தன் 3 குட்டிகளின் தந்தையை தானே கொன்ற பெண் சிங்கம்

lioness
Last Updated: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:42 IST)
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தன் மூன்று குட்டிகளுக்கு தந்தையான சிங்கத்தை, பெண் சிங்கம் அடித்து கொன்றுள்ளது.
 
12 வயது பெண் சிங்கமான சூரி, 10 வயது ஆண் சிங்கமான நியாக்கை தாக்கியது. நியாக் மீது பாய்ந்த சூரியை இந்தியனாபொலிஸ் உயிரியல் பூங்கா ஊழியர்களால் பிரித்தெடுக்கவே முடியவில்லை. கடைசியில் ஆண் சிங்கம் நியாக் மூச்சு திணறி இறந்து போனது.
 
இரு சிங்கங்களும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரே அடைப்புக்குள் வாழ்ந்து வந்தன. நியாக்குடன் இணைந்து 2015ஆம் ஆண்டு மூன்று குட்டிகள் பெற்றெடுத்தது சூரி.
 
உயிரியல் பூங்கா நிர்வாகம் போட்ட ஃபேஸ்புக்கில் பதிவில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"நியாக் ஓர் அற்புதமான சிங்கம்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிங்கங்கள் இருந்த அடைப்புக்குள் இருந்து ஓர் 'அசாதாரணமான கர்ஜனை' வந்ததாகவும் அதன் பின்னரே அங்கு சென்று பார்த்ததாகவும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
lion
 
சூரி, நியாக்கின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருந்தது. அவற்றை பிரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், ஆண் சிங்கத்தின் அசைவு நிற்கும் வரை பெண் சிங்கம் கழுத்தை நெரிப்பதை விடவில்லை.
 
இதற்கு முன்னர் இந்த இரு சிங்கங்களுக்கு இடையே இப்படி கடுமையான சண்டை ஏற்பட்டதில்லை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
"இங்கு விலங்குகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே உறுதியான பந்தம் இருக்கும். எனவே ஆண் சிங்கத்தின் இழப்பு எங்களை பெரிதும் பாதித்துள்ளது" என இந்தியனோபொலிஸ் பூங்கா பொறுப்பாளரான டேவிட் ஹகன் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "எங்கள் பலருக்கும், நியாக் ஒரு குடும்ப உறுப்பினர் போல," என்றார் அவர்.
 
பூங்காவில் சிங்கங்களை நிர்வகிக்கும் முறையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பெண் சிங்கங்கள் அவ்வப்போது ஆண் சிங்கங்கைளை காட்டுக்குள் தாக்குவது நடப்பதுதான். இது போன்ற சம்பவங்கள், சிங்கம் உலவும் உயிரியல் பூங்காக்களில் நடப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :