வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (21:16 IST)

இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி: நிபந்தனைகள் என்ன? இலங்கை விஷயத்தில் இந்தியா, அமெரிக்கா தோல்வி அடையுமா?

sri lanka
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடனுதவித் திட்டத்தின் முதலாவது தவணை தொகை கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் தெரிவித்தார்.
 
2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடனான ஒப்பந்தத்தை, ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று சமர்பித்திருந்தார்.
 
இதன்படி, முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அத்துடன், சர்வதேச நாணய நிதியம் தவிர்ந்த ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரை கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
 
02.2018ம் ஆண்டு காணப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை மீள நடைமுறைப்படுத்தல்
 
03.எதிர்கால செலவினங்களின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒரு முறை மின்சார கட்டண திருத்தம்
 
04.இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை 10 வருடங்களில் செலுத்தி முடிக்க திட்டம்.
 
05.பணம் அச்சிடப்படுவதை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை
 
06.2023ம் ஆண்டு நடுப் பகுதியில் பணவீக்கத்தை தனி இலக்கத்திற்கு கொண்டு வர நடவடிக்கை
 
07.அந்நிய செலாவணி விகிதசாரத்தை, சந்தை நிலைமைக்கு ஏற்ப தீர்மானிக்கும் வகையில் இடமளித்தல்
 
08.ஐக்கிய நாடுகள் சபையின் தரத்திற்கு அமைவான, ஊழல் ஒழிப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தல்
 
09.வலுவான சமூக பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
 
10.நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
 
தானியங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணங்களை நாடாளுமன்ற சபையில் சமர்பித்து, விசேட உரையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தியிருந்தார்.
 
''நான் கடந்த ஜுலை 9ம் தேதி தீக்கிரையான நாட்டையே பொறுப்பேற்றுக்கொண்டேன். பிரச்னைகளை எதிர்நோக்கி நாட்டை பொறுப்பேற்றேன். நாளைய தினம் தொடர்பான எதிர் பார்ப்பு இல்லாத நாடொன்றையே பொறுப்பேற்றேன். அதிகாரபூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றேன். பணவீக்கம் 73 வீதம் வரை காணப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றேன். எரிபொருள், எரிவாயு வரிசைகளில் பல நாட்கள் மக்கள் காத்திருந்த நாட்டையே பொறுப்பேற்றேன். பாடசாலைகள் மூடப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றேன். நாளொன்றிற்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாட்டையே பொறுப்பேற்றேன்.
 
விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க முடியாது நாட்டையே பொறுப்பேற்றேன். சட்டம் மற்றும் சமாதானம் இல்லாத நாட்டையே பொறுப்பேற்றேன். அரச அலுவலகங்களை பலவந்தமாக கைப்பற்றி, வேறு நபர்கள் தங்கியிருந்த நாட்டையே பொறுப்பேற்றேன். குண்டர்கள் அங்காங்கே தாக்குதல்களை நடத்திய நாட்டையே பொறுப்பேற்றேன். எதிர்தரப்பின் வீடுகளை தீக்கிரையாக்கிய நாட்டையே பொறுப்பேற்றேன். நண்பகலில் மக்களை கொலை செய்த நாட்டையே பொறுப்பேற்றேன். இவ்வாறான நாட்டை பொறுப்பேற்க எவரும் விருப்பப்படவில்லை. சிலர் பின்வாங்கினார்கள். சிலர் ராசி பலன்களை பார்ப்பதற்கு நாட்களை கோரினார்கள். சிலர் அச்சப்பட்டார்கள். யாரும் இந்த பொறுப்பை ஏற்க மறுத்த சந்தர்ப்பத்திலேயே என்னிடம் பொறுப்பேற்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எந்தவொரு நிபந்தனையும் இன்றி நான் நாட்டை பொறுப்பேற்றேன். நாடாளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. எனக்கென்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இருக்கவில்லை. ஆனாலும் நான் பிறந்த, நான் வளர்ந்த, நான் கல்வி பயின்ற எனது அன்பான நாட்டை மீள கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை மாத்திரமே இருந்தது," என்று பேசினார் ரணில்..
 
