வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (11:39 IST)

காஷ்மீர்: 'அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்' - பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவுகளை இந்தியா நீக்கியதை பாராட்டி பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு பாகிஸ்தானில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அரசியல் சட்டத்தின் 370வது மற்றும் 35-ஏ பிரிவுகளில், இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது.
 
இது தொடர்பான எதிர்வினைகள் வலுத்து வரும் சூழ்நிலையில், இந்தியாவின் நடவடிக்கையை பாராட்டி, மாநிலங்களவையில் சிவசேனா  கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவுத் தெரிவித்த கருத்து தொடர்பான ட்விட்டர் பதிவின் திரைப்பிடிப்பு (ஸ்கிரீன் ஷாட்) பாகிஸ்தானின்  இஸ்லாமாபாத் நகரில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சர்ச்சையாக வெடித்துள்ளதுதுடன் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
 
சஞ்சய் ராவுத் மாநிலங்களவையில் ஆற்றிய உரையின் காணொளியுடன் கூடிய விளக்க குறிப்பை கொண்டுள்ள அந்த ட்வீட்டின்  திரைப்பிடிப்பில், "அகண்ட பாரதத்தை ஏற்படுத்தும் கனவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளோம். இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட  காஷ்மீரை மீட்டதை போன்று, அடுத்ததாக பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தானை இந்தியா மீட்கும்," என்று  குறிப்பிடப்பட்டிருந்தது.
இஸ்லாமாபாத் நகரின் இரு வழி சாலைக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த அந்த பதாகை மிகவும் தாமதமாக, ஐந்து மணிநேரத்துக்கு பிறகு  நீக்கப்பட்டதுக்கு காரணம் என்ன என்று 24 மணிநேரத்தில் விளக்கம் கேட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்த மாவட்ட நீதிபதி ஹம்சா,  உள்ளாட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்நிலையில், பதாகை வைத்தது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை இஸ்லாமாபாத் காவல்துறையினர் கைது  செய்துள்ளதுடன், பதாகைகள் அச்சிடப்பட்டதாக கருதப்படும் அச்சகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அதுமட்டுமின்றி, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில், அந்நகர காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இஸ்லாமாபாத்தை பொறுத்தவரை, எந்தொரு பதாகை வைக்கப்பட்டாலும் அதற்கு முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற  நிலையில், தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த பதாகைக்கு யாரும் அனுமதி பெறவில்லை என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைமையகம், பல்வேறு நாடுகளின் தூதரகங்களை ஒட்டிய இடத்திலேயே ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான இந்த பதாகை, இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு, நகர மேலாண்மை தொடர்பான பல்வேறு  கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.