வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (15:16 IST)

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன?

ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.




"என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்," என்று கருணாநிதி உடனடியாக பதிலளித்தார்.

தனது பொது வாழ்க்கை முழுமைக்கும் கருணாநிதி கொண்டிருந்த தன்னம்பிக்கையின் அளவு இது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

இரண்டு ஆயுதங்களைக் கொண்டுதான் அவர் அரசியலில் நுழைந்தார். ஒன்று அவரது பேச்சுத் திறமை, இன்னொன்று எழுத்துத் திறமை. அப்போது அவரிடம் பண பலமும் இல்லை, அதிக படிப்பும் இல்லை.


கருணாநிதிக்கு முன்பு திமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த அண்ணாதுரை, மதியழகன் உள்ளிட்டோர் அப்போதே முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கருணாநிதி அவர்களைவிட அதிக நூல்களை எழுதினார். எழுத்து மீதான அவரது தீராக் காதல் அவரை பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றது.

17 வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டிய கருணாநிதி, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பைத் தொடங்கினார்.

கருணாநிதி தனது அரசியல் ஆசானான அண்ணாவை 1940களில் சந்தித்தார். பெரியார் உடன் உண்டான கருத்து வேறுபாட்டால், திமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அண்ணாவுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய தளபதியானார். கட்சியின் பிரசாரக் குழுவின் உறுப்பினராக மட்டுமல்லாது, கட்சியின் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தார்.


சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தல் 1952இல் நடந்தபோது, அதில் திமுக பங்கேற்கவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத தலைவராகவே கருணாநிதி இருந்தார். 1967 தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைத்தபோது, கருணாநிதி ஏற்கனவே 10 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1969இல் அண்ணாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, சந்தை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்த தொலைநோக்கைக் கொண்டிருந்தார்.

தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அதற்கு சாமானியர்களின் நலனை விலையாகக் கொடுக்கவில்லை.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த பொது விநியோகத் திட்டத்தை அவர் மாநிலம் முழுமைக்கும் பரவலாக்கினார். மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியதன்மூலம், தமிழகத்தில் பட்டினிச்சாவு இல்லாத ஒரு சூழலை உறுதிசெய்தார்.

அவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் சமூக நீதியே அடித்தளமாக இருந்தது என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்.


தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தேசிய அரசியலில் தமக்கென ஓர் இடத்தைப் பிடிக்க அவர் எப்போதுமே முயன்றதில்லை. தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அப்பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று அவரே பல தருணங்களில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

1969இல் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பிளவு பட்டபோது, தன் வசம் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த அவர் இந்திரா காந்தியின் பக்கம் நின்றார். அதே ஆண்டு சில மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட கருணாநிதி குறித்து பேசிய இந்திரா, 'அவர் ஒரு மோதல் போக்குடையவர் என்று கேள்விப்பட்டன்,' என்று கூறி இருந்தார். அந்த மோதல் போக்குடையவர்தான் இந்திராவைக் காப்பாற்ற வந்தார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக தமது சொந்த வேட்பாளரை, 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா களமிறக்கினார். அப்போதும் கருணாநிதி இந்திரா காந்திக்கு ஆதரவளித்தார்.

மத்தியில் அரசு நிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.



ராஜிவ் காந்தியிடம் இருந்து விலகி வந்தபின், தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைத்தபோது, ஆட்சியமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். தமிழக நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்த காவிரி நடுவர் மன்றம், இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்ப்படுத்துதல் ஆகியவற்றை அப்போது கருணாநிதி உறுதி செய்தார்.

வி.பி.சிங் பதவி விலகிய பின்னும், தேவ கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராகத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றினார்.

மதவாத சக்திகளுக்கு எதிராக போரிடுபவராக மட்டுமே அறியப்பட்ட கருணாநிதி, 1999இல் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆனால், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை பாரதிய ஜனதாவிடம் வாங்கிக்கொண்டார். தங்கள் அரசியலின் முக்கிய நோக்கமாக இருக்கும் ஒன்றைச் செய்ய மாட்டோம் என்று ஒரு தேசிய கட்சி மாநில கட்சி ஒன்றிடம் உத்தரவாதம் அளிப்பது வழக்கத்துக்கு மாறானது.