பிறகு அவர் தமது திட்டங்களை தெளிவூட்டினார்.
 
அரச வருமானத்தை அதிகரிக்கும் திட்டம்
01.2025 ஆம் ஆண்டுக்குள் முதன்மை பற்றாக்குறையை மொத்தத் தேசிய உற்பத்தியில் 2.3 வீதமாக மாற்றுவதே எமது இலக்காகும்.
 
02.இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தற்போது மொத்தத் தேசிய உற்பத்தியில் 8.3 வீதம் ஆகும். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது அரசின் வருமானம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. இதனால்தான் 2026 ஆம் ஆண்டுக்குள் அரச வருமானத்தை மொத்தத் தேசிய உற்பத்தியில் 15 வீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
 
03.துறைவாரி வரிச் சலுகைகள் இல்லாமல் கூட்டிணைக்கப்பட்ட வருமான வரி விகிதம் இப்போது 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
04. வேட் வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த நாம் நடவடிக்கை எடுத்தோம். வேட் வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளை படிப்படியாக குறைக்கவும், வேட் வரி திரும்ப செலுத்துவதை துரிதப்படுத்தவும், எஸ்-வேட் முறையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
05.2025 இல், குறைந்தபட்ச வரி விலக்குடன், சொத்து வரி முறைக்குப் பதிலாக செல்வ வரியொன்றை விதிக்கவும், பரிசு மற்றும் பரம்பரை சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அரச செலவு முகாமைத்துவம்
01.முறையான செலவு முகாமைத்துவம் மூலம் அரச செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
02.பணவீக்கத்திற்கு ஏற்ப, ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை சமநிலை செய்யும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் முதன்மை வரவு செலவுத்திட்டக் கையிருப்பு வரம்பிற்குள் இந்த மாற்றங்கள் செய்யப்படும்.
 
03.அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி விலை நிர்ணயம்
 
04.எரிபொருளின் விலை நிர்ணயம் செய்வது, அரசியல் அதிகார மட்டத்தில் இருந்து முற்றாக நீக்கப்படும். 2018 விலை சூத்திரத்தின் படியே எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.
 
05.எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார விலையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பாரியளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஸ்ரீலங்கா விமான சேவை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களின் இருப்பு நிலைகள் மறுசீரமைக்கப்படும். காலாவதியான இறையாண்மை பிணைகளின் பேரில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் தொகையை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தொகையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
01.பணவீக்க விகிதத்தை மீண்டும் 4 வீதம் மற்றும் 6வீதத்திற்;கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பணவீக்கத்தை கணிசமான அளவில் குறைக்க முடிந்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்க மதிப்பிற்குக் குறைப்பது எங்கள் இலக்கு.
 
02. இந்த திட்டங்களை செயல்படுத்தும் போது, பணம் அச்சிடுவது படிப்படியாக குறைந்துவிடும். இதனால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, கடன் பெற்றுக்கொள்ளாமல் வருமானத்தை ஈட்டிக்கொள்ள திறைசேரிக்கு நேரிடும்.
 
03.தற்போதுள்ள அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அந்நியச் செலாவணி சந்தையின் செயல்பாடுகள், சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்க அனுமதிக்கப்படும்.
 
04.தீர்மானிக்கப்பட்ட இலக்குகளின்படி, மத்திய வங்கி வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க வெளிநாட்டு நாணயம் கொள்வனவு செய்யப்படும்.
 
நல்லாட்சி
 
உள்ளுர் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அரசாங்கத்தின் பலவீனங்கள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறது. ஊழலைத் தடுப்பது தொடர்பாக அரசு மற்றும் நிறுவன கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய இதனால் வாய்ப்பு ஏற்படும்.
 
01.ஐ.நா சாசனத்தின் பிரகாரம் ஊழல் எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்படும்.
 
02.இழந்த சொத்துக்களை மீட்பதற்கான ஏற்பாடுகள் 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சட்டக் கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்க்கிறோம்.
 
03.வலுவான நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டம் உருவாக்கப்படும்.
 
