வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2024 (12:39 IST)

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

Sweets

தீபாவளி நேரத்தில் குளிர்சாதன பெட்டியில் இருந்து டைனிங் டேபிள் வரை இனிப்புப் பெட்டிகள் பரவியிருக்கும்.

 

ஆனால், இந்த இனிப்புகளுடன் சேர்த்து இப்போது இனிப்புகளில் கலப்படம் இருப்பதாக செய்திகளும் வருகின்றன.

 

தினமும் ஏராளமான கலப்பட பால், நெய் மற்றும் பால்கோவா போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

 

பண்டிகை நாட்களில் இனிப்புகளுக்கு அதிக தேவை இருப்பதே இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக தேவையை பூர்த்தி செய்ய இந்த உணவுப் பொருட்களில் செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் அடிக்கடி சேர்க்கப்படுகின்றன.

 

இந்த கலப்பட பொருட்கள் நிச்சயமாக மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

 

ஆனால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (FSSAI) சில எளிய சோதனைகளை பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே இந்த கலப்படங்களை கண்டறிய முடியும்.

 

பால் மற்றும் பால் பொருட்கள்

 

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வது மிகவும் பொதுவான பிரச்னையாகும்.

 

milk
 

ஒரு பொருளில் கொழுப்பை சேர்ப்பதோடு கூடவே திடப்பொருளின் உள்ளடக்கத்தை அதிகரிப்பதன் மூலம் அந்தப் பொருளின் மோசமான தரத்தை மறைப்பதும் கலப்படம் ஆகும்.

 

செயற்கையாக தயாரிக்கப்படும் பாலில் யூரியா, சலவை சோப்பு, தூள் சோப்பு, போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, ஸ்டார்ச் மற்றும் நியூட்ரலைசர், காஸ்டிக் சோடா, சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் பைகார்பனேட் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் உள்ளன என்று எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவிக்கிறது.

 

இதுபோன்ற கலப்பட பொருட்களை உட்கொள்வதால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு பல முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

பாலில் உள்ள தண்ணீரை அளவிடுதல்
 

சோதனை முறை:
 

• தட்டை சிறிது சாய்த்து அதன் மேற்பரப்பில் ஒரு துளி பாலை விடவும்.

 

• சுத்தமான பால் முதலில் நிலையாக இருந்து பின்னர் மெதுவாக வழிய ஆரம்பிக்கும். உலர்ந்த பின் ஒரு வெள்ளை அடையாளம் காணப்படும்.

 

• தண்ணீர் கலக்கப்படும் பால் எந்த தடயமும் இல்லாமல் உடனடியாக வழிந்துவிடும்.

 

பாலில் சோப்பு இருப்பதை கண்டறிதல்
 

• 5 முதல் 10 மிலி பால் மாதிரியை எடுத்து அதில் சம அளவு தண்ணீர் கலக்கவும்.

 

• இந்தக் கலவையை நன்றாக கலக்கவும்.

 

• பாலில் சோப்பு கலப்படம் இருந்தால் அதன் மீது அடர்த்தியான நுரை உருவாகும்.

 

• கலக்கும் போது மிக மெல்லிய நுரை படிந்தால், பால் தூய்மையானது என்று கருதலாம்.

 

பால்கோவாவில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி?

 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் டன்கணக்கில் கலப்பட பால்கோவாவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு கைப்பற்றுகிறது.

 

பால்கோவா என்பது இனிப்புகள் தயாரிப்பதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பால் பொருள். இது பாலை கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.

 

இது பொதுவாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் சற்று இனிப்புடன் இருக்கும்.

 

இது பல பாரம்பரிய இனிப்புகளில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

 

ஸ்டார்ச், வனஸ்பதி, ப்ளாட்டிங் பேப்பர், சாக் தூள் ஆகியவை பொதுவாக இதில் கலப்படம் செய்யப்படுகின்றன.

 

பால் கோவாவில் கலப்படத்தைக் கண்டறிய பல வழிகள் உள்ளன:

 

• ஒரு தேக்கரண்டி கோவாவை எடுத்து ஒரு கப் சூடான நீரில் கலக்கவும். அடுத்து கோப்பையில் சிறிது அயோடின் சேர்க்கவும். அயோடின் சேர்த்த பிறகு கோவா நீலமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். இல்லையெனில் அது தூய்மையானது மற்றும் மனித நுகர்வுக்கு ஏற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு தெரிவிக்கிறது.

 

• ஃபார்மலின் போன்ற ரசாயனங்கள் இருப்பதை கண்டறிய கந்தக அமிலம் உதவுகிறது. ஒரு பீக்கரில் சிறிய மாதிரியை எடுத்து அதில் சிறிது கந்தக அமிலத்தைச் சேர்க்கையில், அந்த மாதிரி ஊதா நிறமாக மாறினால் அது கலப்படமாக இருக்கலாம்.

 

• இந்த சோதனையை பால்கோவா வாங்கும் போதும் செய்யலாம். புதிய பால்கோவா எண்ணெய் பசையுடன், மணல் மணலாக இருக்கும். உள்ளங்கையில் வைத்து தேய்க்கும்போது எண்ணெய் பசை இருக்கும். சுவை சற்று இனிப்பாக இருக்கும். அதை வாங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து உங்கள் உள்ளங்கையில் தேய்க்கவும். மேற்கூறிய பண்புகள் இருந்தால் அது தூய்மையானது.

 

• பால்கோவாவில் வனஸ்பதி உள்ளதா என்று சோதிக்க, அதை ஒரு கண்ணாடி குடுவையில் வைக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். கலவை சிவப்பு நிறமாக மாறினால், மாதிரி தூய்மையற்றது மற்றும் மனித நுகர்வுக்கு தகுதியற்றது என்று பொருள்.

 

இனிப்புகளில் கலப்படத்தை எப்படி கண்டறிவது?
 

இனிப்புகளுக்கு இனிப்பு சுவையை கொண்டுவரும் சர்க்கரை, வெல்லம் மற்றும் தேன் ஆகியவையும் கலப்படத்தில் இருந்து தப்பவில்லை.

 

Honey
 

இவற்றிலும் பல வகையான கலப்படங்கள் காணப்படுகின்றன, சில சோதனை முறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

 

தேனில் சேர்க்கப்பட்ட சர்க்கரையை கண்டறிய

 

சோதனை முறை 1

 

• ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் எடுக்கவும்.

 

• அதில் ஒரு துளி தேன் சேர்க்கவும்.

 

• சுத்தமான தேன் தண்ணீரில் கரையாது.

 

• தண்ணீரில் தேன் பரவினால் அதில் சர்க்கரை இருக்கிறது என்று பொருள்.

 

சோதனை முறை 2

 

• பஞ்சு திரியை தேனில் தோய்த்து தீயில் காட்டவும்.

 

• சுத்தமான தேன் நன்றாக எரிந்துவிடும்.

 

• தேனில் கலப்படம் இருந்தால் தண்ணீர் இருப்பதால் சரியாக எரியாது. சிறிது எரிந்தாலும் லேசான சத்தம் வரும்.

 

சர்க்கரை/வெல்லம் ஆகியவற்றில் சாக் பவுடரை கண்டறிய

 

• ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுக்கவும்.

 

• 10 கிராம் பொருளை தண்ணீரில் கரைக்கவும்.

 

• சர்க்கரை / வெல்லத்தில் சாக் பவுடர் இருந்தால் அது டம்ளரின் அடியில் தங்கிவிடும்.