1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (11:18 IST)

அண்ணாமலை மாநில தலைவராக இருப்பது தமிழக பாஜகவுக்கு பலமா? பலவீனமா?

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது ஓராண்டுக்கு முன்பு கட்சியில் இணைந்தவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் அப்போது பலரது புருவங்களையும் உயர்த்தியது.

அடுத்த மாதம் 8ஆம் தேதி வந்தால் அவர் தமிழக பாஜக தலைவராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவாகிறது. கட்சியின் வளர்ச்சிக்காக என்று கூறி அண்ணாமலை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதே நேரத்தில் அவரது பல்வேறு கருத்துகள் கூட்டணி கட்சியான அதிமுகவில் கடந்த காலங்களில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ள வரலாறும் உண்டு.
அண்மையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் , "தமிழ்நாட்டில் பல நிர்வாகங்கள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. ஊழலில் நம்பர் ஒன் மாநிலம் என்றுகூட சொல்வேன்," என்று பதிலளித்தார்.
அவரது கருத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றோர் கடும் எதிர்வினையாற்றியிருந்தனர். உச்சகட்டமாக, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக வளர்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லைஇதற்கு பதிலளித்த அண்ணாமலை, "கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, கூட்டணி தர்மத்தை நன்கு உணர்ந்தவன் நான். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது," என்று விளக்கமளித்திருந்தார்.
மேலும், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்றும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் உண்மையில், பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்றதிற்கு பின்னர் தமிழ்நாட்டில் அக்கட்சி வளர்ந்துள்ளதா?
மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்கும்போது, பாஜக இருந்ததைவிட தற்போது வளர்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம் நம்மிடம் பேசும்போது, "அண்ணாமலை வந்த இரண்டு ஆண்டுகளில் அவரது பெயர் தமிழ்நாடு முழுவதும் தெரிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனியாக நின்று 6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
அப்படியென்றால் குறிப்பிட்ட அளவு பாஜக வளர்ந்துள்ளது என்றுதானே அர்த்தம். தன்னுடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்பதுதான் அவரது கேம் பிளான் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பாஜகவை கொண்டு சென்று சேர்த்துவிட்டார் என்றுதான் நினைக்கிறேன். சிறிய சிறிய கிராமங்களில் கூட பாஜகவுக்கு கொடி இருக்கிறது. கட்சி ஆட்கள் இருக்கிறார்கள்," என்றார்.