04.சலுகை வரி அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நபர்கள், வரிச்சலுகை, வரித் தீர்வைப் பெறும் நிறுவனங்களின் பட்டியல் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தப்படும். பாரியளவிலான பொது கொள்முதல் ஒப்பந்தங்களின் விவரங்களும் பகிரங்கப்படுத்தப்படும்.
 
 
01.சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடைய திட்டங்களிலுள்ள சீர்திருத்தங்கள் மூலம் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தக சீர்திருத்தங்கள் தொடர்பான செயற்பாடுகள், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், திறன் மேம்பாடு, எரிசக்தி துறை மறுசீரமைப்பு ஊடாக செயல்திறனின்மையையும் செலவினங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
 
எதிர்கால நடவடிக்கை
01. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத்திற்கு அப்பால் சென்ற, பல் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். பொருளாதாரத்தைத் திறப்பதன் மூலமும், டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும் நிலையான மறுமலர்ச்சியை அடைவதும், நடுத்தர மற்றும் நீண்ட கால உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதும் இதன் நோக்கமாகும்.
 
02.அதே நேரத்தில், இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். நாங்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களுடன் திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.
 
03.கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பில் ஏற்படுத்திக்கொண்ட விதிமுறைகள் குறித்து இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், அனைத்து இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் திறந்த முறையொன்றை பின்பற்றுகிறோம். ஏனைய வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் விடயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் நியாயமான முறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வது எமது எதிர்பார்ப்பாகும்.
 
04.எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கு ஒரு பகிரங்க கடிதத்தை அனுப்பியதன் மூலம் நான் தெரிவித்தது போல், எந்தவொரு வழங்குநர்களுக்கும் கூடுதல் கரிசனை செலுத்துவதில்லை. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துகின்றோம். நாங்கள் இதுவரை அவர்கள் அனைவருடனும் வெளிப்படையாகவும் நட்பாகவும் பணியாற்றுவோம். எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து பணியாற்றுவோம்.
 
எங்கள் கடன் நிலை குறித்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப்படும். நாட்டின் கடன் பற்றி எந்த தகவலும் மறைக்கப்பட மாட்டாது.
 
சர்வதேச நாணய நிதியம் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களையும் இலங்கை தொடர்ச்சியாக மீறியுள்ளதாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான ஆ.நிக்சன் தெரிவிக்கிறார்.
 
இதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துக்கொண்ட இந்த ஒப்பந்தத்தையும், இலங்கை அரசாங்கம் மீறுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
 
இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்த தருணங்களில், சர்வதேச நாணய நிதியம் இதுவரை 17 தடவைகள் உதவிகளை வழங்கியுள்ளது.
 
இவ்வாறான 17 தடவைகளில், 9 தடவைகள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இடைநடுவில் நிறுத்திக் கொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
''சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மாத்திரம் அல்ல, சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தத்தையும் இலங்கை மீறியது. உதாரணமாக, 400 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி கிடைக்கக்கூடிய மிலேனியம் சிட்டி ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் 2020ம் ஆண்டு கிழித்தெறிந்தது. 2018ம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை கோட்டாபய ராஜபக்ஷ 2020ம் ஆண்டு கிழித்தெறிந்தார்.
 
அதைவிட கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செய்வதற்காக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனை ரத்து செய்தார்கள். அதற்கு பதிலாக இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் வழங்கப்பட்டுள்ளது.
 
அதானிக்குத் தரப்பட்ட எண்ணெய் உற்பத்தி
முழுமையான ஒப்பந்தம் இதுவரை நடைமுறையில் இல்லை. மன்னாரில் எண்ணெய் வள உற்பத்தி அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதுவரை அது சரியான வகையிலான நடைமுறைக்கு வரவில்லை. சர்வதேச ஒப்பந்தங்களை இலங்கை இலகுவாக கிழித்தெறிவது உண்மை.
 
அதேபோன்றுதான், இனப் பிரச்னைக்கு தீர்வாக காணப்படும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்த இலங்கை அரசாங்கம், அதனை இதுவரை அமல்படுத்தவில்லை. இன்னும் பல வரலாறுகளுடன் உதாரணங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது.
 
