திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2025 (14:49 IST)

நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட்- இந்தியாவில் தமிழ்நாடு 3-ஆம் இடம்; மக்களுக்கு என்ன பாதிப்பு?

water

அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவது காரணமாக நிலத்தடி நீரில் நைட்ரேட்டின் அளவு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலத்தடி நீர் தர ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

 

 

2024-ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மத்திய ஜல் சக்தி அமைச்சகம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நைட்ரேட்டின் செறிவு அதிகமாக உள்ளதாக கூறியுள்ளது.

 

"இந்த மாநிலங்களில் ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 40% அதிகமாக நைட்ரேட் உள்ளது'' என்கிறது அந்த அறிக்கை.

 

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன? நிலத்தடி நீர் மாசுக்கான காரணங்கள் என்ன? நைட்ரேட் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

 

நிலத்தடி நீர் தர அறிக்கை
 

மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள நிலத்தடி நீரின் தரத்தை ஆய்வு செய்கிறது.

 

இந்தியா முழுவதும் 15,259 இடங்கள் மற்றும் 4,982 ட்ரெண்ட் நிலையங்களில் (Trend Station) இருந்து நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை முறையே ஆய்வுக்கு உட்படுத்தி இந்த அறிக்கையை தயாரிக்கிறது மத்திய நிலத்தடி நீர் வாரியம்.

 

பெறப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் இடம் பெற்றுள்ள ரசாயனங்களின் அளவு, மாசுபாடு, உப்புத்தன்மை போன்றவற்றின் அளவை ஆய்வு செய்து, பி.ஐ.எஸ்.10500 (BIS 10500) தரக்குறியீட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்கு உள்பட்டு இருக்கிறதா என்பது கண்டறியப்படுகிறது.

 

அந்த அறிக்கையில், நிலத்தடி நீரில் அதிகமாக ரசாயனம் இருப்பதற்கான காரணங்கள், பருவமழை காலங்களில் அதன் செறிவில் ஏற்படும் மாற்றங்கள், அனுமதிக்கப்பட்ட அளவுகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

 

டிசம்பர் 31-ஆம் தேதி அன்று, ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கையை வெளியிட்டார்.

 

அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ள நைட்ரேட்
 

விவசாயத்திற்காக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தியாவில், நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமான நைட்ரேட் செறிவு கொண்ட 15 மாவட்டங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த விழுப்புரம் நான்காவது இடத்தில் உள்ளது.

 

நைட்ரேட்டின் அளவு ஒரு லிட்டர் நீரில் 45 மில்லிகிராமிற்கு குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமாக எடுக்கப்பட்ட 48 நீர் மாதிரிகளில் 28 மாதிரிகளில் உள்ள நைட்ரேட்டின் செறிவு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாகவே உள்ளது.

 

தமிழகத்தில் உள்ள அனேக மாவட்டங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நைட்ரேட் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

அதிக நைட்ரேட் செறிவு கொண்ட மாநிலங்களில் ராஜஸ்தான், கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 916 இடங்களில் நீர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 346 இடங்களில் பெறப்பட்ட நீர் மாதிரிகளில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளது.

 

ராஜஸ்தானில் பெறப்பட்ட நீர் மாதிரிகளில் 49.52% நீர் மாதிரிகளில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா (48.99%), தமிழ்நாடு (37.77%), மகாராஷ்டிரா (35.74%), தெலங்கானா (27.48%), ஆந்திர பிரதேசம் (23.5%), மத்திய பிரதேசம் (22.58%) போன்ற மாநிலங்களிலும் பெறப்பட்ட நீர் மாதிரிகளில் நைட்ரேட்டின் அளவு அதிகமாக உள்ளது.

