வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (12:26 IST)

லெபனான் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகள் ஹெஸ்பொலாவை எந்த அளவுக்கு பாதிக்கும்?

Pager Explosion

லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே நிகழ்ந்த வாக்கி டாக்கி வெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹெஸ்பொலா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன.

 

கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹெஸ்பொலா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் இறுதிச் சடங்குகளிலும் சில வாக்கி டாக்கி வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹெஸ்பொலா குற்றம் சாட்டியது. ஆனால், இஸ்ரேல் அதுகுறித்துக் கருத்து தெரிவிக்கவில்லை.

 

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கால்லன்ட், “போர் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாக” அறிவித்தார். அப்போது, இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வடக்கே நிலைநிறுத்தப்பட்டது.

 

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இது மிகத் தீவிரமான விஷயம்” என்று எச்சரித்தார். அதோடு, “அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைபிடிக்குமாறு” அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

 

“இந்தச் சாதனங்கள் அனைத்தையும் வெடிக்கச் செய்ய ஒரு பெரிய திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்,” என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

ஹெஸ்பொலா நடத்திய ராக்கெட் தாக்குதல்

 

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் 11 மாதங்களாக எல்லை தாண்டிய சண்டைக்கு பின்னர் ஒரு முழுமையான மோதலுக்கான அச்சங்கள் ஏற்கெனவே அதிகரித்து வருகிறது.

 

கடந்த புதன்கிழமை வாக்கி டாக்கி வெடிப்புகள் நடந்து சில மணிநேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை “பத்திரமாக அவர்களின் வீடுகளுக்கு” திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தார்.

 

அண்மையில் காஸாவில் ஈடுபட்டிருந்த ராணுவப் பிரிவு வடக்கே மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது.

 

ஹமாஸுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறும் ஹமாஸ், காஸாவில் சண்டை முடியும்போதுதான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நிறுத்தும் எனக் கூறியுள்ளது. இந்த அமைப்பு, இரானால் ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் பல மேற்கத்திய நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது.

 

ஹெஸ்பொலாவின் சக்தி வாய்ந்த தலைவர் ஹசன் நஸ்ரல்லா வியாழன் அன்று உரை நிகழ்த்தவுள்ள நிலையில், அந்த அமைப்பு அடுத்து என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது அப்போது தெரிய வரலாம்.

 

ஹெஸ்பொலாவின் ஊடக அலுவலகம் நேற்று நடந்த இரண்டாவது வெடிப்பில் 16 வயது சிறுவன் உட்பட அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது.

 

ஹெஸ்பொலா, இஸ்ரேலிய படைகளை எல்லைக்கு அருகிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கும் கோலன் குன்றுகளிலும் குறிவைத்து, இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை நோக்கி ராக்கெட்டுகளை வீசியது.

 

நேற்று லெபனானில் இருந்து சுமார் 30 ராக்கெட்டுகள் கடந்து சென்றதாகவும், தீ பரவியதாகவும், ஆனால் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா வீரர்களை இஸ்ரேலிய விமானம் தாக்கியதாக அந்த அமைப்பு கூறியது.

 

வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகள்

 

நேற்று நடந்த கொடிய வெடிப்புகள் ஹெஸ்பொலாவுக்கு மற்றோர் அடியையும், அதன் முழு தகவல் தொடர்பு வலையமைப்பிலும் இஸ்ரேல் ஊடுருவி இருக்கலாம் என்பதற்கான சாத்தியமான அறிகுறிகளையும் பிரதிபலிக்கிறது.

 

செவ்வாயன்று ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதைக் கண்டு லெபனான் மக்கள் பலரும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர்.

 

லெபனான் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, 8 வயது சிறுமி, 11 வயது சிறுவன் உட்பட 12 பேர் இந்த வெடிப்புகளில் கொல்லப்பட்டனர். சுமார் 2,800 பேர் காயமடைந்தனர்.

 

புதன்கிழமையன்று தெற்கு பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியான தஹியாவில் கொல்லப்பட்டவர்களில் நால்வரின் இறுதிச் சடங்கில் பிபிசி குழுவினர் இருந்தபோது, உள்ளூர் நேரப்படி, மாலை 5 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது.

 

துக்க நிகழ்வில் இருந்தவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் வெடிப்புகள் நடப்பதாகத் தகவல்கள் வரத் தொடங்கின.

