1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: புதன், 3 நவம்பர் 2021 (01:00 IST)

இந்திய-இலங்கை மீனவர் விவகாரம்...இந்தியாவிடம் இலங்கை மீனவர்கள் முக்கிய தகவல்

இந்திய-இலங்கை மீனவர் விவகாரம்: இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த மூன்று நிமிடம் கூட தமிழக மீனவர்களுக்கு தர முடியாது இந்தியாவிடம் இலங்கை மீனவர்கள் தெரிவிப்பு
 
இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த தமிழக மீனவர்களுக்கு இனி மூன்று நிமிடம் கூட அவகாசம் தர முடியாது என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளனர்.
 
இந்திய − இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் வடப் பகுதி மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
 
இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், கோபால் பக்லேவை கடந்த வெள்ளிகிழமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
 
 
இந்த சந்திப்பை அடுத்தே, இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் வடப் பகுதி மீனவர்களை நேற்று சந்தித்து, இந்த பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்துள்ளார்.
 
இந்திய மீனவர்களினால் முன்னெடுக்கப்படும் இழுவை மீன்பிடி நடவடிக்கை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
 
இழுவை மீன்பிடி படகுகளினால் இலங்கையின் வடப் பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து, இந்திய உயர்ஸ்தானிகருக்கு, வடப் பகுதி மீனவர்கள் தெளிவூட்டியுள்ளனர்.
 
இழுவை படகு மீன்பிடி நடவடிக்கை காரணமாக இலங்கையின் வடப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களின் பொருளாதாரத்திற்கும், கடல்வளங்களுக்கும், சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து, வடப் பகுதி மீனவர்கள், இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், இந்திய மீனவர்களினால் இலங்கையின் வடப் பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், தான் இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி வழங்கியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
 
அத்துடன், இந்திய மத்திய மாநில அரசாங்கங்களுடன் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் முடிவொன்றை பெற்றுக்கொடுப்பதாக, கோபால் பாக்லே தெரிவித்ததாக சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.
 
கலந்துரையாடலில் ஈடுபட்ட மீனவ சங்கத்தின் கருத்து
இழுவை படகு மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு, மாற்று தொழில்களில் ஈடுபட தமிழக மீனவர்கள் காலவகாசம் ஏற்கனவே கோரியிருந்ததாகவும், அந்த காலவகாசத்தை தாம் வழங்கிய போதிலும் தமிழக மீனவர்கள் இழுவை படகு மீன்பிடி தொழிலை கைவிடவில்லை எனவும் தாம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெளிவூட்டியதாக வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் தலைவர் எம்.வீ.சுப்ரமணியம் தெரிவிக்கின்றார்.
 
இந்திய மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது, இழுவை படகு மீன்பிடி நடவடிக்கையை கைவிடுவதற்கு இறுதியாக 2016ம் ஆண்டு மூன்று வருட காலவகாசம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
எனினும், காலவகாசம் வழங்கி தற்போது 5 வருடங்கள் கடந்துள்ளதாகவும், இனி மூன்று நிமிடமேனும் காலவகாசத்தை வழங்க முடியாது எனவும் தாம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கூறியதாக அவர் தெரிவிக்கின்றார்.
 
அத்துடன், இழுவை படகு மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ள போதிலும், தமிழக மாநில அரசு அதற்கு இணக்கம் தெரிவிக்காது இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த நிலையில், தமிழக மீனவர்களுடன் கலந்துரையாடலொன்றை நடத்த தயாரா என இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கை வடப் பகுதி மீனவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதற்கு பதிலளித்த மீனவர்கள், தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் இல்லை என கூறியுள்ளனர்.
 
எனினும், இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரியதாகவும் எம்.வீ.சுப்ரமணியம் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.