ராமர் எனும் கடவுள் இருந்ததே இல்லை. அது ஒரு புராணக் கதை மட்டுமே என்றும் கூறி கருணாநிதி பாரதிய ஜனதா மற்றும் அதை ஆதரிக்கும் வலதுசாரி அமைப்பினரின் கோபத்துக்கு உள்ளானார்.

முதலமைச்சர் போன்ற ஓர் உயரிய அரசியல் சாசன பொறுப்பில் அமர்ந்துகொண்டு, ராமர் குறித்து அவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது என்று எல்.கே.அத்வானி கண்டித்தார். ஆனால், கருணாநிதி தன் கூற்றுக்கு ஆதரவாக நேரு கூறியதை சுட்டிக்காட்டினார்.

"திராவிடர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே ராமாயணம் என்று கூறிய ஜவாஹர்லால் நேருவைவிடவும், ராமரைக் காக்க வருபவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல," என்று கருணாநிதி அப்போது கூறினார்.


2001ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசியபோது, தாம் ஏன் அக்கூட்டணியில் சேர்ந்தேன் என்று கருணாநிதி கூறினார். "வாஜ்பாய் உடனான நட்பில் வெல்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருக்கும் நண்பர்களை நான் இழக்க வேண்டியுள்ளது என்றால் அதற்கு காரணம் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் 1975இல் ஒன்றாகப் போராடிய அவசர நிலை நாட்களில் இருந்தே நாங்கள் நட்பில் உள்ளோம்," என்றார் கருணாநிதி. "எனக்கு பாரதிய கட்சியைவிட அதன் தலைமை பொறுப்பில் யார் உள்ளார்கள் என்பதே முக்கியம்."

2003இல் திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. வாஜ்பாயை போல அத்வானி தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லை என்று அப்போது கூறினார்.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் தம் திறமைகள் குறித்து எப்போதுமே அவர் குறைவாக நினைத்ததில்லை. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக இல்லாதபோதும் தேசியத் தலைவர்களுடன் மிகவும் மிடுக்குடன் நடந்துகொண்டார். அவர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க தாம் மிகவும் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.


பாஜகவிடம் இருந்து விலகியதும் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கத்துடன் நெருங்கி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைவதில் முக்கிய பங்காற்றினார்.

சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அறிவுரை வேண்டி அடிக்கடி கருணாநிதியை நாடியுள்ளதாக பல முறை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

"அவர் அரை நூற்றாண்டு காலமாக பொது வாழ்வில் உள்ளார். அவரது அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவசமானது," என்று மன்மோகன் சிங் கூறினார்.

2014இல் மோதி பதவியேற்றபோது உள்ளார்ந்த நுண்ணறிவு, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்துள்ளீர்கள் என்று கூறினார் கருணாநிதி.

1996 முதல் 2014 வரை, அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த 13 மாதங்கள் நீங்களாக, திமுக மத்திய அரசில் அங்கம் வகிக்க கருணாநிதியின் அரசியல் நுட்பம் காரணமாக இருந்தது.

மாநில சுயாட்சி

மாநில அரசுகள் அதிக தன்னாட்சி அதிகாரம் பெறுவதிலும், மத்திய - மாநில அரசுகளின் உறவை வரையறுப்பதிலும் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1969இல் ராஜமன்னார் கமிட்டி அமைத்தது அதில் முக்கியமான ஒன்று.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. மத்திய அரசு அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்காதவராகவே கருணாநிதி விளங்கினார்.

குடும்ப அரசியல்

சமூகத்துக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்புக்கு போற்றப்பட்டாலும், குடும்ப அரசியல் ஈடுபட்டதாக மிகவும் விமர்சிக்கப்பட்டார். அதை முற்றிலும் ஒதுக்கிவிடவும் முடியாது.