 

ஓர் உறுதிப்படுத்தப்படாத சமூக ஊடக வீடியோவில், பெரியளவிலான மக்கள் கலந்துகொண்ட ஹெஸ்பொலா ஊர்வலத்தின்போது நடந்த ஒரு சிறிய வெடிப்பைத் தொடர்ந்து ஒரு நபர் தரையில் விழுந்ததைக் காட்டியது.

 

தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும், தெற்கு லெபனான், பெக்கா பள்ளத்தாக்கிலும் நடந்த வெடிப்புச் சம்பவங்களுக்கு 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் பதிலளித்ததாக லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இந்தக் கொடிய வெடிப்புகள், “வாக்கி டாக்கிகளை இலக்காகக் கொண்டவை” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹெஸ்பொலாவுக்கு நெருக்கமான ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், அதன் உறுப்பினர்கள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியதாகக் கூறினார்.

 

இஸ்ரேல் உளவுத்துறை வாக்கி டாக்கிகளில் பொறி வைத்ததா?

 

லெபனானின் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனமான என்.என்.ஏ. வடக்கு பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள சாட் பகுதியில் செல்லுலார் சாதனங்களை விற்கும் கடைக்குள் வாக்கி டாக்கி வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறியது.

 

மேலும், அந்தச் சாதனம் ICOM-V82 என்ற கையடக்க வி.ஹெச்.எஃப். ரேடியோ என்று என்.என்.ஏ. செய்தி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இது ஜப்பானை தளமாகக் கொண்ட மின்னணு உற்பத்தியாளரான ICOM என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை.

 

என்.என்.ஏ. செய்தி நிறுவனம், மற்றொரு ICOM-V82 சாதனம் பால்பெக் நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வெடித்தது. வீடியோ காட்சிகள் ஒரு மேசை மற்றும் சுவரில் சேதம் இருப்பதையும் ஐகாம் என்ற லேபிளை தாங்கிய வாக்கி டாக்கியின் சேதமடைந்த பகுதிகளையும் காட்டியது.

 

மற்ற இரண்டு இடங்களில் இருந்து சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் அதே போன்ற சாதனங்களைக் காட்டுகின்றன.

 

ராய்ட்டர்ஸ் செய்தி முகமை லெபனான் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, வெடித்த வாக்கி டாக்கிகள், பேஜர்கள் வாங்கப்பட்ட அதேநேரத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹெஸ்பொலாவால் வாங்கப்பட்டதாகக் கூறியது.

 

இஸ்ரேலிய உளவுத்துறை, ஹெஸ்பொலாவுக்கு இந்த வாக்கி டாக்கிகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, ஆயிரக்கணக்கான வாக்கி டாக்கிகளில் இப்படியான பொறிகளைப் பொருத்தியதாக, இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, தி ஆக்சியோஸ் என்ற செய்தி இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

 

பிபிசி, ஐகாம்-இன் பிரிட்டன் பிரிவிடம் கருத்து தெரிவிக்குமாறு கேட்டது. ஆனால், அந்த நிறுவனம் அனைத்து ஊடக கேள்விகளையும் ஜப்பானில் உள்ள அந்நிறுவனத்தின் ஊடக அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளது. பிபிசி ஜப்பானிலுள்ள ஐகாம் நிறுவனத்தை அணுகியுள்ளது.

 

செவ்வாயன்று வெடித்த பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை இஸ்ரேல் மறைத்து வைத்ததாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸிடம் அமெரிக்க, லெபனான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

பெய்ரூட்டில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவர் பிபிசியிடம், அவர் பார்த்தவர்களில் சுமார் 60% பேர் குறைந்தது ஒரு கண்ணையாவது இழந்துள்ளதாகவும் பெரும்பாலானவர்கள் இரு கையையும் இழந்துள்ளதாகக் கூறினார்.

 

“ஒரு மருத்துவராக என் வாழ்வின் மிக மோசமான நாள் இது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் நிலையும் மிக மோசம்,” என்று மருத்துவர் எலியாஸ் வார்ராக் கூறினார்.

 

“துரதிர்ஷ்டவசமாக, எங்களால் நிறைய பேரின் கண்களைக் காப்பாற்ற முடியவில்லை. அவர்களில் சிலருக்கு கண்களோடு நிற்காமல், மூளையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன,” என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்தத் தாக்குதல்கள் ஹெஸ்பொலாவை முடக்குமா?

 

இந்த நடவடிக்கைகள் ஹெஸ்பொலாவை அசைத்துப் பார்த்திருக்கலாம், ஆனால் அவர்கள் இதன் காரணமாக அமைதியடைந்துவிட மாட்டார்கள் என்று கூறுகிறார் பிபிசி சர்வதேச செய்திகள் பிரிவின் ஆசிரியர் ஜெரிமி போவென்.

