ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 டிசம்பர் 2020 (13:46 IST)

zoom app: கொரோனா காலத்தில் 'ஸூம்' நிறுவனம் சம்பாதித்தது எவ்வளவு பணம்?

காணொலிக் காட்சி வாயிலான கூட்டங்களுக்கனான சேவை வழங்கும் ஸூம் நிறுவனம் இந்த ஆண்டில் தனது விற்பனை, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் எனக் கூறி இருக்கிறது

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இந்த சூம் நிறுவனத்தின் வருவாய், கடந்த மார்ச் 2020-ல் கணித்ததை விட கூடுதலாக வர வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது.

இந்த கொரோனா பெரும்தொற்று நோயால், ஒரு காலத்தில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்து இருந்த நிறுவனம் இன்று எல்லோருக்கும் பரிட்சயமான ஒரு நிறுவனமாகி இருக்கிறது.

இதற்கிடையில், Zoom செயலி மற்றும் சேவையைப் பயன்படுத்தும் பல்வேறு பயனர்களை, பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக மாற்றிக் கொண்டு இருப்பதாகக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் யுவான்.

அக்டோபர் 2020 கணக்குப்படி, 10 ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கும் சுமார் 4.34 லட்சம் நிறுவனங்கள், ஸூம் செயலிக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் 2019 காலாண்டில் இருந்ததை விட 485% அதிகம்.

இந்த திடீர் ஏற்றத்தல், ஸூம் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் என எல்லாமே அதிகரித்து இருக்கின்றன. குறிப்பாக சூம் நிறுவனத்தின் பங்கு விலை உச்சத்தைத் தொட்டது. தற்போது ஒரு சிறிய சரிவைக் கண்டு இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மூன்று மாத காலத்தில், சூம் நிறுவனம் 777 மில்லியன் அமெரிக்க டாலரை விற்பனை மூலம் ஈட்டி இருக்கிறது. இது கடந்த ஆண்டு அக்டோபர் காலாண்டை விட 367% அதிகம்.

ஸூமின் லாபம் இந்த காலாண்டில் 198.4 மில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத காலாண்டில் ஈட்டிய 2.2 மில்லியன் டாலரை விட அதிகம் .

ஸூம் நிறுவனம் தன் நிறுவனத்தின் விற்பனை கணிப்பை, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டுக்கான விற்பனைக் கணிப்பை, நேற்று முன் தினம் (30 நவம்பர் 2020 திங்கட்கிழமை), மூன்றாவது முறையாக ஸூம் நிறுவனம் அறிவித்தது.

இந்த நிதி ஆண்டு நிறைவுக்குள், ஸூம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 2.5 பில்லியன் டாலரைத் தொடலாம் என விற்பனைக் கணிப்பை அதிகரித்து இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த ஆண்டுக்கான மொத்த விற்பனைக் கணிப்பு 2.37 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணித்து இருந்தது நினைவுகூரத்தக்கது. கடந்த முழு நிதி ஆண்டில் ஸூம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 622.7 மில்லியன் டாலராக இருந்தது .

இந்த நிதி ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள், சூம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 806 முதல் 811 மில்லியன் டாலராக இருக்கலாம் எனக் கணித்து இருக்கிறது. இதனால் பங்குச் சந்தையில் சூம் நிறுவன பங்குகளின் விலை கொஞ்சம் சரிவைச் சந்தித்து இருக்கிறது. இத்தனை நாள் அசுர வளர்ச்சி கண்டு வந்த ஸூம் நிறுவனத்தில், ஒரு சிறிய தடை வந்தது போலத் தெரிகிறது.

கொரோனா வைரஸ் பிரச்னைக்குப் பின், ஸூம் நிறுவனம் எப்படி செயல்படும் என்பதை அறிந்து கொள்ள முதலீட்டாளர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

கொரோனாவுக்குப் பிறகு, பல சிறு குறு தொழில்முனைவோர்கள் மற்றும் தனி நபர்கள், சூம் செயலி அல்லது சேவையைப் பயன்படுத்தாமல் போகலாம்.

ஆனால் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட, வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, கொரோனாவுக்குப் பிறகு அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்ப்பதாக, சூம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி கெல்லி ஸ்டெக்கில்பெர்க் கூறுகிறார்.