முகச்சிதைவு அறுவை சிகிச்சை; சிறுமியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமி டான்யாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள வீராபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி டான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அச்சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.
அதன்படி தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கபட்டு அவருக்கு உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போனில் தொடர்பு கொண்டு முதல்வர் நலம் விசாரித்தார்.
பின்னர் சிறுமி டானியாவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன் வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது! இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.