திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (11:34 IST)

இஸ்ரேல்-காசா: முடிவுக்கு வந்த 11 நாள் மோதல்!

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும். இதுவரை நடைபெற்ற மோதலால் சுமார் 240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் காசாவை சேர்ந்தவர்கள்
 
மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து "இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி" என கோஷம் எழுப்பினர்.
 
இந்த சண்டையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு என இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டன.
 
சண்டை நிறுத்தம், அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான "ஓர் உண்மையான வாய்ப்பை" வழங்குகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
வியாழனன்று காசாவின் வடக்கு பகுதியில் ஹமாஸ் குழுவின் கட்டடங்கள் மீது இஸ்ரேல் 100க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை தொடுத்தது. ஹமாஸ் குழுவும் பதில் தாக்குதல்களை தொடுத்தது.
 
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேல் - பாலத்தீன பதற்றம் இருவாரங்களாக நீடித்த வந்த நிலையில், முஸ்லிம் மற்றும் யூதர்கள் இருவரும் புனித தலமாக கருதும் இடத்திலிருந்து மே மாதம் 10ஆம் தேதியன்று சண்டை தொடங்கியது.
 
அந்த இடத்திலிருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை ஹமாஸ் எச்சரித்து ஏவுகணை தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடங்கியது.
 
காசாவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 232 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசாவில் கொல்லப்பட்டவர்களில் 150 பேர் ஹமாஸ் குழுவை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. ஆனால் ஹமாஸ் குழுவினர் தங்களை குழுவை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை வெளியிடவில்லை.
 
இஸ்ரேலை பொறுத்தவரை குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அதன் மருத்துவ சேவைகள் தெரிவித்துள்ளனர்.
 
சண்டை நிறுத்தத்திற்கு என்ன காரணம்?
 
இருதரப்பினரும் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்களை பெற்று வந்தனர்.
 
புதன்கிழமையன்று, சண்டை நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் வகையில் மோதல்கள் பெரிதும் குறைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார்.
 
எகிப்து, கத்தார் மற்றும் ஐ.நா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினருக்கு இடையேயான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்து வைத்தன
 
எகிப்தின் அதிபர் சிசி இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காசா பிராந்தியத்திற்கு, சண்டை நிறுத்த முயற்சிகளில் ஈடுபட இரு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.
 
என்ன சொன்னார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?
 
 
வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்தார்.
 
"பல அப்பாவி உயிர்களை பலிவாங்கிய ஹமாஸ் குழுவினர் மற்றும் காசாவிலிருந்து இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளின் கண்மூடித்தனமான ராக்கெட் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா ஆதரிக்கிறது." என தெரிவித்தார்.
 
மேலும், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தயாரித்த ஏவுகணைகளை தடுக்கும் iron dome பாதுகாப்பு அமைப்பு குறித்து நேதன்யாஹு பாராட்டியதாக பைடன் தெரிவித்தார்.
 
"இருநாடுகளும் சேர்ந்து தயாரித்த அந்த பாதுகாப்பு அமைப்பால், அரபு மற்றும் யூதர்கள் என எண்ணிலடங்கா இஸ்ரேல் குடிமக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது" என பைடன் தெரிவித்துள்ளார்.
 
இந்த சண்டை நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்து வைத்ததற்காக எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டா அல்-சிசியை பைடன் பாராட்டியுள்ளார்.
 
"இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இருதரப்பிலும் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் பூரணமாக குணமடைவார்கள் என நம்புகிறேன்," என்றும் பைடன் தெரிவித்தார்.
 
காசாவில் மறுகட்டமைப்புகளுக்கான நடவடிக்கை மற்றும் மனிதநேய உதவிகள் ஆகிய நடவடிக்கைகளில் ஐநாவிற்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் இந்த நடவடிக்கைகள் பாலத்தீன அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படுமே தவிர ஹமாஸ் ஆயுதக் குழுவினருடன் அல்ல என்றும் தெரிவித்தார்.
 
இதுகுறித்து பேசிய எகிப்து அதிபர் சிசி, பைடனின் தொலைப்பேசி அழைப்பை "மிகுந்த மகிழ்ச்சியுடன்" எதிர்கொண்டதாகவும், இருவரும் இஸ்ரேல்-காசா மோதலை நிறுத்துவதற்கான திட்டங்கள் குறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.