பாமக, காங்கிரஸைவிட பாஜக வலிமையாக இருக்கிறதுபாரம்பரிய கட்சிகளான திமுகவும் அதிமுகவும் குறிப்பிடத்தக்க வாக்குகளையும் கட்டமைப்பையும் வைத்துள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது பாஜக வலிமையாக இருப்பதாகக் கருதவில்லை என்று கூறும் தராசு ஷ்யாம், அதேவேளையில், "பாமக, காங்கிரஸைவிட பாஜக கட்டமைப்பில் வலுவாக உள்ளதாகத் தோன்றுகிறது" என்கிறார்.
மூத்த செய்தியாளர் ப்ரியன் பேசுகையில், "30 ஆண்டுகளாக பாஜகவை பார்த்து வருகின்றேன். கடந்த 2 ஆண்டுகளாக பாஜக கூட்டங்களுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காண்கிறேன்.
முன்பெல்லாம், எந்த விதமான போராட்டமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் 10 பேர் அல்லது 15 பேர்தான் இருப்பார்கள். பெண்கள் இருக்கவே மாட்டார்கள். ஆனால் தற்போது கூட்டம் அதிகம் சேர்கிறது. பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.
திராவிட கட்சிகள் எப்படி அரசியல் செய்வார்களோ அதே அரசியலை அவர் கையில் எடுக்கிறார். திமுகவை எதிர்க்க சரியான நபர் அண்ணாமலைதான் என்று பாஜக தொண்டர்கள் நினைக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அண்ணாமலை தலைவரான பின்னர் சத்தம் அதிகமாக இருக்கிறது சங்கதி குறைவாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் ப்ரியன் வைக்கிறார்.
"அண்ணாமலை தலைவராக பதவியேற்ற புதிதில் அரியலூர் மாணவியின் தற்கொலையை வைத்து அரசியல் செய்யப் பார்த்தார். ஆனால், அது எடுபடாமல் போனது. இந்த 2 ஆண்டுகளில் நிறைய பேசுகிறார். ஆனால், பொருள்பட பேசுவதில்லை. சமீபத்தில் திமுகவினரின் ஊழல் கணக்கு என்று சொத்துக் கணக்கு விவகரங்களை வெளியிட்டார். நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவே ஏதோவொரு வகையில் அண்ணாமலை குறித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வருகின்றன," என்றார்.
பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசும்போது, `அமைப்பு ரீதியாக கட்சி பலம்பெற்றுள்ளது. அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான முழக்கங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது," என்றார்.
பாஜகவை பலவீனப்படுத்துகிறதா?அண்ணாமலையால் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில், அவர் மீது கட்சியினரே அதிருப்தியில் இருப்பதாகவும் அக்கட்சியில் இருந்து முக்கியமான நிர்வாகிகள் வெளியேறியதே இதற்குச் சான்று எனவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையால் பாஜக பலவீனமடைகிறதா என்பது தொடர்பாக தராசு ஷ்யாம் பேசுகையில், "அண்ணாமலையின் செயல்பாடுகள் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளதாக நான் நினைக்கவில்லை. அப்படியிருந்தால் அமித் ஷா இந்த அளவுக்கு அவரைப் பாராட்டியிருக்க மாட்டார்.
இதுவரை தேசிய தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும், மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு முக்கியம், அவர்களுக்கு எத்தனை எம்பிக்கள் கிடைக்கிறார்கள் என்பது முக்கியம் போன்ற கூற்றுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், வேலூர் கூட்டத்திற்கு பின்பு தேசிய தலைமை அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பது தெளிவாக தெரிகிறது," என்றார்.
ஆனால் ப்ரியனின் பார்வையோ வேறு விதமாக இருக்கிறது. "கடந்த 6 மாதங்களில் எந்த தமிழ் நாளிதழை எடுத்துப் பார்த்தாலும் ஏதோவொரு குற்றச் செயலில் ஈடுபட்டு பாஜகவை சேர்ந்தவர்கள் சிறைக்குச் செல்வது போன்ற செய்திகள் கட்டாயம் இருக்கும்.
எப்படிப்பட்டவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அதேபோல், பலரும் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்து கட்சியிலிருந்து விலகிப் போய் உள்ளார்கள்.
அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் பலமடைந்துள்ளதா அல்லது பலவீனமடைந்துள்ளதா என்பதை 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில்தான் பார்க்க வேண்டும்," என்கிறார் அவர்.
நாராயணன் திருப்பதி இது தொடர்பாகப் பேசுகையில், "கட்சியில் அண்ணாமலை மீது யாருக்கும் எந்த அதிருப்தியும் கிடையாது. கட்சி எதிர்பார்க்கக் கூடிய செயலை சிலரால் செய்ய முடியாது என்று கூறினாலோ அல்லது அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் கட்சியில் செயல்பட முடியாவிட்டாலோ வெளியேறி விடுகின்றனர். இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை," என்றார்.
அதிமுக கூட்டணி- அண்ணாமலையின் எண்ணம் என்ன?கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை நினைக்கிறார் என்றே தான் கருதுவதாக கூறுகிறார் தராசு ஷ்யாம்.
"தன் பேச்சுகள் மூலம் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது அவருக்குத் தெரியாமல் இருக்குமா?
இவ்வளவு உழைத்து வெறும் 5 இடங்கள், 6 இடங்களுக்குப் போய் எப்படி நிற்பது என்று அவர் யோசிக்காமல் இருப்பாரா?" என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.
மேலும், "பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்து தொகுதிகளுக்காக போய் நிற்பதைவிட குறிப்பிட்ட தொகுதிகளில் பலம் வாய்ந்த நபர்களை கூட்டணியில் வைத்துக்கொள்ளலாம் என்பதுகூட அவரது எண்ணமாக இருக்கலாம்.
ஏ.சி.சண்முகம், அன்புமணி, டிடிவி தினகரன், கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன் போன்றோருடன் கூட்டணி வைப்பது, முடிவு எடுக்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க உதவும் என்று அண்ணாமலை நினைக்கலாம்.
ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் அவர்கள் கொடுக்கும் தொகுதிகளைத்தான் நீங்கள் பெற முடியும். 2004இல் பாஜகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கிய ஜெயலலிதா, அந்தத் தொகுதிகளுக்கும் நான்தான் ஆட்களை முடிவு செய்வேன் என்றார்.
தற்போது பாஜகவுக்கு முன்பு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. தன்மானம் காத்து தனியாக போட்டியிட்டு டெபாசிட் இழந்து கட்சியை வளர்ப்பது, அல்லது கூட்டணி அமைத்துp போட்டியிடுவது," என்றார்.
ஆனால், கூட்டணி மீதான விமர்சனங்களை நாடாளுமன்ற தேர்தல் வரும்போது அண்ணாமலை நிறுத்திவிடுவார் என்கிறார் ப்ரியன்.
"மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்று நினைக்கும் கட்சிகள் எல்லாம் எப்படி தமிழ்நாட்டில் ஓரணியில் உள்ளனவோ, அதேபோல் மோடி பிரதமராக வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே பாஜக மேலிடத்தின் எண்ணம்.
அதற்கு எதிராக அண்ணாமலையால் செயல்பட முடியாது. எனவே, கூட்டணிக் கட்சிகள் மீது தற்போது அவர் வைக்கும் விமர்சனங்களை எல்லாம் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் நிறுத்திவிடுவார் என்றே நினைக்கிறேன்," என்றார்.
திமுக vs பாஜக என்ற நிலையை அண்ணாமலை ஏற்படுத்தியுள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ப்ரியன், "அண்ணாமலை வேண்டுமானால் திமுகவுக்கு எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று நினைத்துக்கொள்ளலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாமலையை பெரிய பொருட்டாகவே பார்ப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லி பதில் சொல்லியிருக்கிறார்.
பாஜகவை விமர்சிக்கும்போதுகூட தேசிய தலைமையைக் குறிப்பிடுகிறாரே தவிர அண்ணாமலையின் பெயரைக்கூட ஸ்டாலின் சொல்வது இல்லை. அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியை விட்டே பதிலளிக்கிறார். இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்," என்றார்.