1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (18:46 IST)

விநாயகர் சதுர்த்தியில் கொழுக்கட்டை வரலாறு: இந்தப் பலகாரத்தின் கதை என்ன?

Kozhukattai
இன்று விநாயகர் சதுர்த்தி. கார கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, மணி கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, சாக்லேட் கொழுக்கட்டை என எத்தனையோ வகைவகையான கொழுக்கட்டைகள் வந்துவிட்டன. ஆனால், இந்த கொழுக்கட்டை தமிழ்நாட்டுக்குள் எப்போது வந்தது? விநாயகருக்கு கொழுக்கட்டையை படைப்பது எப்போது தொடங்கியது?
 
விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டுக்கு எப்போது அறிமுகமானது என்பது குறித்து ஆய்வாளர்களும் தமிழ் அறிஞர்களும் கூறும் சில வாதங்களைப் பார்ப்பது இதற்கு விடை தேட உதவலாம்.
 
"பல்வேறு பெயர்களில் வணங்கப்பெறும் விநாயகர், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். அதற்கு முன் பிறந்த சங்க இலக்கியங்களில் இக்கடவுளரைப் பற்றிய குறிப்பு இல்லை" என, தன் 'பண்பாட்டு அசைவுகள்' புத்தகத்தில் தொ.பரமசிவம் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், "முதலாம் ராஜராஜ சோழன் எடுப்பித்த தஞ்சை பெரிய கோயிலில் பரிவார தேவதைகளில் ஒன்றாக கணபதியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். 'பரிவார ஆலயத்துப் பிள்ளையார் கணவதியார்' என கல்வெட்டு இவரைக் குறிக்கிறது. இவருக்கு வாழைப்பழம் படையலாகப் படைக்கப்பட்டதும் அக்கல்வெட்டால் தெரியவருகிறது.
 
இப்பிள்ளையாருக்கு நாள்தோறும் 150 வாழைப்பழங்கள் நிவேதனம் செய்ய அரசன் 360 காசுகளை ஒதுக்கியுள்ளான்" என, விநாயகர் வழிபாட்டில் வாழைப்பழம் இடம்பெற்றது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
 
 
விநாயகரை வழிபடும்போது படையலில் வாழைப்பழம் முதன்மையாக இருந்துள்ளதை இதன்மூலம் அறியலாம்.
 
அதேபோன்று, "பிள்ளையார் விநாயகராக மாறும்வரை மக்கள் தங்களின் பயன்பாட்டு உணவுப்பொருட்களை கடவுளுக்கு வைத்து வழிபடும் பழக்கம் இருந்தது" என, தன்னுடைய 'விநாயகர் அரசியல்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்.
 
வாழைப்பழம் உள்ளிட்ட தங்களின் பயன்பாட்டு உணவுப்பொருட்களை வைத்து வழிபடும் முறையே இருந்துவந்த நிலையில், கொழுக்கட்டை எப்போது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் என்பது குறித்து சொற்பொழிவாளரும் இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினருமான சுகிசிவம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நீராவியில் வேகவைக்கும் உணவுகளே போர்ச்சுகீசியர்கள் வருகைக்குப் பின்னர்தான் நமக்கு தெரியும். வெறும் மாவை வேகவைப்பது, கிழங்கு வகைகளை வேகவைப்பது உள்ளிட்டவை போர்ச்சுகீசியர்களின் உணவுப்பழக்கம்.
 
ஆனால், குறிப்பாக கொழுக்கட்டை என்கிற உணவுவகை எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தது என்பது மிகவும் ஆய்வுக்குரிய ஒன்று. விநாயகருக்கு பழங்களை வைத்துப் படைப்பதுதான் ஆரம்ப காலத்தில் நடைமுறையாக இருந்திருக்கும். கொழுக்கட்டை என்பது விநாயகர் வழிபாடு வெகுஜன வழிபாடாக மாறிய பின்னர் வந்திருக்கலாம்" என்றார்.
 
அவருடைய கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக பிபிசி தமிழிடம் பேசிய வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான அருணன், "விநாயகர் வழிபாடு என்பதே பல வாத விவாதங்களுக்கு உட்பட்டது. 'கணத்தினுடைய பதி என்பதுதான் கணபதி'. அந்த கணத்தின் தலைவனைக் குறிக்கும் சொல் இது. பழங்குடி மக்களின் தலைவனை குறிக்கும் சொல். அந்த கணத்தினுடைய குறியீடாக யானை இருந்திருக்கலாம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பிரசாதம் இருப்பது போல், விநாயகருக்கு பிரத்யேகமாக பழக்கத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டு கொழுக்கட்டை உருவாகியிருக்கலாம்" என்றார்.
 
விநாயகருக்கு மட்டுமின்றி ஔவையார் வழிபாடு அல்லது செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்ற பெயரில், தமிழ்நாட்டில் பெண்களால் மட்டுமே நடத்தப் பெறும் வழிபாட்டிலும் அரிசி மாவை உப்பில்லாமல் பிசைந்துக் கொழுக்கட்டை செய்து வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை ஔவையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். இந்தக் கொழுக்கட்டைப் பிரசாதம் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.