வென்று 59.52% வெற்றி விகிதம் கொண்டுள்ளார்.

மொஹம்மத் அசாருதீன் 174 போட்டிகளில் 90 போட்டிகளில் வென்று 54.16%, செளரவ் கங்குலி 147 போட்டிகளில் 76 போட்டிகளில் வென்று 53.52% உள்ளது. விராட் கோலி 95 போட்டிகளில் தலைமை தாங்கி 65 போட்டிகளில் வென்று 70.43 என அதிகபட்ச வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கபில் தேவ் போன்ற புகழ் பெற்ற வீரர்களின் வெற்றி விகிதம் கூட 56 சதவீதத்தைக் கடக்கவில்லை. மேலும் அவர்கள் கோலியை விட குறைவான போட்டிகளிலேயே இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர்.

கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவி விலகல் அறிவிப்பு, அவருக்கும் இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்புக்கும் இடையிலான உறவுமுறை தொடர்ந்து மோசமடைந்து வருவதை குறிப்பதாக கிரிக்கெட் விளையாட்டு விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்னைகளைப் பார்க்கும் போது, விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.