வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

ஜோ பைடன்: "டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது சங்கடத்தை தருகிறது"

அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்காமல் டொனால்ட் டிரம்ப் இருப்பது தனக்கு சங்கடத்தை தருகிறது என்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டு அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் நடவடிக்கையில் எதுவும் தன்னை தடுக்காது என்று ஜோ பைடன், தன்னுடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டுத் தலைவர்களிடம் தெரிவித்து வருகிறார்.
 
அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு கிட்டத்தட்ட முடிவடையும் நேரத்தில், "நான் தோல்வி அடைவேன் என தொலைக்காட்சி சேனல்கள் கணித்தாலும் கடைசியில் நானே வெற்றி பெறுவேன்," என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
 
அமெரிக்க தேர்தலில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போது, வெற்றியாளர் தொடர்பான கணிப்புகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிடுவது  வழக்கமான செயல்பாடுதான்.
 
அமெரிக்க தேர்தலில் மாகாண வாரியாக வெளிவந்த முடிவுகள் அடிப்படையில் அதிகாரப்பூர்வ முடிவுகளோ சான்றிதழ்களோ எந்தவொரு வேட்பாளருக்கும்  இதுவரை வழங்கப்படவில்லை. ஒரு சில தொகுதிகளில் தற்போதும் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதே இதற்கு காரணம். இந்த நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அமெரிக்க தேர்தல் சபை குழுக்கூட்டம் நடக்கும்போதுதான் இறுதியான வாக்குகளின் முடிவு தெரிய வரும்.
 
பைடன் என்ன கூறுகிறார்?
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுப்பது குறித்து ஜோ பைடனிடம் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "உண்மையை சொல்வதென்றால் எனக்கு அது சங்கடத்தை தருவதாக கருதுகிறேன்" என்று பதிலளித்தார்.
 
"ஒரு விஷயத்தை என்னால் தெரிவிக்க முடியும். இப்படி நடந்து கொள்வது அதிபர் பதவி வகிப்பவருக்கு அழகல்ல. கடைசியில் அனைவரும் எதிர்பார்க்கும் ஜனவரி  20ஆம் தேதி வரத்தான் போகிறது. அப்போது என்ன நடக்கும் என்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்," என்றும் ஜோ பைடன் கூறினார்.
 
ஜனவரி 20ஆம் தேதிதான் அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் தினம்.
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி உறுதியானதையடுத்து, ஜோ பைடனுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.
 
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரிஷ் பிரதமர் டீஷோக் மிஷேல் மார்ட்டின், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கல் உள்ளிட்டோர் ஜோ பைடனுடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினார்கள்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், "என்னுடன் பேசும் தலைவர்கள் அனைவரிடமும், அமெரிக்கா மீண்டும் களத்தில் இறங்கும். ஆட்டத்தில்  இடம்பெறும் என கூறி வருகிறேன்" என்றார்.
 
பொறுப்பு ஒப்படைக்கும் நடைமுறையில் தாமதம்
 
ஆனால், அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்க ஆயத்தமாகி வரும் வேளையில், அந்த நடைமுறைகளை தாமதப்படுத்தும்  வகையில் வெள்ளை மாளிகை செயல்படுவதாக ஒரு கருத்து உள்ளது.
 
புதிதாக ஆட்சிக்கு வரும் அதிபர் மற்றும் துணை அதிபருக்கு தேவையான சம்பிரதாய அடிப்படை வசதிகளை வழங்கும் பொறுப்பை கவனிக்கும் பொது சேவைகள்  நிர்வாகத்துறை, அந்த வசதிகளுக்கான நிதியை ஒதுக்கவில்லை. ஜோ பைடனை "முறைப்படி அதிபர் பதவிக்கு தேர்வானவர்" ஆக இன்னும் அந்த அலுவலகம்  அங்கீகரிக்கவில்லை.
 
இதற்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர், மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது என்று கூறியிருந்தார். ஆனால், அவரது பதிவுக்கு மேலே, இது விவாதத்துக்குரிய தகவல் என்று ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை குறிப்பை  பதிவிட்டிருக்கிறது.
 
இதைத்தொடர்ந்து நாங்களே வெல்வோம் என்று மீண்டும் ஒரு இடுகையை தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.