அதையும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கூற வேண்டும். அரசியலுக்கு அப்பால் ஒரு பொருளாதார பொறிமுறையொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது. பொருளாதார பொறிமுறையொன்றை உருவாக்க முடியாது. ஏனென்றால், அவ்வாறு உருவாக்கினால், தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் அதற்குள் வர முடியாது. சர்வதேச நாணய நிதியம் ஒன்றை மாத்திரம் சொல்கின்றது. மீள் நல்லிணக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றது.
 
சர்வதேச நாணய நிதியம் அரசியலை பற்றி பேச மாட்டார்கள். ஆனால், சர்வதேச நாணய நிதியம் மீள் நல்லிணக்கம் தொடர்பில் பேசும் போதே பொருளாதார பொறிமுறைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள் வர வேண்டும் என்று விளங்குகின்றது.
 
அதை செய்யமாட்டார்கள். இலங்கையின் பொருளாதார விடயங்களை, இவர்கள் இலங்கையின் மத்திய வங்கி ஊடாக மாத்திரமே முன்னெடுப்பார்கள். மத்திய வங்கிக்குள் மாத்திரம் முடிவெடுத்தால், தன்னிறைவு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால், சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தில் தோல்வி தான் காணும்," என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
 
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் தோல்வி கண்டால், அடுத்து இலங்கைக்கு என்ன நேரும்? என பிபிசி தமிழ், அ.நிக்சனிடம் வினவியது.
 
''இலங்கை யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வழங்கப்பட்ட எந்தவொரு உறுதிமொழியையும் பொருட்படுத்தவில்லை. 2009ம் ஆண்டு யுத்தத்திற்கு பிறகு வந்த பொறுப்புகூறலை தவறியுள்ளது. யுத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், யுத்த குற்றங்களை விசாரணைகள் செய்ய வேண்டும் என்ற பொறுப்புகூறலை கூட நிராகரித்துள்ளது.
 
சர்வதேசத்தை நிராகரிப்பது இலங்கைக்கு புதிய விடயம் கிடையாது. இந்த முறை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த திட்டங்களை ஏற்றுக்கொள்கின்றது. ஆனால், அதனை நடைமுறைப்படுத்தாது என்று சொன்னால், எதிர்காலத்தில் இலங்கை தொடர்ந்தும் கீழே போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
 
ஆனால், ஒரேயொரு சந்தர்ப்பம் இருக்கின்றது. பிராந்தியத்தில் மிக சிறிய நாடு என்ற காரணத்தினால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மன்னிப்பு வழங்கிக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இவ்வாறு சந்தர்ப்பம் வழங்குகின்றன.
 
இது மாத்திரமே இலங்கைக்கு உள்ள ஒரேயொரு சாதகமான விடயம். இலங்கை செய்த அனைத்து அட்டகாசங்களையும் பொறுத்துக்கொண்டு, சின்ன நாடு சின்ன நாடு என சந்தர்ப்பத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இலங்கை சீனாவை ஏமாற்றுவது குறைவு. ஆனால்;, அமெரிக்காவையும், இந்தியாவையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் என்ன தான் தவறு செய்தாலும், இந்த நாடுகள் எமக்கு உதவும் என்ற விடயம் இலங்கைக்கு நன்றாக தெரியும்.
 
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். இனப் பிரச்னைக்கான தீர்வையும் வழங்க வேண்டும். ஆனால், அது நடக்காது. புவிசார் அரசியல் நோக்கத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து இலங்கையை செல்ல பிள்ளையாக பார்க்கின்றன.
 
இதனால், இலங்கை என்னதான் சர்வதேச ஒப்பந்தங்களை மீறினாலும், அதனை அந்த நாடுகள் மன்னிக்கின்றன. ஆனால், இலங்கை முற்று முழுதாக சீனாவுடன் தான் தங்கி நிற்கின்றது. இந்தவிடயத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் தோல்வி காணும். இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் நிச்சயம் தோல்வி காணும்" என அவர் கூறுகின்றார்.