1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (13:15 IST)

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா?

தமிழ் இளைஞர்களுக்கு,



இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும்.அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும்.

தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, இந்த மாதிரியான உரையாடல்களை பல இடங்களில் கேட்க முடியும்.ஆனால், எந்த கலாசாரத்தில் இருந்தாலும் இப்படியான உரையாடல்கள் நடக்கக் கூடாது என்பதுதான் ஓர் இளம்பெண்ணின் விருப்பம். அதுவும் இக்காலத்தில், இந்த நூற்றாண்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆணாதிக்க சமுதாயத்தின் ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை போன்றும் அப்பாவித்தனமாகவும் இருக்க வேண்டும், மேலும் "பாலியல் உறவு" என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் வெட்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்து இருப்பது போல தெரிகிறது.

சீதை போன்ற ஒரு மனைவிதான் வேண்டுமா?

சில நேரங்களில், எங்கள் கோபம் கண்களை மறைக்காமல் இருக்கும் பட்சத்தில், உங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதாபிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்திருப்பீர்கள். எனவே, "நடத்தை குறித்த சந்தேகம் எழும்போதெல்லாம், தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் திருமணம் செய்யக்கூடும்" என்று நினைத்தே வளர்ந்திருப்பீர்கள்.





இது போதாது என்று, பெண்களை தேவதை போன்று சித்தரிக்கும் பல தமிழ் படங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள்தான் நீங்கள். ராமாயணத்தில் வரும் சீதையை பின்பற்றும், அழகான பதுமைகளாக பெண்களைப் போற்றும் அர்த்தமற்ற பல படங்களையும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

அடக்கமான பெண்களுக்கும் பாலியல் ஆசை உண்டு

சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில், பெண்களை மூன்று விதமாக பிரிக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். அவரின் கருத்துப்படி ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும், ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும், வேறுசில பெண்களை பார்க்கும்போது பயம் உண்டாகும், என மூன்று வகையாக அவர்களை பிரித்திருப்பார்.

பாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான, அப்பாவிப் பெண்ணான சௌந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதை நீங்களும் கைதட்டி வரவேற்றிருப்பீர்கள்.



இப்படி நீங்கள் பார்த்த புராணங்கள், படங்களில் எல்லாம் இரண்டு கோணங்களில்தான் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஒன்று, அடக்கமான அப்பாவியான பெண்கள் அல்லது காம உணர்வு கொண்ட மோசமான பெண்கள்.

அடக்கமான பெண்கள், காம உணர்வு கொண்டிருக்க கூடாதா?

உங்களால் இதை யோசிக்க முடியாது. ஏனெனில், ஒரு பெண்ணின் குணம் என்பது அவளது கற்பை வைத்தே இங்கு அளவிடப்படுகிறது.

பாலியல் சுதந்திரம் இருபாலருக்குமானது

ஆனால் ஆண்களுக்கு இவ்வாறு இல்லை. டேட்டிங் செய்வது, பெண்களுடன் இருப்பது போன்ற விவகாரங்களில் ஆண்களுக்கு முழு பாலியல் சுதந்திரம் உண்டு. ஆண்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை இருப்பது போலும், இந்த உரிமைகள் குறித்து கேள்வி கேட்பது இழிவானது போலவும், நீங்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ளது.

உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்கிறோம். பொறுமையாக கேளுங்கள். பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளும் ஆசைகளும் உண்டு. முழுமையான பாலியல் சுதந்திரத்தை நீங்கள் அனுபவிப்பது போன்று, எங்களுக்கும் அனுபவிக்க விருப்பம். இதை வைத்து எங்களை மதிப்பிட வேண்டாம். "திருமணத்திற்கு தகுதியற்றவள்" என கேலிக்குள்ளாகாமல் இருக்க நாங்கள் விரும்புகிறோம்.

எங்களை பெண்களாக இல்லாமல் ஏதோ போகப் பொருளாக பார்க்க வேண்டாம்.

இது மட்டுமில்லாமல் முதல் காதலனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனையை பெரும்பாலான பெண்கள் நம்புவதில்லை. உங்களைப் போலதான், இளம் வயதில் சாகசமும் வேடிக்கையும் எங்களில் சிலருக்கும் தேவை.

கற்பை வைத்து பெண்ணை வரையறுக்க வேண்டாம்

அடக்கமான பெண்தான் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருக்க முடியும் என்ற மோசமான சிந்தனையை அழித்து விடுங்கள்.

பாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர், புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், மேலும் நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள். பாலியல் ஆசைக்கான விருப்பம் மற்றும் கற்பை வைத்து ஒரு பெண்ணை வரையறுக்கக் கூடாது. ஒரு பெண்ணை மதிப்பிடும்போது அவளது கன்னித்தன்மையை பிரதானமாக வைப்பதற்கு பதிலாக, அவளது அறிவுத்திறன், சுதந்திரத் தன்மை போன்ற குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்,

இளம் தமிழ் பெண்கள்.

(குறிப்பு: Tamilculture.com என்ற இணையதளத்தில் நிவேதா ஆனந்தன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம், மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)