1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (11:24 IST)

இலங்கையை பட்டினியில் இருந்து காப்பாற்றிய பலாப்பழம்

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பலாப்பழம் பெரும் உதவியாக உள்ளது.
 
தினக்கூலியும், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையுமான கருப்பையா குமார், தன்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களை பலாப்பழம்தான் உயிரோடு வைத்திருப்பதாகக் கூறுகிறார்.
 
''எங்களைப் போன்ற லட்சக்கணக்கானவர்களை பலாப்பழம் உயிரோடு வைத்துள்ளது. எங்களை இந்தப் பழம்தான் பட்டினியில் இருந்து காப்பாற்றி உள்ளது'' என்கிறார் கருப்பையா குமார்.
 
ஒரு காலத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்தப் பழம், இன்று அந்த மக்களின் முக்கிய உணவு ஆதாரமாக மாறியுள்ளது. தற்போது ஒரு கிலோ பலாப்பழம் இலங்கை மதிப்பில் வெறும் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது.
 
''பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக அனைவராலும் அரிசி, ரொட்டி வாங்க முடிந்தது. ஆனால், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பழாப்பழத்தை பலர் தினசரி உண்கின்றனர்'' என்கிறார் கருப்பையா குமார்.
 
வருமானத்தில் 70 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது
இலங்கையில் தற்போது மூன்றில் ஒருவர் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இதனால் தங்கள் வருமானத்தில் 70 சதவீதத்தை உணவுக்காக பயன்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு நாட்டின் பாதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
மூன்று குழந்தைகளின் தாயான 42 வயது நதிகா பெரேரா, தினசரி உணவை மூன்று வேளைகளில் இருந்து இரண்டு வேளைகளாகக் குறைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
விறகு அடுப்பு புகையால் கலங்கிய தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பேசிய அவர், கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது சிலிண்டரின் விலை 2 மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறுகிறார்.
 
2022இல் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்ட போது மக்களின் வருமானம் வெகுவாகக் குறைந்து, உணவுப்பற்றாக்குறை அதிகரித்தது.
 
மின் தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் அவதிப்பட்ட அந்நாட்டு மக்கள் அதிபர் கோட்ட பய ராஜபக்ஸவின் மாளிகையை கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
 
நதிகா தன் குழந்தை மற்றும் கணவருடன் தலைநகர் கொழும்புவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்துவருகிறார்.
 
தேசிய கேரம் சாம்பியன்ஷிப் முன்னாள் ரன்னர்-அப் ஆன நதிகா, தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறார்.
 
ஏனெனில், போட்டி நடுவராக அவர் ஈட்டிவந்த வருவாய் தற்போதைய சூழலில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கணவர் தற்போது வாடகைக்கு டாக்ஸி ஓட்டுகிறார்.
 
''எங்களால் கறி, முட்டை வாங்க முடியவில்லை. ஏனெனில், அதன் விலை 6 மடங்கு உயர்ந்துவிட்டது. பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும் சிரமமாக உள்ளது’’ என்கிறார் நதிகா.
 
கேஸ் மற்றும் மின்சார விலை விரைவில் குறைய வேண்டும் என அவர் பிரார்த்திக்கிறார்.
 
தற்போது இலங்கையில் பணவீக்கம் கணிசமான அளவு குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 54 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 12 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தடுமாறிவருகிறது.
 
கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கூடுதல் சிரமம்
கொழும்புவிற்கு தெற்கே 160 கிமீ தூரத்தில் ரப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது ரத்தினபுரி.
 
இங்கு தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக கருப்பையா தென்னை மரம் ஏறுகிறார். மரம் ஏறினால் இலங்கை மதிப்பில் அவருக்கு 200 ரூபாய் சம்பளம் கிடைக்கும்.
 
’’பணவீக்கம் அதிகமாக உள்ளது. என் குழந்தையின் கல்வியையும் நான் பார்த்துகொள்ள வேண்டும். எனவே குறைந்த பணமே உணவு வாங்க என்னிடம் எஞ்சியுள்ளது'' என்கிறார் கருப்பையா.
தன்னுடைய வேலையில் உள்ள ஆபத்துகள் குறித்து விவரித்த கருப்பையா, குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் மழை பெய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் மரம் ஏறச் செல்வதாகக் கூறுகிறார்.
 
ரத்தினபுரிக்கு அருகே பலெண்டா என்ற கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பங்கள்வரை வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலிகள்.
 
அங்குள்ள அரசு தொடக்க பள்ளியின் முதல்வர் மற்றும் சில ஆசிரியர்கள் மாணவர்களின் எடையை கண்காணித்து வருகின்றனர்.
 
"இங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அதனால் வாரந்தோறும் இரண்டு முட்டைகள் உட்பட அவர்களுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தோம்'' என்கிறார் பள்ளி முதல்வர் வாசிர் ஜாஹீர்.
 
ஆனால், தற்போது விலைவாசி மீண்டும் அதிகரித்துள்ளதால் அதை வாரம் ஒரு முட்டை எனக் குறைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
 
பெரும்பாலான குழந்தைகள் குறைவான எடை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
 
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டில் 22 மில்லியன் மக்கள் இலவச மருத்துவ சேவையைப் பெறுகின்றனர். தன் நாட்டிற்குத் தேவையான 85 சதவீத மருந்துகளை இலங்கை இறக்குமதி செய்கிறது.
 
எனவே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அரசு கையிருப்பு பணம் குறைந்ததால் மருத்துவ பொருட்களிலும் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டது.
 
இந்தப் பொருளாதார நெருக்கடி, கண்டியைச் சேர்ந்த 75 வயது உயர்மட்ட அரசியல் விஞ்ஞானி மோவா டி சொய்சாவை வெகுவாக பாதித்தது.
நுரையீரல் நோயான 'ஃபைப்ரோஸிஸ்' சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து மருந்துகளை வாங்க அவர் மிகவும் சிரமப்பட்டார். இந்தச் சூழலில், ஒன்பது மாதங்களுக்கு முன் மோவா டி சொய்சா உயிரிழந்துவிட்டார்.
 
நோயாளிகள் அவதி
''நோயால் அவர் கடும் அவதிப்பட்டார். எனினும், தொடர்ந்து தன் புத்தகத்தை எழுதினார். உடல்நிலை தேறாததால் நாம் இறக்கப் போகிறோம் என நினைத்தார்'' என்கிறார் அவரது மனைவி மாலினி டி சொய்சா.
 
அவர் மரணத்திற்குப் பிறகு கடனை அடைக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் மாலினி கூறுகிறார்.
 
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை கொழும்புவில் உள்ள கேன்சர் சிறப்பு மருத்துவமனைக்கு உள்ளேயும் பார்க்க முடிகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 48 வயதான ரமணி அசோகாவும், அவரது கணவரும் அடுத்த கீமோதெரபி சிகிச்சை குறித்து கவலை கொண்டுள்ளனர்.
 
'’தற்போதுவரை மருத்துவமனையில் மருந்துகள் இலவசமாக கிடைத்தன. இந்த மருத்துவமனைக்கு பயணித்து வருவதே செலவுமிக்கதாக உள்ளது. இங்கு மருந்து கையிருப்பில் இல்லாததால் இனி அதையும் பணம் கொடுத்து வெளியே வாங்க வேண்டும்’’ என்கிறார் ரமணி அசோகா.
மருந்து விலை உயர்வு மற்றும் அதன் பற்றாக்குறை குறித்து தான் அறிந்திருப்பதாகக் கூறும் இலங்கை சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்லா, இந்தப் பிரச்னையை உடனடியாக முற்றிலும் களைய முடியாது என்கிறார்.