 

பருவமழையால் ஏற்படும் மாற்றம்
 

பருவமழை காரணமாக நீரில் நைட்ரேட் செறிவு அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

"பருவமழை காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்துச் செல்லப்படுவதால் இவ்வாறாக நீரில் நைட்ரேட்டின் செறிவு அதிகரிக்கலாம். அப்படி வெளியேற்றப்படும் நீர், நீர் நிலைகளில் சேர்வதால் நைட்ரேட்டின் அளவு அதிகரிக்கிறது," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பருவமழை காலத்திற்கு முன்பு நீர் நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளில், 30.77% மாதிரிகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நைட்ரேட் உள்ளது. ஆனால் பருவமழை காலத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில், 32.66% மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக நைட்ரேட் உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆனால் பருவமழை இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், சில இடங்களில் பருவமழை நைட்ரேட்டின் செறிவை குறைக்கிறது என்றும், சில இடங்களில் நைட்ரேட்டின் செறிவை அதிகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

பாதிப்புகள் என்ன?
 

நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகமாக இருக்கும் போது அதனை தொடர்ச்சியாக குடிநீராக பயன்படுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

"ரத்த நாளங்களை விரிவடைய வைக்கும் தன்மை நைட்ரேட்டுக்கு உள்ளது," என்று கூறுகிறார் பொது மருத்துவர் க்றிஸ்டியான்ஸ் டையானா.

 

"இதன் காரணமாக, மக்களுக்கு தலைவலி, மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், ரத்த அழுத்தம் குறைந்து, இதய துடிப்பை அதிகரிக்கும்," என்று கூறுகிறார் அவர். மேலும், ''இந்த நீரை தொடர்ச்சியாக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவை ஏற்படும்." என்று அவர் எச்சரிக்கிறார்.

 

மேற்கொண்டு பேசிய அவர், நைட்ரேட் அதிகமுள்ள நீரை பருகும் போது குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறார். "குழந்தைகள் மத்தியில் ப்ளூ பேபி சிண்ட்ரோம் என்ற நோய் ஏற்படக்கூடும். அந்த நோய் தாக்கினால் அவர்களின் தோலின் நிறம் நீலமாக மாறிவிடும்," என்றும் தெரிவித்தார் அந்த மருத்துவர்.

 

உடல் நலக் கோளாறுகளோடு விவசாயத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு.

 

"விவசாயம் செய்யப்படும் ஒரு பயிர் நல்ல மகசூலை அளிக்க பல விஷயங்கள் தேவைப்படுகிறது. அதில் நைட்ரஜன் அளவும் ஒன்று. நைட்ரஜன் பற்றாக்குறை காரணமாக அம்மோனியா நைட்ரேட், கால்சியம் நைட்ரேட் போன்ற ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இன்று இந்த பயன்பாடே நிலத்தடி நீரில் அதிக அளவிலான நைட்ரேட்டுக்கு வழிவகை செய்துள்ளது," என்று விவரிக்கிறார் பிரபாகரன்.

 

மேற்கொண்டு பேசிய அவர், நைட்ரேட்டின் அளவு அதிகமாக இருப்பது பயிர் முதிர்ச்சி அடையும் காலத்தை குறைக்கும். அது பிறகு பயிரின் தரத்தை குறைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படும் என்பதையும் தெரிவிக்கிறார் பிரபாகரன்.

 

கவனிக்க வேண்டிய மேலும் சில அம்சங்கள்
 

தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் ராமநாதபுரத்தில் நிலத்தடி நீரில் க்ளோரைடு அதிகரித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

மேலும் தருமபுரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் தொழிற்சாலைகளின் பயன்பாடுகள் காரணமாக நிலத்தடி நீரில் க்ளோரைடு அதிகரித்துள்ளது.

 

கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், குஜராத், மற்றும் மகாராஷ்டிரா, கடல் நீர் நிலத்தடி நீரில் கலக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. நிலத்தடியில் நன்னீர் அளவு குறையும் போது, கடல் நீர் உட்புகுந்து, நிலத்தடி நீரில் கடல் நீர் அளவை அதிகரிக்கிறது.

 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி, மோசமான நிலைக்கு மாறியுள்ள மண்டலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளது. அங்கு பெறப்பட்ட மாதிரிகளில், 30 ppb அளவைக் காட்டிலும் கூடுதலாக யுரேனியம் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.