திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (21:48 IST)

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் பிறந்தநாள்: நாசா வெளியிட்ட பிரமிப்பூட்டும் புகைப்படம்

james webb space telescope
இந்த சூப்பர் அப்சர்வேட்டரியை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தத் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது.
 
இதைக் கொண்டாடும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இந்தத் தொலைநோக்கி ஓராண்டில் படம்பிடித்த காட்சிகளில் மிகவும் பிரமிப்பூட்டும் ஓர் அற்புதமான படத்தை வெளியிட்டுள்ளது.
 
இந்தப் படத்தில் தெரிவது ரோ ஓஃபியூகி (Rho Ophiuchi) கிளவுட் காம்ப்ளக்ஸ் என்ற நட்சத்திரத் தொகுதி ஆகும். இந்த நட்சத்திரத் தொகுதி 400 ஒளி ஆண்டுகள் தொலைவில், நமக்கு மிக அருகிலுள்ள, நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி.
 
 
தொழில்முறையாகவோ, ஆர்வத்தினாலோ அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களை உற்றுநோக்குபவர்கள் இந்த நட்சத்திரத் தொகுதியைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பால்வீதியின் ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.
 
தூசி நிறைந்த இந்த அடர்த்தியான பகுதியின் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்குக் காண்பித்துள்ளது. இந்த அற்புதமான படம், தொலைநோக்கியின் வியக்கத்தக்க தெளிவுத்திறனைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டதாகும்.
 
இந்த முழுப் படமும் சுமார் அரை ஒளியாண்டு அல்லது 4.7 ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காட்சியைக் காட்டுகிறது.
 
 
விண்வெளியின் அற்புதங்களை தெளிவாகக் காட்சிப்படுத்தும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்த அற்புத காட்சியைப் படம்பிடித்துள்ளது
 
இந்தப் படத்தைப் பார்க்கும்போது, கண்கள் உடனடியாக மையப்பகுதியின் இடதுபுறத்தில் உள்ள வெள்ளை நெபுலாவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. அங்கு ஓர் இளம் (சில மில்லியன் ஆண்டுகள் பழைமையான) S1 எனப்படும் நட்சத்திரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒளிரச் செய்கிறது.
 
ஆனால் முழுப் படத்தையும் பார்த்தால், அந்த சிவப்பு நிறத்துக்குக் கீழே, பட்டை போன்ற அம்சம் இருப்பதைக் காணலாம். இது VLA1623 எனப்படும் புரோட்டோஸ்டாரில் இருந்து வெளியேறும் பொருள்.
 
மிக இளம் நட்சத்திரங்கள்(அவற்றின் வயது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கலாம்) அவை வளரும்போது ஹைட்ரஜன் வாயு மற்றும் தூசியைத் தங்களுக்குள் இழுத்துக்கொள்ளும். ஆனால் இந்த ஈர்க்கப்படும் வாயு மற்றும் தூசியின் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதால் அவை அங்கிருக்கும் ஒரு தூசுமண்டலத்தின் மீது மோதி ஒளிர்கின்றன.
 
 
VLA1623 என்பது அதுபோன்ற ஒரு புதிய நட்சத்திரமாகும். இது விண்வெளியின் வெகு ஆழத்தில் புதைக்கப்பட்டிருப்பதால் இந்த தொலைநோக்கியின் இன்ஃப்ராரெட் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் அதிலிருந்து வரும் வானொலி அலைகளை உணரக்கூடிய அளவில் தொலைநோக்கிகள் இருப்பதால் அது அங்கே இருக்கிறது என்பது நமக்கும் தெரியும்.
 
மேலும், இதே போன்ற இரண்டு அல்லது மூன்று நட்சத்திரங்கள் அதன் பார்வையில் இருக்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. VLA1623 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டால் அதே போன்ற காட்சிகள், படத்தின் மற்ற பகுதிகளில் இருப்பதையும் கண்டுபிடிக்க முடியும்.
 
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope -JWST) என்பது நாசா, ஐரோப்பாவின் எசா மற்றும் கனடாவின் சிஎஸ்ஏ ஆகிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு தொலைநோக்கியாகும்.
 
