ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!
தற்போது அனைத்து பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளும் வசதி இருக்கும் நிலையில், இனி கார் வாங்க கூட ஷோரூம் செல்ல தேவையில்லை என கூறப்படுகிறது. ஆன்லைன் மூலமாக விலையை தெரிந்து கொண்டு ஆர்டர் செய்தால், வீட்டுக்கு நேரடியாக வந்து காரை டெலிவரி செய்யும் வசதி விரைவில் ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய வசதியை ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான ஸெப்டோ தொடங்க உள்ளதாகவும், இதற்காக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா உடன் ஸெப்டோ கைகோர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வசதியை பயன்படுத்தி புதிய ஸ்கோடா கார் வாங்கும் பொதுமக்கள், அனைத்து விவரங்களையும் ஆன்லைன் மூலம் தெரிந்து கொண்டு, ஆன்லைன் தளத்தில் பதிவு செய்த பிறகு ஆர்டர் செய்யலாம். வாடிக்கையாளர் புக்கிங் செய்த கார், அடுத்த பத்து நிமிடங்களில் அவருடைய வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், ஸ்கோடா மற்றும் ஸெப்டோ நிறுவனங்கள் இணைந்து தெரிவித்துள்ளன. ஸ்கோடா நிறுவனத்தின் புதிய மாடலான "கைலாக்" இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள இருக்கும் முதல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த நடைமுறை எந்த அளவுக்கு சாத்தியமாகும்? நேரடியாக சென்று காரை வாங்குவதில் உள்ள திருப்தி இதில் இருக்குமா? என்பவை எல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன
Edited by Mahendran