1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (20:38 IST)

ஆசிய கோப்பை 2023: கோலி, கே. எல்.ராகுல் அபார சதம் - இலக்கை எட்டுமா பாகிஸ்தான்?

Pakistan- india match
இன்று நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்களை குவித்துள்ளது.
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
 
இன்றைய போட்டியில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு 356 ரன்களை சேர்த்துள்ளனர்.
 
விராட் கோலி 122 ரன்களும், கே. எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து இருவரும் சேர்ந்து 233 ரன்களை எடுத்துள்ளனர். ஆசியக் கோப்பையில் ஒரு ஜோடி சேர்த்த அதிபட்ச ரன்கள் இதுவாகும்.
 
இது விராட் கோலியின் 47ஆவது சதமாகும். கே எல் ராகுல் ஒரு சிறப்பான கம் பேக் கொடுத்து தனது ஏழாவது சதத்தை எட்டியுள்ளார்.
 
இதன்மூலம் 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் அணி.
 
முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மேன் கில் ஆகிய இருவரும் முறையே 49 பந்துகளுக்கு 56 ரன்களும், 52 பந்துகளுக்கு 58 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
பாகிஸ்தான் அணியில் ஷதாப் மற்றும் ஷஹீன் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
 
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை விட்டதும் சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
 
ஆனால் விடாமல் மழை பெய்ததால், ஆட்டம் திங்கள்கிழமைக்கு (ரிசர்வ் டே) ஒத்திவைக்கப்பட்டது. இன்று பிற்பகலும் கொழும்பில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் ஒரு வழியாக மாலை 4:30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான், 357 ரன்கள் என்ற இலக்கே பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரும் அழுத்தத்தை தரும் என்கிறார். அதேசமயம் விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
“ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே. எல் . ராகுல் ஜோடி நேரம் செல்ல செல்ல ருத்ர தாண்டவம் ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
பாகிஸ்தானை பொறுத்தவரை ஆரிஸ் ரோஃப் உடல் நலக் குறைவு காரணமாக விலகியதால் அவரால் மீதமுள்ள 5 ஓவர்களை வீச முடியவில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய இழப்புதான்.” என கிரிக்கெட் விமர்சகர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
 
“இந்த மைதானத்தின் வரலாற்றை எடுத்து பார்த்தால், இரண்டாவதாக விளையாடிய அணி இதுவரை 300 இலக்கை தொட்டதில்லை. எனவே இந்த இலக்கு பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாகதான் இருக்கும். அதேபோல 357 ரன்கள் இலக்கு என்பதும் பாகிஸ்தான் அணி மீது ஒரு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மழை வந்தால் அதுவும் பிரச்னையாகும்.” என்றார் அப்துல் ரகுமான்.
 
மழை காரணமாக சாதகமற்ற நிலை காணப்பட்டப் போதிலும் இந்திய அணியால் எப்படி இத்தனை ரன்களை குவிக்க முடிந்தது?
 
மைதானம் வழக்கத்திற்கு திரும்பிவிட்டது என்பதை ஆட்டத்தை பார்த்தவுடன் தெரிந்தது. ஆனால் பிட்சை பொறுத்தவரை பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித சாதகமான நிலையும் ஏற்படவில்லை.
 
இதே பிட்ச், பாகிஸ்தான் அணிக்கும் சாதகமாக இருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இணைந்து வேகமாக ரன் குவித்தால் மட்டுமே பின்னர் வரக்கூடிய வீரர்கள் மீது எந்த அழுத்தமும் செல்லாது என்றார் அப்துல் ரகுமான்.
 
இந்த போட்டி மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டால், போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படும். அவ்வாறு குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கு 187 ரன்கள் இலக்காக வைக்கப்படும். ஆனால் இந்தியாவுடனான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அந்த அணி இறுதிச் சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும்.
 
இலங்கை அணியும் இந்த சுற்றில் ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது வெற்றிக் கணக்கை இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.