 

இந்த நடவடிக்கை மூலமாக ஹெஸ்பொலாவை நிறுத்தும் இலக்கை இஸ்ரேல் நெருங்கிவிட்டதா என்றால், அதற்கு இன்னும் வெகு தூரம் இருக்கிறது.

 

இஸ்ரேலின் வடக்கு எல்லையில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் திரும்புவதற்கு இந்த நடவடிக்கை வழிசெய்யாது. இந்த மக்கள் போர் தொடங்கியதில் இருந்து எல்லைப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.

 

இஸ்ரேல் ஆபத்தான மற்றும் சிறப்பு வாய்ந்த ‘ஆயுதங்களை’ பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் கண்ணோட்டத்தில், இந்த ‘ஆயுதங்கள்’ மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்பது தெளிவாகிறது.

 

வாக்கி-டாக்கிகளை வெடிக்க வைப்பதற்கு முன்பு, மத்தியக் கிழக்கு நாளிதழான அல்-மானிட்டர், இஸ்ரேலால் இந்த ஆயுதங்களை தாம் எதிர்பார்த்த விதத்தில் பயன்படுத்த முடியவில்லை எனக் கூறியது.

 

அந்த செய்திப்படி, இஸ்ரேலின் அசல் திட்டம் ஹெஸ்பொலா தாக்குதல்களால் பாதிக்கப்படும்போது மேற்கொண்டு தாக்குதல்களை நடத்துவதுதான். அதுதான் நடந்தது.

 

பேஜர்களில் ஏற்பட்ட வெடிப்புகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 18 மாலையில் லெபனானில் வாக்கி-டாக்கிகளில் வெடிப்புகள் ஏற்பட்டன.

 

அல் மானிட்டரின் செய்தி, பேஜர் தாக்குதல் ஒரு பெரிய மோதலின் ஆரம்பம் என்று கூறியது. இது மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் அல்லது தெற்கு லெபனானுக்குள் நுழைவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

ஆனால் அதே செய்திகளில், ஹெஸ்பொலாவுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக இஸ்ரேல் விரைவில் இந்தத் தாக்குதல்களை நடத்தலாம்.

 

ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு வலையமைப்புகளை ஊடுருவித் தன்னால் அவற்றைச் சிரழிக்க முடியும் என்பதை இஸ்ரேல் காட்டியுள்ளது.

 

ஆனால், இந்தத் தாக்குதல்களால் இந்தப் பிராந்தியம் ஓர் அங்குலம்கூடப் போரில் பின்வாங்காதது மட்டுமின்றி, போரை மேலும் நெருங்கிவிட்டது.

 

ஹெஸ்பொலாவுடனான போரிலுள்ள ஆபத்துகள்

 

இந்த சமீபத்திய தாக்குதல்கள் லெபனான் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் கோபத்தைத் தூண்டியுள்ளன.

 

தாக்குதலின்போது பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்கள் பற்றி இஸ்ரேல் கவலைப்படாதது இந்தக் கோபத்திற்கு ஒரு காரணம். ஹெஸ்பொலா அமைப்பினருடன் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த இவர்கள்

 

தாக்குதலின் போது பொதுமக்கள், ஹிஸ்புல்லா போராளிகளுடன் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்கள், இறந்தவர்கள் பற்றி இஸ்ரேல் கவலைப்படாததும் இந்தக் கோபத்திற்கு ஒரு காரணம்.

 

நெரிசலான சந்தையில் ஒரு பேஜர் வெடிப்பதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. லெபனானில் ஒரு நபரின் பேஜர் வெடித்து, அவரது மகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன.

 

இந்தத் தாக்குதலில் இருந்து ஹெஸ்பொலா மீண்டு வரலாம். ஆனால், அது மெதுவாக மீண்டும் தன்னை ஐக்கியப்படுத்தும், தங்களுக்குள் தொடர்புகொள்ள வேறு வழிகளைக் கண்டுபிடிக்கும்.

 

லெபனான் ஒரு சிறிய நாடு. செய்திகளை இங்கு எளிதாக அனுப்பலாம். லெபனானுக்கான இரான் தூதரும் பேஜர் வெடிப்பில் காயமடைந்தார்.

 

ஹெஸ்பொலாவும் இரானும் இப்போது தங்கள் காயங்களை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தச் சமீபத்திய தாக்குதல்கள் பிராந்தியத்தை மீண்டும் போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளன.

 

இதே நிலை நீடித்தால், விரைவில் இப்பகுதி போர்க்களமாக மாறிவிடும்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.