 
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முன்பு எடுத்த கரினா நெபுலாவின் படம். இது வானத்தில் உள்ள மிகப் பெரிய, பிரகாசமான நெபுலாக்களில் ஒன்று.
 
இந்தத் தொலைநோக்கி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நிறுவப்பட்டது. ஆனால் இதைச் செயல்படுத்தும் உபகரணங்களைப் பொருத்துவதற்கு பொறியாளர்களுக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டது.
 
கடைசியில் அது 2022 ஜுலை 12ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. அன்று அது தனது முதல் காட்சிகளைப் பதிவு செய்தது.
 
சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் எந்த நட்சத்திரங்கள் ஜொலிக்கத் தொடங்கின என்பதைக் கண்டுபிடிப்பதே இந்தத் தொலைநோக்கியின் முக்கிய பணி. மேலும், வெகுகாலத்துக்கு முன்னர் பிறந்த நட்சத்திர மண்டலங்கள் உருவானது குறித்த விவரங்களை ஏற்கெனவே இத்தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
 
இதற்கு முன்பிருந்த அனைத்து தொலைநோக்கிகளை விடவும் அதிவேகமாக இந்தத் தொலைநோக்கி விண்வெளி பற்றிய போதுமான விவரங்களைப் பெற்றுவிட்டது.
 
வந்தே பாரத்: பெட்டிகளை பாதியாக குறைத்தும் மூன்றில் ஒரு பங்கு கூட நிரம்பாத இருக்கைகள் - என்ன காரணம்?
 
ஸ்பிட்சர் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படம். இதைவிட பல மடங்கு தெளிவான படங்களை வெப் தொலைநோக்கி மூலம் பெற முடியும்
 
மேலும், நட்சத்திரங்கள் எப்படித் தோன்றின, அவற்றில் இருந்து கோள்கள் எப்படி உருவாகின என்பது உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிவதும் இந்தத் தொலைநோக்கியின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஒரே காரணத்திற்காகத் தான் ரோ ஓஃபியூகி இத்தொலைநோக்கியின் இவ்வளவு முக்கியமான இலக்காகக் கருதப்படுகிறது.
 
"இந்த பிரமிப்பூட்டும் படத்தில் மேலும் பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இளம் நட்சத்திரங்கள், தாங்கள் உருவான வாயுக்கள் மற்றும் தூசுப்படலங்களின் மீது துடிப்பான வண்ணங்களைத் தெளிப்பதால் இக்காட்சிகள் தெரிகின்றன," என எசாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான மூத்த பேராசிரியர் மார்க் மெக்காப்ரியான் தெரிவித்துள்ளார் .
 
"பெரும்பாலான பிரகாசமான சிவப்பு உமிழ்வு, நமது கண்களுக்குத் தெரியாத நட்சத்திரமான VLA1623-இல் இருந்து அதிவேகமாகப் பாயும் மூலக்கூறு வாயுவிலிருந்து வருகிறது. இது மிகவும் இளம் நட்சத்திரமாக உள்ளது என கற்காலத்தில் வரையப்பட்ட குகை ஓவியங்களின் மூலம் தெரிய வருகிறது," என்றார் அவர்.
 
"ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆரம்பகால பிரபஞ்சத்தில் விண்மீன் கூட்டங்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றிய தகவல்களை மட்டும் நமக்கு அளிக்கும் என்பதைவிட நமது சொந்த பால்வீதியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவதிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
 
ஓர் அற்புதமான தொலைநோக்கி என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிய வைக்க, ரோ ஓஃபியூகி (Rho Ophiuchi) கிளவுட் காம்ப்ளக்ஸின் படம், நாசா முன்னர் பயன்படுத்திய ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் பெறப்பட்டது.
 
ஸ்பிட்சர் தொலைநோக்கியும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் போலவே அகச்சிவப்பு ஒளியை உணரும் திறன்கொண்டது. ஆனால் வெறும் 85 செ.மீ விட்டம் கொண்ட முதன்மைக் கண்ணாடியை வைத்துக்கொண்டு காட்சிப்படுத்திய படம்.
 
வெப்பின் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட கண்ணாடி மூலம் நாம் இப்போது பார்க்கும் காட்சிகளை ஒருபோதும் அந்தத் தொலை நோக்கி மூலம் பார்த்திருக்க முடியாது.