புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (08:51 IST)

'பேசித் தீர்த்துக் கொள்வோம்' - இந்தியாவிடம் கூறும் சீனா

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே, மோல்டோவில் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், அந்த பேச்சுவார்த்தை நேர்மறையான மற்றும் சுமூகமான ஒரு சூழலில் நடைபெற்றது என்றும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோல்டோ இந்தியா - சீனா இடையிலான மெய்யான கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் சீன பகுதியில் உள்ளது.

படைகளை திரும்பப் பெறுவதாக இருதரப்பும் ஒப்புக் கொண்டன.கிழக்கு லடாக் பகுதியில், பிரிச்சனைக்குரிய பகுதிகளில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. அதை இருதரப்பும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தரப்பு சொல்வது என்ன?

சீனா மற்றும் இந்திய கமாண்டர்களுக்கு இடையே இரண்டாவது பேச்சுவார்த்தை ஜூன் 22ஆம் தேதி அன்று நடைபெற்றது என்றும், இந்திய மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும், பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவும், பதற்றத்தை குறைக்கவும் விரும்புவதாகவும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் உறுதிப்படுத்தினார் என சீன செய்தித்தாளான பீப்பள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.

ஜூன் 15ஆம் தேதி இரவு இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஆனால் சீனாவில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

நடைபெற்ற வன்முறையில் சீன ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை 'போலிச் செய்தி' என சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்திருந்தது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் லிஜியன், ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதை போலிச் செய்தி என தெரிவித்ததாக சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான சிஜிடிஎன் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் லடாக்கில் இந்திய சீன எல்லைப்பகுதியில் மிகப்பெரிய நெருக்கடி உருவாகியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி தெரிவித்துள்ளார்.

"எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பது தெரியவில்லை. இருப்பினும் முதிர்ச்சியடைந்த ராஜீக செயல்பாடுகள் மற்றும் திடமான தலைமை, நமது பிராந்தியத்தின் ஒருமையை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தும் ," என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் ஏற்கனவே பலத்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் தற்போது சீனாவுடனான எல்லை நெருக்கடியும் சேர்ந்துள்ளது. இது அனைத்தும் பிஜேபியின் தவறான நிர்வாகம் மற்றும் தவறான கொள்கைகளால் ஏற்பட்டவை," என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா நெருக்கடி குறித்த விவாதிக்க கூட்டப்பட்ட கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி இதனை தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.