தனது இறுதிக்காலம் வரை ஸ்டாலினை கட்சித் தலைவராகவோ, முதலமைச்சராகவோ ஆக்காவிட்டாலும், ஸ்டாலினின் மூத்த சகோதரர் அழகிரி, இளைய சகோதரி கனிமொழி ஆகியோரை அரசியலுக்கு கொண்டுவந்தது, தனது அக்காள் மகன் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கியது ஆகியவற்றுக்கு திமுகவால் எவ்வகையிலும் நியாயம் கற்பிக்க முடியவில்லை. அவர்களின் அரசியல் பங்களிப்பும் இன்று வரை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் சகோதரர்களுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டிக்கு இடையிலும் கருணாநிதி சிக்கிக்கொண்டார். கருணாநிதி தனது அரசியல் வாரிசாக அறிவித்த ஸ்டாலின் தலைமை ஏற்பதற்கு எதிராக பேசிய அழகிரியை கட்சியை விட்டே நீக்கும் அளவுக்கு இது கருணாநிதியை இட்டுச் சென்றது.

'அறிவியல்பூர்வமான ஊழல்'

கருணாநிதி அறிவியல்பூர்வமாக அல்லது மதிநுட்பத்துடன் ஊழல் செய்வார் என்று அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை திமுக வன்மையாக மறுக்கிறது. சென்னை மாநகரில் மேம்பாலங்கள் கட்டுவதில் ஊழல் நிகழ்ந்ததாக 2001இல் ஜெயலலிதா அரசால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்களாக பார்க்கப்பட்டது.

எனினும், 2ஜி வழக்கில் அவரது கட்சியைச் சேர்ந்த, அமைச்சராக இருந்த ஆ.ராசா மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தால், அது திமுகவுக்கு கடுமையான சேதாரத்தை உண்டாக்கியது.

அடுத்து வந்த பொதுத் தேர்தல், அதைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் திமுக தோல்வியை சந்திக்க அது முக்கிய காரணமாக இருந்தது. அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் கருணாநிதி சிக்கல்களை எதிர்கொள்ள இது வழிவகுத்தது.

இலங்கை தமிழர் பிரச்சனை

உலகத் தமிழர்களின் தலைவராக போற்றப்பட்டாலும், இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக கருணாநிதி குற்றச்சாட்டுக்கு உள்ளானார். 2009இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கருணாநிதி எதையும் செய்யவில்லை என்று கருணாநிதி விமர்சிக்கப்பட்டார்.

உண்மையில் போர் நிற்காதபோதும், போர் நின்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக கருணாநிதி உணர்ந்ததாக திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். எனினும், இதுவரை பலரும் இதை நம்பத் தயாரக இல்லை. அவர் இறப்புக்கு பிறகும் இது சமூக வலைத்தளங்களில் பிரதிபலிக்கிறது.

உச்ச நட்சத்திரம்

அரசியலில் பல மன்னர்களை உருவாக்கியவராக மட்டுமல்லாது திரைத் துறையிலும் கருணாநிதி ஒரு உச்ச நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார்.



1949-50இல் கருணாநிதி கதை - வசனம், எழுதிய மந்திரி குமாரி படம் எம்.ஜி.ஆரை வெள்ளித் திரையில் நட்சத்திரம் ஆக்கியது. பராசக்தி படத்துக்கு கதை - வசனம் எழுதி சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இருவரை நட்சத்திரங்கள் ஆக்கினார்.

1954இல் இன்னொரு வெற்றிப் படமான மனோகரா படத்துக்கு கதை - வசனம் எழுதினார். அந்தப் படத்துக்கு எழுதிய திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டு கிடைத்த பணத்தில், தம் முதல் குழந்தை என்று அவர் கூறிய, கட்சி ஏடான முரசொலிக்கு அச்சகம் ஒன்றை வாங்கினார். அவரது இறப்புச் செய்தியை சுமந்து கொண்டு முரசொலி இதழும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும்போது அவருக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருந்தது.

மரணத்துக்குப் பிறகும், தான் இறுதியாக ஓய்வெடுக்கும் இடத்துக்காகத் தாம் போராட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தனது தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி இவ்வாறு எழுதுவார், "வீரன் சாவதே இல்லை! கோழை வாழ்வதே இல்லை!"