1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (13:21 IST)

எல்லை பிரச்சனைக்கு மத்தியில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்ற இந்தியா?

பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து நரேந்திர மோதி அரசு 9 ஆயிரம் கோடி மதிப்பிலான இரு கடன்களை பெற்றுள்ளது.
 
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இக்கடன் பெறப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் மற்றும் பிபி செளத்ரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர் இவ்வாறு கூறி உள்ளார். இந்திய சீனா எல்லை பிரச்சனை சென்று கொண்டிருக்கும் போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.
 
முன்னதாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை இந்தியாவின் 1.4 ட்ரில்லியன் டாலர் திட்டமான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து இருந்தார்.
 
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியாவும் ஒரு நிறுவன உறுப்பினர். 2016 ஆம் ஆண்டு உண்டாக்கப்பட்ட அந்த வங்கியில் இந்தியாவுக்கு 7.65 சதவீத பங்கு உள்ளது, சீனாவின் பங்கு 26.63 சதவீதம்.
 
மே 8 ஆம் தேதி முதல் கடன் தொகைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரண்டாவது கடன் தொகைக்கான ஒப்பந்தம் ஜூன்19 தேதி கையெழுத்தாகி இருக்கிறது.
அதாவது லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் பலியான நான்கு நாட்களுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
 
முதல் தவணை தொகையான 3676 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் மே 8, 2020 கையெழுத்தானது. இதுவரை 1847 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இந்த தொகை கொரோனா பெருந்தொற்றை எதிர்க்கொள்ள பயன்படுத்தப்பட்டது என அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
 
இரண்டாவது தவணை தொகையான 5514 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் ஜூன் 19ஆம் தேதி கையெழுத்தாகி இருக்கிறது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜானாவுக்காக பெறப்பட்ட கடன் தொகை இது.
 
சீனாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு மத்தியில் பெருந்தொகையை கடனாக பெற்றிருப்பது குறித்து ராகுல் காந்தி இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.