வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2016 (21:58 IST)

அதிமுக பொறுப்புகளிலிருந்து நத்தம் விஸ்வநாதன் நீக்கம்

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அதிமுக) அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருக்கும் நத்தம் விஸ்வநாதனை, அப்பொறுப்புகளிலிருந்து இன்று விடுவிப்பதாக அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
தமிழகம் முழுவதும் நத்தம் விஸ்வநாதனின் இல்லம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இதற்கிடையேதான் கட்சி பொறுப்புகளிலிருந்து அவர் நீக்கப்படுவது குறித்தான அறிவிப்பு வெளியாகியது.
 
கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைச்சர்களில் 14 பேர் வெற்றி பெற்றனர். 5 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினார்கள். அவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தோல்வி அடைந்தார்.
 
அதன் பின்னரே நத்தம் விஸ்வநாதன் வகித்து வந்த அதிமுகவின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவி அவரிடமிருந்து கடந்த ஜூன் மாதத்தில் பறிக்கப்பட்டது.
 
15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வகித்து வந்த அந்த பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு, அதிமுகவில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்தது.
 
அதன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளும் அவரிடமிருந்து தற்போது பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.